காவிரியாற்றால் இயற்கையாக அமைக்கப்பட்ட அரங்கத்தில்- ஆற்றுப்பிரிவுகள் அமைத்திட்ட தீவு போன்ற நிலப் பகுதியில்- திருவரங்கம் அமைந்துள்ளது. வைணவர்களால் ‘கோயில்’ எனப் போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாதர் ஆலயம் தொன்மைச் சிறப்பும் பெருமையும் கொண்டது. பிராகாரங்கள் ஆலயத்தைச் சுற்றி ஏழு பிராகாரங்கள் உண்டு. அவற்றுள் முதல் பிராகாரத்திற்கு ‘அடையவளைந்தான்’ என்ற பெயர் உளது; அது சுமார் 6 கி.மீ. சுற்றளவு உடையது. அந்த ஆலயத்திற்குத் தென்புறத்து வாயில்தான் முதன்மையானது. முதல் பிராகாரத்தின் தென் புறத்துள்ள வாயிலுக்கு ‘ராய கோபுரம்’ என்ற பெயர் உள்ளது; அது மிக விசாலமானது. மண்டபங்கள் இந்தப் பிராகாரத்தில் சில சன்னிதிகளும் பெரிய ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன. அம்மண்டபத்தில் சிற்பங்கள் சிறப்பாக அமையவில்லை. ஆயினும், பார்வைக்கு எடுப்பான தோற்றம் உடையன. இவ்வாறே ஏனைய பிராகாரங்களும் பற்பல சன்னிதிகளாலும் மண்டபங்களாலும் சூழப்பட்டிருப்பதைக் காணலாம். உள்பிராகாரத்துள் அருள்மிகு அரங்கநாதர் பள்ளிகொண்ட திருக்கோலத்தில், கருவறையில் காட்சியளிக்கக் காணலாம். கருவறை மேலுள்ள பொன்விமானம் பிரணவாக்ருதி விமானம் எனப்படும். கட்டடக் கலை சிறப்பு கருங்கல் எடுக்க அருகே சிறு குன்றோ, இயந்திர வசதியோ இல்லாத முற்காலத்தில் அமைக்கப்பெற்ற இப்பெரிய திருக்கோயில், சிறந்த கட்டுக் கோப்புடன் கூடிய பலவகைக் கட்டடங்களும் சிற்பப்படைப்புகளும் கொண்டு, வனப்பு மிகு கலைக் கூடமாகவே திகழ்கின்றது. நகரத்தையே வளைத்துப் போட்ட நிலையில், ஏழு பிராகாரங்களும் இருபத்தொரு கோபுரங்களும், உயரமான தூண்களுடன் கூடிய மண்டபங்களும் பூலோக வைகுண்டம் என நினைக்கச் செய்து வியப்பிலாழ்த்தும். புகழ்மிக்கது இந்த ஆலயத்தின் கட்டடக் கலைத் திறமையையும் சிற்ப நேர்த்தியையும் காணும் நம் நாட்டவரேயல்லாமல், வரலாற்று வல்லுநர்களாகிய பர்கூசன் (Fergusson), ஹாவல் (Havell) முதலியோர் புகழ்ந்து தம் நூல்களில் அவற்றைப் பதிவு செய்துள்ளனர். திருவரங்கப் பெருமான் நிலை கொண்டிருக்கும் இத்திருக்கோயில் வைணவர்களுக்குச் சமயக் கோட்டை போன்றுள்ளது. வேணுகோபாலன் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி, சேஷராயர் மண்டபம், பரமபதவாசல் முதலியவை ஆலயத்திற்குப் பெருஞ் சிறப்பினை யுண்டாக்குபவை. திருவரங்கத்தில் தெற்குக் கோபுரவாசல், ஏறக் குறைய 300 ஆண்டுகளுக்கு முன் அச்சுத தேவராயர் என்பவரால் கட்டத் தொடங்கப்பட்டுத் திருப்பணி முற்றுப் பெறவில்லை; கல் காரத்தோடு மொட்டைக் கோபுரமாக நின்று விட்டது. அச்சுத தேவராய மன்னரால் தொடங்கப்பட்டு நிறைவு பெறாத மொட்டைக் கோபுரத்தை 13 நிலைகள் கொண்ட வானளாவிய கோபுரமாகக் கட்டி முடித்த பெருமை அகோபிலமடம் ஜீயர் சுவாமிகளைச் சாரும். இந்தத் தெற்குக் கோபுரத்தின் உயரம் 235 அடி. கல் காரத்தி்ன் நீளம் 167 அடி, அகலம் 97 அடி ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் இஃது என்று புகழுமளவிற்குக் கட்டடப் பணிகள் நிறைவேறின. பல்வேறு காலங்களில் பல்வேறு மன்னர்களாலும் அருளாளர்களாலும் செய்து முடிக்கப்பட்ட சீரிய பணியே திருவரங்கக் கோயிலமைப்பாகக் காட்சியளிக்கிறது. |