5.0 பாட முன்னுரை

    தமிழ் நாட்டில் கட்டடக் கலை பற்றிய வரலாற்றைத் தெரிந்து கொள்ளப் பழங்காலக் கட்டடங்கள் நம்மிடையே இல்லை. எனினும், எந்தத் தெய்வங்களையெல்லாம் வழிபட்டு வந்தனர் என்பது பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு சிறுதெய்வக் கோயில்கள் எப்படியிருந்துள்ளன என்பது பற்றி வரலாற்று அறிஞர்கள் சில குறிப்புகளைத் தந்துள்ளனர். அத்தகைய குறிப்பினை அடிப்படையாகக் கொண்டும், இக்காலத்தில் காணப்படும் சில தெய்வங்களையும் கோயில்களையும் கள ஆய்விலே கண்டு திரட்டிய செய்திகளைக் கொண்டும் இப்பாடம் எழுதப்பட்டுள்ளது.

    சிறுதெய்வக் கோயில்களை ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் அமைத்தமையால் சுற்றுப்புறத்தூய்மை பாதுகாக்கப்படுகிறது என்பது நன்கு விளக்கப்படுகிறது.

    நாகர் தாக்கம், மாரியம்மன், காளியம்மன், இயக்கி முதலிய பெண் தெய்வங்களும், ஐயனார், சுடலைமாடன், கருப்பசாமி, முனீசுவரன் முதலிய தெய்வங்களும் ஊர்ப்பாதுகாப்பிற்குத் துணை நிற்கும் திறம் தக்கவாறு விளக்கப்படுகிறது. கட்டடக் கலை வாயிலாகப் பண்பாடு நாகரிகம் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் அமைந்துள்ளது.