5.1 சிறு தெய்வக் கோயில்களின் தோற்றம்

    இயற்கைச் சீற்றங்களுடன் போராடிய மனிதன் தன் பாதுகாப்பிற்காக என்ன செய்யலாம் என்று எண்ணத் தொடங்கினான். அந்த எண்ணம் படிப்படியே வளர்ந்து இயற்கைச் சக்திகளிடம் அஞ்சும் சூழல் உருவாயிற்று. தான் வாழுமிடத்திற்கு வழி கண்டதும் தன் வழிபாட்டிற்குரிய தெய்வங்களுக்கும் இருப்பிடம் அமைக்க முற்பட்டான். சுற்றுப்புறச் சூழலும் அவனது முயற்சிக்குத் துணை நின்றது.

    பொதுவாகக் கட்டடக் கலைக்கு அடிப்படைப் பரிமாணங்களாக நீளம், அகலம், பருமன் ஆகியவை தேவைப்படும். பழங்கால மனிதன் எப்படி முறையாகக் கட்டடம் கட்ட வேண்டுமென்று திட்டமிட்டு்ச் செயற்படவில்லை. அஃதாவது, ஆகம விதிப்படி நிலத்தைத் தேர்ந்தெடுப்பதிலோ , நிலத்தைச் சோதிப்பதிலோ , திசையைக் குறிப்பதிலோ, கால நேரம் பார்ப்பதிலோ நாட்டம் செலுத்தவில்லை; அவை அவனுக்குத் தெரியாது. மலைச்சாரற் பகுதியிலோ, காடுகளையொட்டிய பகுதியிலோ குடிசைபோட்டுக் கொண்டு வாழ்ந்தான். தன் உறவினர்களுடன் வாழ்ந்து வருகையில் அம்மை, வயிற்றுப்போக்குப் போன்ற நோய்கள் தெய்வத்தால்தான் உண்டாகின்றன என நினைத்தான். இயற்கைச் சக்திகள் ஒருபுறமிருக்க, இறந்து பட்ட முன்னோர்களின் ஆவிகளையும் திருப்திப்படுத்தினால்தான் கவலையின்றி வாழமுடியுமென்று எண்ணினான். இவ்வாறான எண்ணங்களின் விளைவாகச் சிறுதெய்வக் கோயில்கள் கட்டினான். கல்லையோ சூலத்தையோ வேலையோ தெய்வமெனக் கோயில்களில் நிறுவி, எருமை, ஆடு, கோழி முதலியவற்றை உயிர்ப்பலியாகக் கொடுக்க முற்பட்டான்; அவற்றை வெட்டுவதற்குப் பலிபீடம் உண்டாக்கினான்.

  • பல தெய்வங்கள்

  •     இவ்வாறான கிராம தேவதைகள் பல அமைப்புகளில் இருந்ததால் அவற்றைக் கலைச் செல்வங்கள் என்று கூறமுடியாது. தம் குடும்பத்தில் இள வயதில் இறந்துபோன பெண்களும் தெய்வங்களாகக் கருதப்பட்டதால் அவர்களுக்கும் வழிபாடு செய்யத் தலைப்பட்டனர். இவ்வாறெல்லாம் பல நோக்கங்களில் சிறுதெய்வங்கள் பெருகின. புராணச் செய்திகள் சிற்றூர்ப்புற மக்களின் செவிகளில் எட்டியதும், அந் நிலையிலும் சில தெய்வங்களை நிறுவி மனநிறைவு கொண்டனர். எனவே, வீட்டுத் தெய்வம், குலதெய்வம், இனத்தெய்வம், புராண அடிப்படையிலான தெய்வம் எனச் சிறுதெய்வங்களின் எண்ணிக்கை வளர்ந்தது. அவற்றுக்கெல்லாம் தோப்புகளி்லும் ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் சிறு கோயில்கள் கட்டப்பட்டன. சுருங்கக் கூறின், கிராமத் தெய்வங்களின் கோயில்கள், வளர்ந்த நிலையில் செங்கற்களால் கட்டப்பட்டுத் தென்னங்கீற்றாலோ, பனையோலைகளாலோ வேயப்பட்டன; அவை குறிப்பிடத்தக்க கட்டடக் கலை அமைப்பைக் கொண்டு விளங்கின எனக்கூற முடியாது. ஆனால், சிற்றூர்ப்புறப் பாதுகாப்பிற்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் ஆக்கம் தேடின எனக் கொள்ளலாம்.

    5.1.1 கோயிலமைப்பு

        நாட்டுப்புறவியல் அறிஞர்கள் கூறும் சில செய்திகளை அறிந்த பின், சிறுதெய்வக் கோயில்கள் பற்றி விளக்கமாகக் காண்போம்.

  • அறிஞர்கள் கருத்து

  •     நாட்டுப்புற மக்கள் தம் முன்னோர் மீது கொண்ட நம்பிக்கையால் தம் இல்லங்களையும், வழிபடும் தெய்வங்களையும், அந்தத் தெய்வங்கள் உறையும் கோயில்களையும் மனத்திற்கொண்டு, வழிபாட்டிற்குரிய சடங்குகளைப் பின்பற்றினர். இந்தக் கோணத்தில், நாட்டுப்புறக் கட்டக்கலை ( Folk architecture ) ஒருவகையில் மரபுவழிப்பட்ட கட்டடக் கலையெனலாம். மேலை நாட்டில், அறிவு சார்ந்த கட்டடக் கலை (Academic architecture), நாட்டுப்புறக் கட்டடக் கலை என இருவகையில் ஆராய்ந்து, அறிவு சார்ந்த கட்டடக் கலை உயர் வகுப்பினர்க்குரியது என்று அந்தக் கலையைப் பெரிதும் போற்றுகின்றனர். நாட்டுப்புறவியல் கட்டடக் கலையில் பெருமளவில் ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை என்றும் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்திய நாட்டில், சிறப்பாகத் தமிழ்நாட்டில் நாட்டுப்புறவியல் கட்டடக்கலை பற்றிச் சிறப்பாக ஆராய்ந்து வருகின்றனர்.

  • கோயிலமைப்பு

  •     தமிழகத்தில் நாட்டுப்புற மக்கள் தாம் வசிக்கும் வீடுகளைக் கட்டுவதற்குத் தாமே இவ்வாறு அமையவேண்டுமென்று தீர்மானித்துச் செயற்படுத்தினர். தமிழகத்தில் வீடு கட்டுவதற்குத் திட்டமிடுகையில், தரையமைப்பு கூரை ஆகியவற்றின் அடிப்படையை மூன்றாக வகைப்படுத்திக் கொண்டனர; அவை,

    (1) நீண்ட சதுரத் தரையமைப்பும் மட்டமான கூரையும்
    (2) நீண்ட சதுரத் தரையமைப்பும் சாய்வான கூரையும்
    (3) வட்டமான தரையமைப்பும் கூம்புவடிவக் கூரையும்

    என்பன. இக் கட்டட அமைப்பே சிறுதெய்வக் கோயில்களுக்கும் பொருந்தும்.

  • அமைப்பின் வளர்ச்சி

  •     சிற்றூர்ப் புறங்களி்ல், பரிணாம வளர்ச்சி காரணமாக இக்காலத்தில் படிப்படியாகச் சிறுதெய்வக் கோயில்களில் பலமண்டபங்களைக் கட்டி, கோயில் வளாகத்தை விரிவுபடுத்திக்கொண்டே செல்கின்றனர்; அவ்வாறு கட்டப்படும் நிலையிலும் மரபையும் நம்பிக்கையையும் விட்டுக் கொடுக்காமல், தெய்வம் நிறுவப்பட்ட கருவறையில் கூரைவேயாமல் விட்டு விடுதலும் உண்டு. கூரையில்லாக் கோயிலுக்குத் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

    5.1.2 அகப்பாதுகாப்பும் புறப்பாதுகாப்பும்

        சமுதாயத்தில் என்று சமயவுணர்வு தோன்றியதோ அன்றே தூய்மை நோக்கில் அகப்பாதுகாப்பும், சுற்றுப்புறச் சூழலுடன் புறப்பாதுகாப்பும் தேவை என்பது உணரப்பட்டது. இந்த நோக்கில் இந்துமதக் கிளைச் சமயங்களில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகை நோக்கிலும் தூய்மை வலியுறுத்தப்பட்டது. பெருமளவில் ஆலயங்கள் எடுக்கப்பட்டு, அவற்றிலே இந்த மூவகைத் தூய்மையும் பராமரிக்கும் சிந்தனை தோன்றியது ; செயற்படுத்தும் நடைமுறையும் வகுக்கப்பட்டது. பெருந்தெய்வக் கோயில்களுக்கான நடைமுறைக் கிரியைகள் சிறுதெய்வக் கோயில்களிலும் ஓரளவே பின்பற்றப்பட்டன. உயிர்ப்பலியிடும் வழக்கத்தில் சில சிறு தெய்வக் கோயில்களில் மாற்றஞ் செய்யக் கிராமத்தார் பலர் உடன்படவில்லை.

        மூர்த்தியாகிய சிறுதெய்வச் சிலைகள் மரத்து அடிப்பகுதியில் பீடம் அமைத்து நிறுவப்பட்டுப் பூசாரிகளால் முறையான வழிபாடுகளையும் படையல்களையும் பெற்றன. மரத்தின் கீழ், வழிபடுதற்குரிய சிலையிருப்பதால், மக்கள் தம்மையறியாமலேயே தூய்மை காத்தனர்; மரத்தின் அருகே சிறுநீர் கழிப்பது கூடப் பாவம் என்றும், சுவாமி அதற்குரிய தண்டனையைக் கொடுத்துவிடும் என்றும் அஞ்சினர்; எப்படியோ ஒருவகை அச்சவுணர்வால் பக்தியும் வளர்ந்து வருகின்றது ; சுற்றுப்புறத் தூய்மையும் பாதுகாக்கப்படுகிறது. இதே நோக்கத்தைப் பின்பற்றியே ஆற்றங்கரையோரங்களிலும், குளக்கரையிலும், வேப்பமரம், அரசமரம் போன்ற மரத்து அடியிலும் பிள்ளையார், கிராம தேவதைகள் போன்ற தெய்வச் சிலைகளை மரத்தாலோ கல்லாலோ சுதையாலோ அமைத்து வழிபட முற்பட்டனர். மழையிலும் காற்றிலும் அவை பாதிக்கப்படுவதைக் கண்டு, மரத்தின் அடியிலோ அருகிலோ சிறுதெய்வங்களுக்குக் கோயில்கள் அமைக்கலாயினர். இக்காலத்திலும் கண்மாய் வெட்டினால் அதன் கரையில் ஐயனார் சிலை நிறுவுவதைத் தென்மாவட்டங்களில் காணலாம்.

        குன்றுகளிலும் மலைச்சாரல்களிலும் காடுகளிலும் சிறுதெய்வக் கோயில்களை அமைப்பதால், தூய்மை பாதுகாக்கப்படுவது ஒருபுறமிருப்பினும், அங்குச் சென்று வருபவர்களுக்கு மருத்துவ மூலிகைக் காற்றால் உடல் நலமும் பாதுகாக்கப்படும் வாய்ப்பு உண்டாகிறது. எனவே, கோயிலை ஒட்டிவாழும் குடிமக்களும், குடிமக்களை ஒட்டிய கோயிலும் நன்கு அமைந்திடச் சிறுதெய்வக் கோயில்களும் துணைநிற்கின்றன எனலாம்.

    5.1.3 வழிபாட்டின் வளர்நிலைகள்

        சிறுதெய்வ வழிபாடு எக்காலத்தில் தோன்றியது என்று உறுதியாகக் கூற முடியாது. ஆதி மனிதன் உணவு, உறையுள், உடை ஆகிய அடிப்படைத் தேவைகளை ஓரளவு நிறைவு செய்த நிலையிலும் கூட, அவன் அச்சமன்றி வாழ இயலவில்லை. தன் கையில் வில், அம்பு, வாள், ஈட்டி முதலிய படைக்கருவிகளை வைத்திருந்துங்கூட, இடி, மின்னல், கடுங்காற்று, கும்மிருட்டு முதலிய இயற்கைச் சக்திகளிடத்தும், கொடிய விலங்குகள், நச்சுப்பாம்புகள் முதலிய உயிர்களிடத்தும் ஒருவகை அச்சவுணர்ச்சியுடனே பழகி வரலானான். அந்நிலையில் எல்லாவற்றுக்கும் மேற்பட்ட ஒரு சக்தி இருந்து வருவதையுணர்ந்தான்; அந்தச் சக்தியிடம் தன் சமாளிக்குஞ் சக்தி தொடர்ந்து எடுபடாது என்பதையும் உணர்ந்தான். அந்நிலையில் இயற்கைச் சக்தியை வழிபடத் தொடங்கியதே அவனது தொடக்ககால பக்தியாகும். மேலும், தன்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் வயது முதிர்ச்சியாலோ, விபத்தாலோ இறந்துபட்டநிலையில், அவர்கள் ஆவிகளாகத் திரிகிறார்களோ என்ற ஊகமும் நம்பிக்கையாக மாறியது. இத்தகைய பின்னணியில், மழை, இடி, மின்னல், நாகப்பாம்பு, பாம்புப்புற்று முதலிய பலவற்றிடத்தும் தெய்வ நல ஆற்றலிருப்பதாகவும் நம்பி, அவற்றின் அடையாளமாக வேல், சூலம், நாகம் முதலியவற்றின் சிலைகள் மரத்து அடியிலும் பிற இடங்களிலும் நிறுவப்பட்டன. பிறகு, அவற்றைப் பாதுகாக்கக் கட்டிய குடிசைகளே கோயிலாயின.

        இஃது ஒரு புறமிருக்க, வடவர் பண்பாடு பழக்கவழக்கங்கள், தமிழர் பண்பாடு பழக்கவழக்கங்களுடன் கலப்புற்ற நிலையி்லே, வேதம், ஆகமம் முதலியவற்றில் நம்பிக்கை ஏற்பட்டது. திருமால், முருகன், இந்திரன், வருணன், காளி ஆகிய ஐவகை நிலத்துத் தெய்வங்களுடன், மேலும் சில தெய்வங்களும் கோயில்களில் நிறுவப்பட்டு (பிரதிட்டை செய்யப்பட்டு), கோயிற் கிரியைகள் பலவாயின. பெருந்தெய்வ வழிபாடு ஒருபக்கமும், சிறுதெய்வ வழிபாடு மற்றொரு பக்கமுமாக, நூற்றுக்கணக்கான தெய்வங்கள் வழிபாடுகளைப் பெற்றன; கோயில்களிலும் அவை நிறுவப்பட்டன. எனினும், வழிபாட்டுச் சடங்கு முறைகளில் ஒவ்வொன்றும் தன் தனித்தன்மையைக் காத்துக் கொள்ள முயன்று வருதலை வரலாற்று ஏடுகள் பதிவு செய்து காட்டி வருகின்றன. கட்டடக் கலை நோக்கில் அவை பற்றி ஓரளவு காண்போம்.

    5.1.4 பெண் தெய்வக் கோயில்கள்

        நாட்டுப்புறத் தெய்வங்களுள் ஆண் தெய்வங்களை விடப் பெண் தெய்வங்களே தமிழ்நாட்டில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

        சப்தமாதர்கள், சப்தகன்னியர், மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், பிரத்தியங்கராதேவி, சேட்டை (ஜேஷ்டாதேவி), கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி முதலிய ஆற்றுத் தெய்வங்கள், திரௌபதியம்மன், தீப்பாய்ந்தாளம்மன், இரேணுகாதேவி, மாதங்கி, காட்டேறி முதலிய பல தெய்வங்களுக்கும் கிராமங்களிலும், சில பேரூர்களிலும் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு தெய்வத்திடத்தும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பொறுத்தே கோயிற் கட்டடங்களின் விரிவும் சுருக்கமும் அமைந்தன.

        கண்ணகியைத் தெய்வமாக்கிய நிலையில், அவள் பல பெயர்களில் கோயிலிலும் கோயில் வளாகங்களிலும் இடம் பெற்றுள்ளாள்; எடுத்துக்காட்டாகத் திருவொற்றியூர் சிவன் கோயிலில் வட்டப்பாறையம்மனைக் கண்ணகித் தெய்வமென்றே ஊர்மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

        வடநாட்டுக் காப்பியமாகிய மகாபாரதத்தில், பஞ்சபாண்டவர்களின் பத்தினியாகத் திரௌபதி வருவதைப் பலரும் அறிவர். சமய நோக்கிலும் தத்துவ நோக்கிலும் திரௌபதியாகிய பாஞ்சாலி, தமிழ்ப் பெருமக்களால் பக்தியார்வத்துடன் கொண்டாடப்படுகிறாள். அவளுக்கு அமைந்துள்ள கோயிற்கட்டடங்களும் பல ஊர்களில் சிறப்பாக அமைந்துள்ளன.