5.2 நாகர் - புற்றுவழிபாட்டுக் கோயில்கள்

    நாகர் வழிபாடு, புற்றுவழிபாடு ஆகிய இரண்டையும் ஊன்றி நோக்கினால், இவை தொடர்பாக அமைக்கப்பட்ட சிலைகளும் கோயில்களுமாகப் பலவற்றைக் காண இயலும். புற்றுவழிபாட்டைச் சாதாரணமாகக் காணின் சிற்றூர்ப்புற மக்கள் வழிபாடாகத் தோன்றலாம். ஆனால், தத்துவங்கள் பல விரிதற்கும், புராணங்கள் பல எழுவதற்கும், கோயில்கள் பல எடுக்கப்படுவதற்கும் அடிப்படையாக ‘நாகர் தாக்கம்’ (Impact of Nagas) உள்ளது. ‘Serpent worship’ - நாக வழிபாடு என்று ஒரு நூலே வெளியாகி உள்ளது என்பது கொண்டு இதன் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம். இந்தியப் பெருநாட்டிலும் இலங்கையிலும் சமய வாழ்வில் நாகர்தாக்கம் தன் முத்திரையைப் பதித்துள்ளது.

5.2.1 மாரியம்மன் வழிபாட்டுக் கோயில்கள்

    சிற்றூர்ப் புறத் தெய்வங்களைப் பொறுத்த வரையில் மாரியம்மனுக்குத் தனிச்சிறப்பான இடமுண்டு ; புற்றுக்களையே மாரியம்மன் கோயிலாக நினைத்து வழிபடுபவர்கள் உண்டு.

    தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் பிள்ளையார் கோயிலும் மாரியம்மன் கோயிலும் இல்லாத குக்கிராமத்தைக் கூடக் காண முடியாது. ஒரே ஊரில் பல மாரியம்மன் கோயில்கள் அமைந்திருந்தால், ஒவ்வொன்றுக்கும் மூர்த்திகரத்தைப் பொறுத்தும் அஃது அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தும் தெருவைப் பொறுத்தும் பெயரிட்டழைப்பர். எனினும், தென்னாட்டை, அதிலும் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலும் சமயபுரம் மாரியம்மன் கோயில், பண்ணாரிமாரியம்மன் கோயில், ஒழுகமங்கலம் மாரியம்மன் கோயில், திருவேற்காடு மாரியம்மன் கோயில், வலங்கை மாரியம்மன் கோயில், புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில், திருக்கண்ணபுரம் மாரியம்மன் கோயில், திருவாலங்காடு வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயில் (திருவாவடுதுறைக்கு அருகில்) முதலியவை முக்கியமானவை.

    மாரியம்மன் கோயில்களில் மாரியம்மன் தலை மீது ஏழு நாகங்கள் குடைபிடிப்பது போல் காட்டப்பட்டிருக்கும் ; அதன் தத்துவப் பொருளாக ஏழு உலகங்களும் அவளது கட்டுப்பாட்டில் சேவை செய்கின்றன என்று கூறுவர்.

    மாரியம்மன் கோயில்களைப் பொறுத்த வரையில் பல வகையில் சிந்திக்க வேண்டிய செய்திகள் உள்ளன.

    மாரியம்மனுக்கும் நாகம் உறையும் புற்றுக்குமுள்ள தொடர்பினைப்போல் மாரியம்மனுக்கும் வேப்பிலைக்கும் நிரம்பத் தொடர்பு உண்டு ; எனவே, ‘வேப்பிலைக்காரி’ என்றும் அம்மனை அழைப்பர்.

    தேவைக்கேற்பக் கோயிற் கட்டடங்கள் பலவாகக் கட்டப்படும். மாரியம்மனை ரேணுகாதேவி என்றும், கண்ணகி்யின் மறுவடிவம் என்றும் அறிஞர்கள் பலவாறு இனங்கண்டு கூறுவர். வேப்பிலைக்காரியாகிய மாரியம்மனுக்கும் உயரிய தத்துவம் உண்டு. மாரி எனும் மழைக்கு நாயகியாகிய அம்மன், பூமியின் சுழற்சிக்கேற்ப மழைபெய்வதேபோல், அருள் மழை பொழிவாள் என்பர். மழை இயற்கையின் சுழற்சி வட்டத்தைக் குறி்ப்பதேபோல், வேப்பிலையடிக்கையில் சுழற்சியும் வட்டமும் அமைவதால் மாரியம்மனுக்கு அஃது உவப்பாகும் என்று கூறுவர். மேலும், வேப்பிலையைக் கையிலேந்திக் கரகத்தைத் தலையிலேந்திச் சுழன்று ஆடுவதும் அம்மனுக்கு உவப்பைத்தரும் என்பர். ஒவ்வொரு மாரியம்மனுக்கும் நடைபெறும் பூச்சொரிதல், தீமிதி போன்ற திருவிழாக்களுக்கு, மக்கள் திரளுவர். அதற்கேற்பக் கோயிலிலும் மகாமண்டபம் முதலிய மண்டபங்களும் திருச்சுற்றும் சன்னிதியமைப்பும் விசாலமாக அமைக்கப்படும். எடுத்துக்காட்டாகச் சமயபுரம் திருக்கோயிலைக் காண்கையில், சிறுதெய்வமாகிய அருள்மிகு மாரியம்மன் மிகப் பெருந்தெய்வமாகவும், கோயிலும் அதற்கேற்பக் கட்டட வசதிகளைக் கொண்டதாகவும் விளங்குவதைக் காணலாம்; திருவேற்காடு மாரியம்மன் கோயிலையும் பண்ணாரியம்மன் கோயிலையும் காண்கையில் கட்டட வசதிகள் பலவற்றைப் பெற்ற பெருங்கோயில் என்பதே நினைவிற்கு வரும்.

5.2.2 நாகர் வழிபாட்டுக் கோயில்கள்

    தமிழ்நாட்டுச் சமய வாழ்க்கையில் பல தெய்வ வழிபாடு உண்டு. இந்து மதக் கிளைச் சமயங்களாகிய சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம் ஆகியவற்றில் நாகர் தாக்கம் உண்டு. இந்தப் பூமியையே ஆதிசேடன் என்ற நாகம் தாங்கிக் கொண்டிருப்பதாகக் கூறுவது புராண மரபு.

    சிவபெருமான் நாகங்களையே அணிகலன்களாகப் பூண்ட நாக அணியான்; திருமாலோ ஆதிசேடனாகிய பாம்பை அரவணையாகக் கொண்டவன்; சக்தியின் கூறுகளாகவுள்ள சக்திகள் பலவும் நாகங்களை அணியாகக் கொண்டவை. விநாயகர் நாகத்தை உதரபந்தமாகக் கொண்டவர். திருமுருகன் மயிலின் காலில் நாகம் அடங்கிக் கிடப்பதைக் காணலாம்.

    சக்தியின் அருளாட்சியைப் புலப்படுத்தும் வகையில், செங்கற்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் ‘நெல்லிவனம்’ எனும் திருத்தலத்தில் வேண்டவராசியம்மன் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் அம்மனை நாககன்னியர் எழுவர் கந்தருவ உலகத்திலிருந்து வந்து வழிபட்டு அருள் பெற்றனர் என்பது புராணக் குறிப்பு. இந்தக் கோயிற் கட்டடம் கலைச் சிறப்புக் கூறுகள் கொண்டது.

    திருச்செங்கோட்டு வேலவன் மலையில், மலையேறும் வழியில் மிக நீண்ட நாகச்சிலையும், மலைக் கோயிலினுள்ளே மிகப் பெரிய வடிவில் நாகம் சுருட்டிக் கொண்டு படமெடுத்த நிலையில் காட்சியளிப்பதும் காணத்தக்கவை. திருச்செங்கோட்டு மலைக்கோயில் கட்டடக் கலைக்கூறுகள் நிரம்பக் கொண்டதாகும். பேரையூர் நாகநாத சுவாமி கோயில் மண்டபங்கள் மதிற் சுவர்கள் எல்லாவற்றிலும் நாகர் வடிவங்கள் அமைந்துள்ளன.

    இக்காலத்தில் சங்கரன் கோயில் என்று அழைக்கப்படும் சங்கரநாராயணர் கோயில், 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உக்கிரபாண்டியன் எனும் பெரு மன்னனால் கட்டப்பட்டது. தமிழகத்திலே வேறெங்கும் காண வியலாத சில சிறப்புகள் இந்தக் கோயிலில் காணலாம். இங்குள்ள நாகராஜா கோயிலில் பாம்புப் புற்று ஒன்று உள்ளது. அதனைச் சுற்றியே சங்கர நாராயணர் கோயில் கட்டப்பட்டுள்ளது. நாகராசர் கோயிலுக்கு வழிபாடு நி்மித்தம் வருகின்ற பலர் பாலும் பழமும் வைத்து வழிபடுவதும், புற்று மண்ணைச் சரும நோய்தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்துவதும், புற்றுமண்ணைச் சிறிது எடுத்து அருகிலுள்ள தொட்டியில் போடுவதும் செய்வர். இவ்வாறான வசதிகளுக்கேற்பக் கோயிற்கட்டட அமைப்பு நன்கு அமைந்துள்ளது; கட்டடப் பராமரிப்பும் நன்கு உள்ளது.

    பாம்புக் கோயில் என்றே தமிழர்கள் போற்றி வழிபடும் ஆலயம் உள்ள நாகர் கோயிலும், நாகர்களால் புகழ்பெற்ற நாகப்பட்டினமும் நாகர்தாக்கம் கொண்டவை.