5.4 பிற சிறு தெய்வக் கோயில்கள்

    தமிழ்நாடெங்கும் சிற்றூர்ப்புறக் கோயில்களில் பெண் தெய்வங்கள் பல காணப்படுவது ஒரு புறமிருக்க, அவற்றுக்கு அடுத்த நிலையில் ஆண் தெய்வங்களும் மக்களைக் காத்தருள் புரிவதில் முன் நிற்கின்றன. சிற்றூர்ப் புறத் தெய்வங்களைக் பற்றி இக்காலத்தில் நாட்டுப்புறவியல் அறிஞர்கள் ஆராய்ந்து விளக்கம் தரமுயல்கின்றனர். பண்பாட்டு நோக்கில் கட்டடக்கலைக் குறிப்புகளும் கிடைத்தால் அவை பெரிதும் பயன்படும். இத்தொடர்பில் சில நூல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

5.4.1 சுடலைமாடன் கோயில்கள்

    குமரி மாவட்டத்தில் பல சிறு கோயில்களில் காணலாகும் சுடலைமாடன் பற்றிச் சில செய்திகளைக் காண்போம்.

    மாடுகளுக்குப் பாதுகாப்பாக அமைந்த தெய்வமே மாடன் என்பதாகவும், அந்த மாடன் சுடலைக் கருகே கோயில் கொண்ட காரணத்தால் சுடலை மாடன் எனப் பெயர் வந்ததாகவும் கூறுவர்.

5.4.2 கருப்பசாமி கோயில்கள்

    கருப்பசாமி எனும் தெய்வத்தையும் கோயிலில் நிறுவிக் காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். நகரத்தார் பெரு மக்கள் தாம் வாழும் பகுதியில் பக்தியுடன் அந்தத் தெய்வத்துக்குக் கோயில் கட்டிப் பூசை வழிபாடு நடத்துகின்றனர். அது நிற்க, ஆலமர் கடவுளாகிய தட்சணா மூர்த்தியே முனீசுவரராக மாற்றம் பெற்றுள்ளார் என்பது அறிஞர்கள் கருத்து. இது சிந்திக்கத்தக்கது.

5.4.3 முனீசுவரர் கோயில்கள்

    பல சிற்றூர்களில் முனீசுவரர் அச்சுறுத்தும் தெய்வமாக விளங்கிக் கொண்டிருப்பினும், அத்தெய்வத்தைப் போற்றிக் கொண்டாடுவதால் தமக்குப் பாதுகாப்பு ஏற்படுவதாக நம்புகின்றனர; சமயமே நம்பிக்கையைப் பொறுத்தது தானே !

    நாமக்கல் மாவட்டம் (பரமத்தி வேலூர் வட்டத்திலுள்ள) சேடர் பாளையத்திற்கு அருகில் மலிமுனீசுவரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயச் சிறப்பைக் குறித்து ஆ. கந்தன் எழுதுகையில், “சிறிய அளவில் கட்டலாமென்று ஆரம்பித்த முனீசுவரர் சிலை 64 அடி உயரத்தில் வந்து முடிந்தது. கோபமாகவும் இல்லாமல் சிரித்தவாறும் இல்லாமல் நடுத்தரமான நிலையில் முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டியபடி அருள் பாலிக்கிறார். முனீசுவரர் கத்தியின் உயரம் 27 அடி. அக்கத்தியின் எடை ஒரு டன் ஆகும். இந்தச் சிலையி்ன் மொத்த எடை சுமாராக 150 டன் இருக்குமெனக் கூறுகின்றனர். கை விரல்கள், கண், காது, கால், மீசை என ஒவ்வொன்றையும் மிக நுணுக்கமாக அமைத்துள்ளனர்........ இந்தியாவிலேயே இதுபோல முனீசுவரருக்கு இவ்வளவு உயரச்சிலை இல்லையென்று சொல்வதோடு இல்லாமல் மிகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கிறது” எனக் குறிப்பிடுவது மனங் கொள்ளத்தக்கது. ஆனால், எந்தக் காலத்திலிருந்து முனீசுவரர் வழிபாடு கோயிலில் வைத்துத் தொடங்கப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை.

5.4.4 இயக்கி கோயில்கள்

    யக்ஷன் என்பதைத் தமிழில் ‘இயக்கன்’ என்று ஆக்கி அதன் பெண்பாலாக ‘இயக்கி’ என்கின்றனர். இசக்கி என்றும் கூறுவர். அச்சத்தின் அடிப்படையில் ஆவி நிலையிலுள்ள இயக்கிக்குக் கோயில்கட்டி வழிபாடு புரிவது தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இக்காலத்தும் காணலாம்.

    சாத்தனார்க்குச் சங்கிலி பூதத்தாரும், இசக்கியும் என இரு பணியாளர்கள் உள்ளனர். அந்த இயக்கியே தனியாகக் கோயில் கொண்டு, சிற்றூர்ப்புற மக்களுக்குக் காவலாக இருந்து வருகிறாள் ; இக்கருத்துக்கு அரண் கோலும் வகையில் பழையனூர் நீலியின் வரலாறும் அமைந்துள்ளது. பொதுவாகக் காடுகளிலும் நிலங்களிலும் உலவும் ஆவிகளே இயக்கியர் என்பது தெரிய வரும். டாக்டர் ச. கணபதி ராமன் இது பற்றி ஆராய்ந்த நிலையில், திருநெல்வேலிப் பகுதியில் மக்களால் வணங்கப் பெறும் இயக்கி, சமணரின் சாந்த தேவதையான யட்சி அன்று என்று தெளிவாகிறது என்று (திருநெல்வேலிப் பகுதியில் சிறுதெய்வ வழிபாடு, பக். 41) கூறுகிறார். எப்படியோ இயக்கியை ஒரு சிறுதெய்வமாகக் கொண்டு தமிழர்கள் பண்டு தொட்டே கோயில்கட்டி வழிபட்டு வருகின்றனர்.

    இவ்வாறாகத் தமிழ்நாட்டில் பல சிறுதெய்வக் கோயில்கள் கட்டப்பட்டு, அவற்றில் மக்களின் பூசை வழிபாடு நடை பெற்றுக் காலவெள்ளத்திடையே எதிர் நீச்சலடித்துக் கொண்டிருக்கின்றன.