5.5 பிற வழிபாட்டுக் கோயில்கள்

    பல்வேறு காலங்களில் பல்வேறு வகையான வழிபாடுகள் நிகழ்ந்து வந்தன. அவற்றுள் சப்தமாதர் வழிபாடும் சேட்டை வழிபாடும் குறிப்பிடத்தக்கன.

5.5.1 சப்தமாதர் வழிபாட்டுக் கோயில்கள்

    சக்தி வழிபாட்டின் தொடக்கக் காலத்தில் ஏழு அன்னையராகிய பிராமி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியே கோயில்கள் அமைந்திருந்தன. காலப்போக்கில் அவை சிதைவுற்றமையால், அந்தத் தெய்வச் சிலைகளை ஒரு சேரத் தொகுத்துப் பெருங் கோயிலில் வரிசையாக நிறுவிப் பெருந்தெய்வத்துக்குப் பரிவார தெய்வங்களாக்கியுள்ளனர். இந்தத் தெய்வங்களுடன் யோகேசுவரி என்ற பெண் தெய்வத்தையும் சேர்த்து அன்னையர் எண்மர் எனக் கொண்டாடினர். சப்தமாதர் வேறு, சப்தகன்னியர் வேறு என்ற கூற்றும், சப்தமாதரே சப்தகன்னியர் என்ற கூற்றும் அறிஞர்களிடையே உண்டு. புராணத் தொடர்பில் அந்தகாசுரனை அழிப்பதற்காக இறைவனுக்குத் துணை நின்ற சக்திகளே யோகேசுவரியும் சப்தமாதர்களுமாக அமைந்தனர் என்பர்.

    சப்தமாதர்களைக் கோயிற் கட்டடங்களில் நிறுவி வழிபடும் முறை முற்காலப் பாண்டியர்களாலும், பல்லவர்களாலும், சோழமன்னர்களாலும் முத்தரையர்களாலும் மேற்கொள்ளப்பட்டது; இதனைத் தமிழக வரலாறு நன்கு எடுத்துக் கூறுகிறது. ஆலம்பாக்கம், வேளச்சேரி, திருத்தணி, திருவக்கரை, சிவபுரிப்பட்டி ஆகிய ஆலயங்களில் பிராகாரங்களிலே நிறுவப்பட்டுள்ள சப்தமாதர் சிலைகள் பிற்காலப் பல்லவர்களாலும் சோழர்களாலும் அமைக்கப்பட்டவை ; மேலும், சிலைகள் நிறுவப்பட்ட ஆலயப் பகுதிகளும் அவர்களாலேயே கட்டப்பட்டன என்பதை வரலாறு கூறும்.

5.5.2 சேட்டை வழிபாட்டுக் கோயில்கள்

    சேட்டை என்பவள் மூதேவி, தவ்வை எனவும் அழைக்கப்படும் சிறுதெய்வம். இக்காலத்தில் ‘மூதேவி’ என்ற சொல்லைக் கேட்டதுமே மக்கள் முகம் சுளிக்கின்றனர் ; ஆனால், முற்கால நிலை வேறு.

    பல்லவர் காலத்தைக் காட்டிலும் பிற்காலச் சோழர்காலத்தில் சேட்டை வழிபாடு சிறப்புற்றிருந்தமையைக் கல்வெட்டுகள் கூறும். பார்த்திபேந்திரவர்மன் எனும் சோழனின் மூன்றாம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் அமைந்த உத்திரமேரூர்க் கல்வெட்டில் சேஷ்டாதேவி வழிபாடு பற்றிய குறிப்பு உள்ளது. “உத்திரமேரூரின் ஒரு பகுதியாகிய குமண்பாடி என்னுமிடத்தில் சேட்டையார் திருக்கோயில் இருந்தது. இவருக்கு அமுதுபடையலும் அருச்சனைகளும் நிகழ்ந்தன. இவ்வாறு வழிபாடாற்ற 1148 குழிநிலம் தரப் பெற்றிருந்தது.” (திருக்கோயில்- திங்களிதழ், ஜூன், 1980) என வருங் குறிப்பால் சேட்டைக்குத் தனிப்பட்ட கோவிலும், வழிபாட்டுக்கு அருச்சனாபோகமும் அமைந்திட்ட குறிப்பினைக் காணலாம்.

    பல்லவன் இராச சிம்மன் எடுப்பித்த காஞ்சிக் கயிலாச நாதர் கோயிலிலும், கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கு வடமேற்கேயும், வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென் புறத்திலும் சேஷ்டாதேவியின் திருவுருவம் நல்ல கட்டமைப்புடன் கூடிய இடத்தில் இருப்பதைக் காணலாம். சேட்டையிலேயே இரத்த ஜேஷ்டா, நீல ஜேஷ்டா என இரு வகைகள் இருந்தமை பற்றி வி்ஷ்ணுதர்மோத்திரம் குறிப்பிடுகிறது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
முற்காலத்தில் பலிபீடம் எதற்காக அமைக்கப்பட்டது?
2.

நாட்டுப்புறவியல் அடிப்படையில் வீடு கட்டுவதற்குத் தரையமைப்பு, கூரை ஆகியவற்றை மூவகைகளில் அமைத்தனர் என்பதை விளக்குக.
3.

நாட்டுப்புற பெண் தெய்வப் பெயர்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
4.

மாரியம்மன் தலைமீது ஏழு நாகங்கள் குடை பிடிப்பதன் தத்துவம் என்ன?
5.

பேரையூர் நாகநாத சுவாமி கோயில் மண்டபங்கள் மதிற்சுவர்கள் ஆகியவற்றின் சிறப்பு என்ன?
6.
பழநி மலையில் தண்டாயுதபாணிக்குக் காவல் பொறுப்பிற்குத் துணை நிற்கும் சிறுதெய்வத்தின் பெயர் என்ன?
7.

சாத்தனார்க்குப் பணியாளர்களாகக் காவல் பொறுப்பை ஏற்கும் தெய்வங்களைக் கூறுக.
8.
சப்தமாதர் பெயர்களைக் கூறுக.
9.
இயக்கன் என்பதற்கு வடமொழிச் சொல் என்ன?
10.

சேட்டை எனும் தெய்வத்துக்கு வேறு இரு பெயர்களைக் கூறுக.