5.7
இசுலாமியர் கிறித்துவர் வழிபாட்டுத் தலங்கள்
சைவர், வைணவர், சமணர், பௌத்தர்கள்
தமிழகக் கட்டடக்
கலைக்கு வளம் சேர்த்ததை போல
கிறித்தவர்களும்
இசுலாமியர்களும் வளம் சேர்த்துள்ளனர்.
5.7.1
இசுலாமியர் வழிபாட்டுத் தலங்கள்
இசுலாமியர் தம் தலைமை வழிபாட்டு
நாடாக அரேபியாவைக்
கொண்டிருப்பினும், தமிழகப் பண்பாட்டின் தாக்கம் அவர்களுடைய
வழிபாட்டுத் தலங்களாகிய பள்ளிவாசல், தர்கா முதலிய இடங்களில்
காணலாம். பிரார்த்தனை செய்யும் இடமான பள்ளிவாசலை மசூதி
என்பர். இசுலாமியர் தம் மத மரபுப்படி
ஐந்து வேளைத்
தொழுகைக்குப் பள்ளிவாசல்களுக்குப் பெரும்பாலோர் செல்வதைக்
காணலாம். தொழுகைக்குச் செல்லுமுன் கைகால்களையும்
முகத்தையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற
நியமப்படி நீர்வசதிக்கென ஒவ்வொரு தொழுகையிடத்திலும் குளம்
அல்லது நீர்த்தொட்டி அமைத்திருப்பர்.
இசுலாமிய சமயத்தைச் சேர்ந்த
ஆன்மீகப் பெரியவர்களை
நல்லடக்கம் செய்த இடம் தர்கா ஆகும். அற்புதங்கள் பலவற்றை
நிகழ்த்திய நாகூர் மீரான்சாயபு தர்கா, ஏர்வாடி தர்கா, பாதுஷா
பெயரில் திருச்சியிலுள்ள பெரியதர்கா, பரங்கிப்பேட்டை ஹக்கா
சாயபுதர்கா முதலியவற்றில் சந்தனக் கூடு விழா நடைபெறுகையில்
மக்கள் பெருமளவில் திரள்வர்.
பொதுவாகப் பள்ளிவாசல் கட்டடங்கள்
தொழுகை
நடத்துவதற்கேற்ப விசாலமாகக் கட்டப்பட்டிருக்கும். பழைமையான
பள்ளி வாசல்கள் பல கல்தூண்கள் தாங்கிய மண்டபங்கள்
போலவே அமைந்துள்ளன. பரங்கிப்பேட்டையில் பெரியதெருவின்
வடகோடிக்கு அருகே அமைந்துள்ள அழகிய மீராப்
பள்ளிவாசலமைப்பினைப் பார்க்கையில் யாருக்கும் வியப்பு
உண்டாகும் ; பிரம்மாண்டமான மனோரா என்ற கோபுர
அமைப்புகளைக் கொண்டு பள்ளிவாசல் விளங்குகிறது.
நாகூர் மீரான் சாயபு தர்காவில்,
பெரியவர்கள் மூவர்
அடக்கமாகிய இடங்கள், சன்னிதி போன்ற அமைப்புடன்
அருகருகே உள்ளன. வெள்ளித் தகடு போர்த்திய வாயில்களும்
கதவுகளுமாக அவை அமைந்திருக்கும். கருவறைக்கு மேலே
விமானங்கள் உண்டு. தர்காவின் உட்பகுதியிலே மக்கள் தங்கி
வழிபடுவதற்கேற்ப விசாலமான மண்டபங்கள் உள்ளன. மேற்குப்புற
வாயிலிலே நெடுகக் கடைகள் உள்ளன.
தர்காவின் உள்ளேயும் வெளிப்புறத்தேயும்
மினார் எனப்படும்
நெடிய மனோராக்களையும் பார்க்கலாம். கட்டடக் கலை நோக்கில்
பாரசீகக் கட்டடக் கலையும் தமிழகக் கட்டடக் கலையும் இணைந்து
வடிவங்கொண்ட சிறப்பினைக் காணலாம். இவ்வாறே தமிழகமெங்கும்
உள்ள தர்காக்களிலும் பள்ளிவாசல்களிலும் கலவைப் பண்பாட்டுக்
கட்டடக்கலை யமைப்புகளே உள்ளன.
சுருங்கக் கூறின், கட்டடஅமைப்பில்,
1. |
நாகூர்மீரான் சாயபு
தர்கா, |
2. |
திருச்சி தப்ரே ஆலம்
பாதுஷா தர்கா, |
3. |
ஏர்வாடி இப்ராகிம் ஒலியுல்லா
தர்கா,
|
4. |
மதுரை மஹ்பூப் சுபஹாணி
தர்கா, |
5.
|
பரங்கிப்பேட்டை
மீராப் பள்ளிவாசல் ஆகியவை
சிறப்புமிகு வனப்புடைய கட்டடங்கள் எனலாம்.
|
5.7.2
கிறித்தவர் கட்டடங்கள்
உலகமெங்கும் மிகப்பரவியுள்ள கிறித்துவர்கள்
தமக்குள்ளே
கத்தோலிக்கர், புராட்டஸ்டென்ட பிரிவினர் முதலிய பிரிவுக்
கோட்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய
பிரிவுகளுக்கேற்ப அவர்கள் தம் வழிபாட்டுத் தலங்களிலும் சிற்சில
மாறுபாடுகளைச் செய்து கொள்கின்றனர்.
தமிழ் நாட்டிலமைந்த மாதா கோயில்
அல்லது தேவாலயம்
(Church), பாதிரிமார் இல்லம்
(Monastery), பிஷப்புகள் தங்கும்
தேவாலயப் பகுதி (Chapel),
கிறித்துவக் கன்னியர் மடம்
(Nunnery), மலைப்பாறைப் பின்னணியில்
இயேசு பிரான்
காட்சியருளும் அமைப்பு (கெபி) முதலியவற்றில் ரோமானியக்
கட்டடக் கலையின் தாக்கம் அமைந்திருக்கக் காணலாம். எனினும்,
தமிழ்நாட்டுக் கலைப் பண்பாடும் ஓரளவு இடங் கொண்டிருக்கும்.
சில மாதா கோயில்கள் வெகு
உயரமான கூம்பிய கட்டட
அமைப்பினையும், அரைக்கோள அமைப்பினையும், சதுரமாக
உயர்ந்த கட்டட அமைப்பினையும் கொண்டு, உச்சியில் சிலுவையுடன்
விளங்கும். அவற்றுள் சில, இந்துகளின் கோயிற் கோபுரங்களையும்,
இசுலாமியர்கள் மனோராக்களையும் ஒருவகையில் நினைவு
கொள்ளச் செய்யும் வகையில் அமைந்திருக்கக் காணலாம். ஓரளவு
தொலைவிலுள்ளவர்களும் மாதா கோயிலைக் கண்டு சிலுவை
வணக்கம் புரிந்திடுமாறு அமைந்துள்ளமை மனங் கொள்ளத்தக்கது.
இந்துக்கள் கோபுரத்தைத் தூலலிங்கமாக நினைத்து வழிபாடு
புரிதலைப் போன்றது இது.
கிறிஸ்துமஸ், கிறிஸ்து உயிர்த்தெழும்
நாள், புனித வெள்ளி
போன்ற திருநாள்களிலும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காகவும்
மக்கள் திரளாக மாதா கோவிலுக்கு வருவர். அதற்கேற்பவே
மண்டபம் பெரும்பாலும் மிக விசாலமாக அமைந்திருக்கும். மாதா
கோயிலில் முற்பகுதியில் முற்றமும், பக்கங்களில் தாழ்வாரங்களும்
பொலிவூட்டுவனவாக அமையும்.
கத்தோலிக்கர்களின் தேவாலயங்களில்
குழந்தை இயேசுவைக்
கையில் கொண்ட மேரியன்னையையும், சிலுவையையும்
முன்முகப்பிலும் உள்மேடையிலும் வழிபாடு புரிவதற்கேற்ற
அமைப்பில் நிறுவியிருப்பர். புரோட்டஸ்டெண்டுகளின்
தேவாலயங்களில் அழகிய சிலுவைகளே எங்கும் சிறப்பிடம்
கொண்டிருக்கும்.
இந்துகள் தம் ஆலயங்களில்
கல்லறைகளுக்கு
இடமளிப்பதில்லை. ஆனால் இசுலாமியர்கள் தம் மசூதிகளின் ஒரு
பக்கத்திலும், கிறித்துவர்கள் தமது கோயில்களின் ஒரு பக்கத்திலும்
கல்லறைகளுக்கு இடமளிப்பது வழக்கமாகிவிட்டது.
பொதுவாகக் கிறித்துவர்கள்
தம் மதத்தொடர்பான
கட்டடங்களில் சித்திர வேலைப்பாட்டிற்கும் கொடிக்கருக்கு
வேலைப்பாட்டிற்கும் இடந்தருவர். கிறித்துவ சமயக் கோயில்
கட்டடங்களுக்குச் சான்றாக வளோங்கண்ணி மாதா கோயில்,
சென்னை சாந்தோம் ஆலயம், கதீட்ரல்கள் (பேராலயங்கள்)
முதலியனவற்றைக் கொள்ளலாம்.
|