ஒரு நாட்டின் நாகரிகச் சின்னமாக விளங்கக் கூடியது கோயிற் கட்டடக் கலை, ‘எதனையும் திட்டமிட்டுச் செயற்படுத்துவதே நல்லது’ என்ற நடைமுறைக்கேற்பக் கட்டடக் கலையின் நுட்பங்கள் ஆராயப்படுகின்றன. ஆலயம் புராண நோக்கிலும் தத்தவ அடிப்படையிலும் சமுதாயத்தின் தேவை என்பதை உணர்ந்து, கோபுரம் முதலியவற்றைச் சிறப்புற அமைக்கலாம் ; கோபுரம் தெய்வநலச் சின்னமென்பதும், அதனை வணங்குவது தூலலிங்க வழிபாடாக அமையும் என்பதும் தெளிவாக்கப்படுகின்றன. ஆலயங்களைச் சிற்பியர் கட்டுகையில், காற்றோட்ட வசதி குறி்த்துச் சாளரங்களை எப்படி அமைத்தனர் என்பதும், கருவறை மூலவர் மீது குறிப்பிட்ட சில நாள்களில் சூரியஒளிபடுமாறும் சந்திரவொளிபடுமாறும் கலை நுட்பத்துடன் அமைத்தனர் என்பதும் விளக்கப்படுகின்றன. தேர்வடிவ அமைப்பில் சக்தியின் சன்னிதியும், ஆலயக்கருவறை முதலியவற்றின் வெளிப்புறச் சுவர்களில் தேவகோட்டங்கள் அமைப்பது பற்றியும், கொடிக்கம்பம், பலிபீடம், மதில்கள், பிராகாரங்கள், அமைப்பது பற்றியும், இந்தப் பாடத்தில் இடம் பெறுதலைக் காணலாம். கோயிலில் கட்டடக் கலை உறுப்புகளாக உள்ளவற்றில் மண்டபங்கள் பலவகைப்பட்டு மக்களின் பக்தியார்வத்தை நிறைவு செய்துள்ளன என்பதும், அதிட்டானத்தின் அடிப்படையில் கருவறையும் புறச்சுவரும் அதிட்டானம் தொடங்கியுள்ள கட்டுமானக் கூறுகளுமாகியவை எவை என்பதும் விளக்கம் பெறும். மகா மண்டபம், நாலுகால் மண்டபம் விமானமாகும் வைணவ மரபு, ஒற்றைக்கால் மண்டபம் உள்ளிட்ட பலவகை மண்டபங்கள், கொடுங்கைகள் முதலிய பலவும் பற்றிக் கூறப்படுகிறது. கட்டடக் கலை நுட்பங்கள் எவ்வாறு இசைத் தூண்களமைப்பில் கையாளப்பட்டன என்பதும், விளக்கப்படுகின்றது. கருவறையமைப்பும், அதன் மேல் கட்டப்படும் விமானமும், வைணவ மரபில் விமானங்களுக்குத் தரப்படும் மதிப்பும் பெயரும் ஆகியவை பற்றிய குறிப்புகளால் கட்டடக் கலை நுட்பங்கள் புலனாகின்றன. |