6.2 ஆலய அமைப்பும் சாத்திர முறையும்

    ஓர் ஊரில் ஆலயம் கட்ட ஆகம விதிப்படியும் சிற்பநூல் முறைப்படியும் ஆலயம் கட்டத் தொடங்கினால் நன்கு அமைந்திடும்.

    சில தெய்வங்களைத் தவிரப் பெரும்பாலும் அருள்மிகு பெருந்தெய்வங்களுக்கு ஆலயத்தை ஊரின் நடுவில் அமைத்தல் வேண்டும். இத்தகைய ஆலயம் 2 முதல் 5 வரை சுற்றுப் பிராகாரங்களுடனும் நான்கு கோபுர வாயில்களுடனும், நடுவில் விமானங்களுடனும் அமைத்தல் வேண்டுமெனச் சைவ ஆகமங்கள் விரிவாகக் கூறுகின்றன.

    நிலத்தை முறைப்படி சோதனை செய்து தூய்மை செய்வது நல்லது.     பூமியை     25 அடி ஆழம் வெட்டி மண்ணை அப்புறப்படுத்திவிட்டு, ஓடு, கல், மயிர், எலும்பு முதலிய பொருள்களை நீக்கித் தூய்மையான மணலால் நிரப்பி அழுத்திவிட வேண்டும். மலைக்கோயில் கட்டுவதெனின் வேறுவகை அணுகுமுறையைப் பின்பற்றுவர்.

6.2.1 தத்துவ நோக்கு

    உலக வரலாற்றை நோக்கும்போது கிரேக்கர்கள் கோயிற் பண்பாடு என்பதனை வளர்த்துப் பெருமை கொண்டனர்; அவர்களைப் போலவே தமிழ்ப் பெருமக்கள் கோயிற் பண்பாட்டை உருவாக்கிக்காட்டிப் பெருமை கொண்டுள்ளனர்.

    மானுடவுடம்பு ஐம்பூதங்களின் சேர்க்கையால் அமையப் பெற்றது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வர். இந்த அடிப்படையில் ஒவ்வொரு கோயிலும் (உடம்பையொத்து அமைக்கப்படுவதால்) ஐம்பூதங்களின் கூட்டுறவுப் பரிணாமத்தை ஒருவகையில் புலப்படுத்தும் கலைப்படைப்பாகும்.

    ஒவ்வொரு கோயிலின் உறுப்புகளாக அமைந்துள்ள கற்கள் (கட்டடமும் சிற்பமும்)     ‘நிலத்தைக் குறிக்கும்; கோயில் தீர்த்தமாகவுள்ள திருக்குளம் கிணறு முதலியவை ‘நீர்’ எனும் பூதத்தைக் குறிக்கும் . அவற்றுடன் (கருப்பூரச்சுடர் உள்ளிட்ட) ஒளி விளக்குகள் ‘தீ’ எனும் பூதமாகும். இங்கு ஒரு நுட்பக்குறிப்பு உண்டு; ஒளிவிளக்கு நம் கண்ணுக்குப் புலப்படினும், சுடரொளியை வழங்கத் துணை நிற்பது ‘காற்று’ எனும் பூதமாகும். ஐம்பூதங்களே மக்களுக்குப் பரம்பொருளை நினைவுபடுத்தும் வகையில் கூட்டுறவு கொண்டு எழும்பியதே கோயில் என்பது தெரியவரும்.

    சுருங்கக் கூறின், எங்கும் நிறைந்த பரம்பொருளை நினைக்கும் முறையில், ஐம்புலப்பாட்டுக்கு ஏற்ற வண்ணம் ஆலயத்தின் கோபுரம், விமானம், மண்டபம், தூண், சுவர், தீர்த்தம் என்றெல்லாம் ஆகம அடிப்படையில் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது எனலாம்.