6.3 கோபுரம்

    திருவருட் சக்தி நிரம்பிய மூலவர் கருவறையில் நிறுவப்பட்ட நிலையில், அதன் மீது எழுப்பப்பட்ட கூம்பு வடிவக் கட்டட அமைப்பினையே விமானம் என்பர். சுவாமி சன்னிதி விமானம் இவ்வாறிருக்க, ஆலய வாயிலில் விமானம் போன்று கட்டப்படுவதே கோபுரம் ஆகும்.

    பக்தர்களை ஈர்த்துப் பக்தியைப் பரப்புவதற்கு உதவியாகக் கோபுரம் அமைக்கப்பட்டது ; எனினும் கலைக் கண் நோக்கில், கம்பீரத் தோற்றத்திற்காகக் கோபுரத்தில் ஒன்றோ பலவோ அடுக்குகள் அல்லது நிலைகள் அமைக்கப்படுகின்றன. ஆசியாவிலேயே தமிழகத்தில் உள்ள திருவரங்கத் தெற்குக் கோபுரம் 13 அடுக்குகள் கொண்டு மிக உயராமாக அமைந்து ஈடு இணையற்று விளங்குகிறது.

6.3.1 சிற்பநூல்

    பொதுவாகக்     கோபுரம்     கீழ்ப்பகுதியென்றும், மேற்பகுதியென்றும் இருபகுதிகளாகக் கொள்வர். பெரும்பாலும் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கல்லும் சுதையும் கொண்டும் கட்டப்படும். சில இடங்கள் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளன.

    கோபுரத்தின் மேற்பகுதி ஒவ்வொரு அடுக்கு நிலையிலும் அலங்கார அணிகளை முன்பின் அமைத்துக் கோபுரத் தோற்றத்திற்கு எழில் கூட்டுவர். இதே போன்ற அலங்காரத்தை எல்லா அடுக்கு நிலைகளிலும் இடம் பெறச் செய்து பூமாலை போன்று சுற்றிச் சுற்றி அமைப்பர். கோபுரச் சிறப்பிற்காக, அந்த அந்தத் திசைக்குரிய தெய்வ வடிவங்களையும் கோபுரம் தாங்கிகளையும், தேவர்களையும் புராணத் தொடர்புடன் சுதையினால் வடிவமைத்துக் கட்டுவர்.

6.3.2 கோபுரம் அமைப்பதன் நோக்கம்

    சைவ     சித்தாந்த அணுகுமுறைப்படி, கோயிலில் அமைக்கப்படும் விமானமும் கோபுரமும் தூலலிங்கம் எனும் நோக்கில் வழிபடப்பெறும் சிறப்பினையுடையவை.

    கோயிலுக்குள் சென்று முறைப்படி வழிபட இயலாதவர்களும் கூடக்     கோயிற் கோபுரத்தைக் காண்கையில், தம்மை அறியாமலேயே கைகூப்பித் தொழும் வழக்கம் பலரிடம் உண்டு.

    உயர்ந்த கோபுர வாயிலில் உள்ளே நிறுத்தப்பட்ட பக்கக் கால்களில் நடனச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதைச் சில தளங்களில்     காணலாம். எடுத்துக்காட்டாகச் சிதம்பரம் கோயிற்கோபுர வாயிலில் நடனச் சிற்பங்களைக் காணலாம்.

    முதலாம் இராசராச சோழன் காலத்திலிருந்து ஆலயக் கட்டடக் கலை புதிய உத்திகளுடன் புத்துயிர் பெற்றுச் சிறந்த வளர்ச்சிப் பெற்று வந்துள்ளது.

    கோபுரத்தையும் ஆலய மதிலையும் இணைத்துக் காண்பதால் ஆலயப் பெருமை தெரியும். எடுத்துக்காட்டாகத் திருவாரூர்த் தியாகராசப் பெருமான் கோயிலில் முதன்மையான நுழைவாயில் கீழைத் திருக்கோபுரமாகும்; இதுவே பெரிய திருக்கோபுரமும் ஆகும். 110 x 60 அடி அடித்தளமும், 120 அடி உயரமும் கொண்ட நெடிதுயர்ந்த கோபுரச்     சிறப்பே மதிலால் அமைகின்றது. தெற்கு வடக்கில் 666 அடி, கிழக்கு மேற்கில் 846 அடி, உயரம் 30 அடி கொண்ட திருமதிலைப் பெற்றுப் பரந்த நிலப்பரப்பிற்குப் பாதுகாவலாக உள்ளது. கோபுரமும் மதிலும் இரட்டைப்     பாதுகாப்பினை இந்தத் திருக்கோயிலுக்கு வழங்குகின்றன.

6.3.3 கோபுரம் - வாயில்

    பொதுவாகக் கோயிலுக்குத் தெய்வநலக் காவல் பொறுப்பில் பைரவர் போன்ற தெய்வங்கள் இருக்கும் என்பது சமய நம்பிக்கை. கோபுரக் கதவுகளேயன்றி, உட்புறக் கோயிற் கதவுகளிலே ஒலிக்கும் மணிகள் பொருத்தப்பட்டிருக்கும். அத்தகைய கதவுகளைத் திறக்கும் வேளையில் மணியோசை கேட்கும். அந்நிலையில் கோயிலுக்கென அமைந்த பாதுகாப்புத் தேவதைகள் தம் கடமைகளில் ஈடுபடும் என்ற சமய நம்பிக்கை உள்ளது. எனினும், கோபுர வாயிற் கதவையோ கோயிலின் உட்கதவையோ கோட்டைவாசற் கதவைப் போன்று வலிமை மிக்கதாக அமைத்து வருகின்றனர்.

    தஞ்சைப் பெரிய கோயில் விமானம் கட்டுவதற்குச் சிறந்த பொறியியல் தொழில் நுட்பம் கையாளப்பட்டுள்ளது; அவ்வாறே முதற்கோபுர வாயிலாகிய கேரளாந்தகன் வாயில் கட்டுவதற்கும் சிறந்த பொறியியல் தொழில் நுட்பம் கையாளப்பட்டுள்ளது.

  • கேரளாந்தகன் வாயில்

    இந்தத் திருவாயில் 5 நிலைகளைக் கொண்டது; 96.5 அடி நீளம், 50.5 அடி அகலமுடைய அடிப்பீடத்தின் மேல் 113 அடி உயரம் கொண்டது. இது பற்றி நன்கு ஆராய்ந்த கட்டடக் கலை வல்லுநர் சு.இராசேந்திரன், மருத்துவர் கு.பாலகுமார வேலுவுடன் இணைந்து எழுதுகையில், “முதல் இரண்டு நிலைகள் கருங்கற் கட்டுமானமாகவும், அதன் மேலுள்ள மூன்று நிலைகள் செங்கற் கட்டுமானமாகவும் உள்ளன. முதல் இரண்டு நிலைகளின் சுவர்கள் முழுவதும் கருங்கற் கட்டுமானமாய் இருப்பினும், தளங்கள் (Floors) செங்கற் கட்டுமானமாய்த் தான் உள்ளன” என்ற கருத்தை வெளியிட்டுள்ளார் ; மேலும், “கருங்கற்களைப் பொறுத்தவரையில் ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் இடையே சுண்ணாம்பு போன்ற எந்த ஒரு பிணைப்புச் சாந்தும் (Mortor) கிடையாது.     கருங்கற்கள்     சதுர அல்லது செவ்வக அமைப்பிலேயே இருக்க வேண்டும் என்றில்லாமல், கிடைக்கும் வடிவங்களை     மட்டம் சுத்தம்     செய்து அப்படியே கட்டுமானத்தில் பயன்படுத்தியிருப்பது சிறந்த திறமையாகும். இதனால் கட்டுமானத்தின் கற்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து (Strong staggered support) அந்தச் சுவரின் தாங்கு திறனைக் கூட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

    கேரளாந்தகன் வாயில் நிலைக்கால்கள் “38’ x 4’ x 4’ அளவிலும் அதற்கு மலோக விட்டமும் இணைப்பு இல்லாமல் ஒவ்வொரு கல்லாலேயே அமைத்திருப்பது மகத்தான சாதனையாகும். மேலும், நிலைக் கால்களின் பக்கவாட்டில் காடி (Grooves) வெட்டி அதனைச் சுவர்க்கட்டுமானத்தோடு இணைத்திருப்பது நுட்பமிகு கட்டிடக் கலைத் திறனாகும்.