6.4 ஆலய வடிவம்

    ஆலயத்தைக் கண்டதுமே இறைவன் நினைப்பு வரும் வகையில் பல உத்திகள் கட்டடக் கலையிலும் கையாளப்படுவது வியப்பிற்குரியது.

6.4.1 இலிங்க வடிவம்

    சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கல் கிராமத்தில் தாமரைப்பாக்கம் உள்ளது.     அங்குச் சர்வேசுவரா     தியானநிலையம் நிறுவப்பட்டுள்ளது.

    சென்னையிலுள்ள சுவாமி சின்மயானந்தா அவர்களின் பெரு முயற்சியால், அவர்களின் பக்தர்கள் ஒத்துழைப்புடன் 65 அடி நீளமுள்ள சிவலிங்க ஸ்தூபியும், மேல்தள தியானநிலையமும் சிறந்த கட்டடக் கலைத் திறமையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    1989 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருக்குடமுழுக்கு விழா நடந்தேறியது. பார்வைக்குச் சிவலிங்க வடிவமாகத் தோற்றமளிக்கும்     இந்த ஆலயக் கட்டமைப்பில் சிறப்பு அமிசமாகக் குறிப்பிடத்தக்கது இங்குள்ள ஸ்படிக லிங்கமாகும்.

6.4.2 குரு லிங்க சங்கமம் வடிவம்

    சைவ சித்தாந்த நோக்கில் இறைமைப் பொலிவு, குரு இலிங்கம், சங்கமம் ஆகிய மூவகையால் புலப்படும். சிவலிங்கம் ஆணவத்தைப் போக்கவல்லது எனவும், உபதேச வாக்கினால் அறமும் அருளும் உணர்த்தும் குரு, மாயாமலத்தினை நீக்க வல்லவர் எனவும், உடம்பாகிய சங்கமம் (அடியவர்) கன்ம மலத்தினைப் போக்கவல்லது எனவும் ஆன்றோர்கள் விளக்கம் காண்பர். இந்த நோக்கத்தினை உயர்ந்த தத்துவமாகப் புலப்படுத்த இறைவனே     குரு லிங்கம், சங்கமம் எனும் நிலைகளில் எழுந்தருள்கிறான். இந்தத் தத்துவ உள்ளுறையை உணர்த்தும் வகையில்,     ஆலய அமைப்பிலும் குரு லிங்க சங்கமம் கண்டுள்ளனர்.

    சீர்காழிப் பதியில் - சிவாலயத்தில் - அடுக்கு அடுக்காக மூன்று கருவறைகள் அமைக்கப்பட்டன. கீழேயுள்ள கருவறையில் பிரம புரீசுவரரையும், அதற்கு மேலுள்ள நடுக்கருவறையில் திருத்தோணியப்பரையும், அதற்கும் மேலுள்ள கருவறையில் சட்டையப்பரையும் எழுந்தருளச் செய்துள்ளனர். பிரமபுரீசுவரர் லிங்கத்தையும்,     திருத்தோணியப்பர்     குருமூர்த்தத்தையும், சட்டையப்பர்     சங்கமத்தையும்     குறிக்கும்     வகையில் நிறுவப்பட்டுள்ளமை     போற்றுதற்குரிய     திருக்குறிப்பாகும். ஆலயக் கட்டட வகை நுட்பமும் இதனுள் கண்டு மகிழலாம்.

    தமிழகத்தில் தத்துவச் சிந்தனையே ஆலயக் கலைப் படைப்புகளுக்கு அடிப்படை என்பதற்குச் சீர்காழிச் சிவன் கோயிற்     கருவறைகள்     சீரிய     எடுத்துக்காட்டாக விளங்கிவருகின்றன.