6.5 சாளரங்களும் தேவ கோட்டங்களும்

6.5.1 சாளரங்கள்

    ஆலயக் கட்டடக் கலைக் கூறுகளில் சாளரம் அலங்கார நோக்கில்     வேலைப்பாட்டிற்காகவும்     பயன்பாட்டுத் தேவைக்காகவும் இடம் பெறுகின்றது. காற்றோட்டத்திற்காகவும் வெளிச்சத்திற்காகவும் ஆலயச் சுவர்களில் பொருத்தப்பட்ட சாளரங்கள், காலப்போக்கில் அலங்கார நிமித்தம் பல புதிய வடிவங்களைப் பெற்றுப் படிநிலை வளர்ச்சி பெற்றுள்ளன.

  • சாளரங்களின் வகைகள்

    ஆலயச் சாளரங்களில், (1) சதுர வடிவத் துளைகளை உடையவை, (2) வட்ட வடிவத் துளைகளை உடையவை எனப் பொதுப்படக் கூறப்படினும்,     அவற்றின் தொடர்பால் அமையப்பெறும் அலங்கார அமைப்பால் பலவகைப்படும். எடுத்துக்காட்டாகக் கூடலழகர்     கருவறைச் சுவர்களில் காணலாகும் ஆறு சாளரங்களில்,ஒரு சாளரத்தில் கொடிப்பெண், மனித உருவம், அன்னம் ஆகியவை காணப்படுவதும், மற்றொரு சாளரத்தில் சதுரமாகவோ வட்டமாகவோ பிரிக்கப்படாத நிலையில் அதனில் யாளிகள், சங்கு, சக்கரம், அன்னம் முதலிய உருவங்கள் காணப்படுவதும் குறி்த்தற்குரியன.

  • சூரிய ஒளி

    காலைச் சூரியன் அல்லது மாலைச் சூரியன் ஆலய வாயில் வழியாகப்     பலிபீடம், கொடிக்கம்பம், நந்தி ஆகியவற்றைக் கடந்து மூலவர் திருமேனியில் குறிப்பிட்ட சில நாள்களில் படும். இவ்வாறு நிகழ ஆலயத்தைச் சிற்பியர் கட்டவேண்டுமெனில், அவர்கள் சோதிடம், வானியல், சாத்திரம் ஆகியவற்றில் நன்கு பயிற்சியும் அனுபவமும் கொண்டிருத்தல் வேண்டும்.

    இத்தகைய சூரிய வழிபாடு நிகழும் சில கோயில்கள் வருமாறு :

(1) கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய நாள்களில் காலை வேளையில் நாகேசுவர சுவாமி (இலிங்கம்) மீது சூரியவொளி படுவதை மக்கள் கொண்டாடி மகிழ்வர்.

(2) தென்னார்க்காடு (விழுப்புரம்) மாவட்டம், விழுப்புரத்திற்கு 9 கி.மீ. தொலைவில் புறவார் பனங்காட்டூர் (பனையபுரம்) பனங்காட்டீசுவரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் ஏழு நாள்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியக் கதிர்கள் முதலில் சுவாமிமீதும் பின்பு அம்மன் மீதும் படுகின்றது.

(3) வேதங்கள் பூசித்த பெருமையுடைய திருவேதிமுடி (தஞ்சை மாவட்டம்) வேதபுரீசுவரர் கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி 13, 14, 15 தேதிகளில் காலைக் கதிர்கள் மூலவர் மீதுபடுவதைக் காணலாம்.

    தாரமங்கலம் சிவாலயத்தில் நந்தி மீது மாலைச் சூரியன் மறையும் வேளையில் ஒளிபடுமாறு அமைவதனைக் காணலாம். மேற்குப் பார்த்த தாரமங்கலம் கயிலாசநாதர் கோயில் வாயிலில் கொடிமரத்து அடியில் ஒரு சின்ன நந்தி நிறுவப்பட்டுள்ளது. சூரியன் மறையும்போது அந்திக் கதிர்கள் நந்தி மீது பட்டு, நந்தியின் கொம்புகளில்படும் ஒளிநிழல், உள்ளே கருவறையில் மூலவர் மீது சந்திரப் பிறைபோல விழுவது வியக்கத்தக்க காட்சியாகும்.

  • சந்திர ஒளி

    கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேசுவரம் சுவாமியின் கருவறைக்குப் பக்கத்தில் அம்பாள் சன்னிதி உள்ளது. அந்த அம்பாள்மீது ஒவ்வொரு வருடத்திலும் கார்த்திகை முழு நிலவு (பௌர்ணமி) - சந்திரவொளிக் கற்றைகள் பட்டு ஒளிவிளக்கம் தருதலைக் காணலாம். இத்தகைய சிறப்பினைக் கொண்ட இறைவியைப் பிறையணி வாணுதலாள் என்று பக்தர்கள் அழைத்து மகிழ்கின்றனர். இவ்வாறு ஆண்டுதோறும் கார்த்திகை முழுநிலவு இறைவி மீது படுமாறு கட்டட நுட்பங்கண்ட சிற்பியரையும், அவர்களை இவ்வாறு செய்ய வைத்த புரவலர்களையும் தமிழ்ப் பெருமக்கள் நினைவிற் கொண்டு போற்றுதல் தகும்.

  • இடி ஒளி

    தமிழகத்தில் இந்திரன்     சிவபெருமானைப்     பல திருத்தலங்களில் பூசித்ததாகப் புராணக் குறிப்புகள் உண்டு. அத்தகைய தலங்களுள் ஒன்றாகிய திருக்கழுக்குன்றத்தில் இந்திரன் வியத்தற்குரிய பூசை புரிந்து வருகிறான். திருக்கழுக்குன்றம் மலைக்கோயில் கருவறைக் கோயிலில் கலசத்தின் மேல் துவாரம் ஒன்று போடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒருநாளில் இடிவிழும்போது அந்தத்துவாரம் வழியாக உள்ளே பாய்ந்து இலிங்கத்தைச் சுற்றி வெளிச்சம் ஏற்படுத்தும்; அந்த இடி சுவாமியைச் சுற்றி வந்து கீழே இறங்கி விடும்; கோயிலுக்கு எந்தச் சேதமும் ஏற்படுவதில்லை. இந்த நிகழ்ச்சி அறிவியலார்க்குப் புரியாத புதிராக இருந்து வருகிறது. இந்த ஆலயக் கட்டடத்திற்கு மட்டும் இத்தகைய ஒரு சிறப்பு இருந்து வருகிறது ; இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

    இங்குச் சிற்பக் கலையும் கட்டடக் கலையும் கலந்து அமைந்த புலப்பாட்டினைக் காணலாம்.

6.5.2 தேவ கோட்டங்கள்

    கோயில் கட்டடக் கலை வளர்ச்சி, பல்லவ மன்னர் காலம் தொடங்கி விசயநகர - நாயக்க மன்னர் காலம் வரையில் சிறப்புற அமைந்திருந்தது. கோயில் கட்டடத்திற்குச் சிறப்பு மிக உண்டாக்குவதில் தேவ கோட்டம் பெரும் பங்கு வகிக்கின்றது. ஆலயத்தில் இறைவழிபாடு புரிந்திட வருபவர்கள், ஆலயத்தை வலம் வருவர் ; அப்படி வரும் வேளையில் விமானத்திலும் கருவறைச் சுவரிலும் மகா மண்டபச் சுவரிலும் இடம் பெற்றுள்ள தெய்வத் திருமேனிகளைக் காணும் வாய்ப்பினைப் பெறுவர்.

    கோயில் கட்டடப் பகுதிகளில் தேவகோட்டம் (Niche) கூடு (நாசிக), தூண் (Pillar) ஆகியவை, அவை தோன்றிய காலத்தை அறிந்து கொள்ள உதவக் கூடியவை; காலந்தோறும் சில மாற்றங்கள் அவற்றில் தோன்றுவது இயல்பே.

    பல்லவர் காலத் தேவ கோட்டங்களின் உச்சி வளைவு, மகர தோரண வடிவிலமைந்த திருவாசி போன்று அமைக்கும் கலையுத்தி, சோழர் காலத் தேவ கோட்டங்களில் ஓரளவு மாறுபடுதலைக் காணலாம். அஃதாவது, முதலைகளின் வாயிலிருந்து கிளைத்தெழும் கொடியாகப் படர்ந்து பின்னலிட்ட திருவாசியாக மாறியுள்ளது.