6.6 கொடிக்கம்பமும் பலி பீடமும்

    கோயில்களில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்திலும், பலிபீடத்திலும் கட்டடக் கலை நுட்பங்களைச் சிறப்பாக அறிந்து கொள்ளலாம்.

6.6.1 கொடிக்கம்பம்

    இந்துக்களேயல்லாமல்     கிறித்துவர்,     இசுலாமியர் ஆகியோரும் தம் வழிபாட்டுச் சிறப்புடைய     தலங்களில் திருவிழாக் கொண்டாடுகையில் கொடியேற்றி விழாத் தொடக்கம் புரிவதைக் காணலாம். ஈண்டு இந்துக் கோயில்களில் நாட்டப்படும் கொடிக்கம்பம் பற்றிச் சிறிது காண்போம்.

    கொடிக்கம்பதத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மரம் நேராகவும், நுனி சற்று வளைந்தும் இருக்க வேண்டும். வெட்டுக்காயங்கள் படாதநிலையில், மிகவும் மென்மையானதும் வயிரம் பாய்ந்ததுமான மரம் உகந்தது. மேன்மாடம் வரை உயரமுள்ளதாக அஃது இருப்பி்ன் மிக நல்லது. அதன் உச்சியில் தொங்கும் படியாகக் கொடி ஏற்றப்படுவது மரபு.

    பலிபீடம்     எவ்வளவு     சிற்ப     நேர்த்தியுடன் அமைக்கி்ன்றனரோ அவ்வளவு சிற்பச் சிறப்பைக் கொடி மரத்திலும் அமைப்பர். கொடி மரம் உடம்பின் முதுகுத்தண்டு போலப் பாவிக்கப்படுவதால், கொடிமரத்தில் 32 வளையங்கள் (கட்டுகள்)     அமைக்கப்படும். கோயிலின் பெருமைக்கும் வசதிக்கும் ஏற்பச் செப்புத்தகடு போர்த்தியோ, செப்புத்தகட்டில் பொன்முலாம் பூசியோ கொடிமரம் அமைக்கப்படும். அதனை நடுவதற்குக் கொடிமரப் பீடமும் அழகுற அமைக்கப்படும். எடுத்துக்காட்டாகச் சிதம்பரம் நடராசர் சன்னிதிக்கு எதிரே அமைந்துள்ள கொடித்தம்பம் அடி முதல் முடி வரையில் பொன்முலாம் பூசிய தகடு போர்த்தியிருப்பதைக் காணலாம்.

    ஆலயக் கட்டட வளாகத்தில் கொடி மரமும் ஓர் உறுப்பாக அமைந்துள்ளது. ஆனால் இதிலும் வேறுபாடுகாட்டும் சில தலங்கள் உள்ளன.

    காஞ்சிக்கு அருகிலுள்ள திருப்புட்குழி எனும் திவ்ய தேசத்தில் கொடி மரமும், பீடமும் ஆலயத்திற்கு வெளியே அமைந்துள்ளன.

    திருவல்லிக்கேணி     பார்த்தசாரதிக்     கோயிலில் சித்திரையிலும் ஆனியிலும் பெருந்திருவிழா நடைபெறும்; பார்த்த சாரதிக்கும் அழகிய சிங்கருக்குமாகச் சிறப்பிக்கும் வகையில் இரு கொடி மரங்கள் (தனித்தனியே) அமைந்து, கொடியேற்றம் நடைபெறும்.

6.6.2 பலிபீடம்

    பண்டு தொட்டுச் சிறு தெய்வ வழிபாட்டில் பல தெய்வங்களுக்கும் தேவதைகளுக்கும் ஆடு, எருமைக்கடா, காளைமாடு, கோழி முதலியவற்றைப் பலியிடுவது வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. எனவே, சுவாமிக்கு எதிரே தனியாக ஒரு மேடை போன்று கற்பலகையை அமைத்து, அவ்விடத்தில் பலியிடுவர். ஆனால், உயிர்ப் பலி     நடைபெறாத ஆலயங்களிலும் வட்ட மேற்பகுதியுடைய பலிபீடம் ஆகம விதிப்படி அமைக்கப்படுகின்றது. ஆறு சமயக் கோயில்களிலும் இத்தகைய பலிபீடம்     கொடி     மரத்தை அடுத்து அமைக்கப்படுவது சமய மரபாயிற்று.

    மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் கோயில் மிகத் தொன்மை வாய்ந்தது. அங்குப் பலிபீடம் கருடாழ்வாருக்கு முற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் முன்னர்ப் பஞ்சபலிபீடம்,     பஞ்சாக்கினி     என்ற     பெயரில் வைக்கப்பட்டுள்ளது; இத்திருத்தலத்தில் கருப்பக்கிருகம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைச்சுற்றி ஏழு இடங்களிலும், முகப்பின் உள்ளே இரு இடங்களிலுமாக ஒன்பது இடங்களில் பலி பீடங்கள் அமைந்துள்ளமை ஆலயக் கட்டடக் கலை நோக்கில் குறிப்பிடத்தக்கது.

    வைணவக் கோயில்களிலும் ஆலய மரபுப்படி பலிபீடங்கள் அமைந்திருக்கும் ; எனினும், பழம் பெருமை வாய்ந்த ‘திருவெள்ளறை அருள் மிகு புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலில் சுமார் 10 அடி உயரமும் அழகிய வேலைப்பாடும் அமைந்த கருங்கல் பலிபீடம் மிக அரிதாகக் காணப்படுவது’ என்று சிறப்பித்துக் கூறுவர்.

    கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராசராசன் கட்டிய தாராசுரம் ஐராவதீசுவரர் ஆலயத்தில் ஒரு பலி பீடமண்டபம் உள்ளது ; இதனில் 10 படிகளைக் கொண்ட கருங்கல்லால் ஆன இசைப் படிக்கட்டு் உள்ளது. இந்த இசைப்படிகளில் கல்லால் தட்டுகையில் க, ம, ப, த, நி, ச, ரி, க என்ற சங்கராபரண ராக சுவரங்களைக் கேட்கலாம் ; பலி பீடப்பூசை நடைபெறுகையில் இசைப்பதற்காக இசைப்படிகளை அமைத்த கட்டடக் கலை நுட்பத்தைப் பெரிதும் பாராட்டலாம்.