6.9 தூண்கள் கட்டடக் கலை படிப்படியே வளர்ந்து வரும் நிலையில் தூண்கள், கட்டடங்களை வெறுமனே தாங்கி நிற்கின்ற நிலையிலிருந்து உயர்ந்து, மக்களின் காட்சிப் பொருள்களாயின.
மன்னர்கள்தம் கருத்தை மனத்துள் கொண்ட சிற்பியர், ஆலயத் தூண்களைக் காலத்துக்கேற்ப ஒருவகைப் பாணியினைப் பின்பற்றினர்; எனவே, ஆலயங்கள் தோன்றிய காலத்தை ஓரளவு நிர்ணயிக்கத் தூண்களும், தூண்களுக்கு மேலுள்ள போதிகைகளும் மிகத் துணைபுரிவதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆலயங்கள் எடுக்கப்பட்ட காலத்தை நிர்ணயிக்கும் முயற்சியில் தூண்கள் மட்டுமல்ல, கருவறையமைப்பு கோபுரம் போன்றவையும் துணை நிற்கின்றன. எனினும், இந்நோக்கத்திற்குத் தூண்கள் தம் வடிவ அமைப்பால் பெரிதும் துணை புரிகின்றன. ஆலயக் கட்டடக் கலையிலும் சிற்பியர் தூண்கள் வாயிலாகவும் சில நுட்பங்களைப் புலப்படுத்த முற்பட்டனர். இதனை நன்குணர்ந்த E.B.Havell, சதுரத்தூண்கள் நான்முகனுக்கும், எண்கோணத்தூண்கள் திருமாலுக்கும், வட்டமாகத் திரண்ட தூண்கள் அல்லது பதினாறு பட்டைத்தூண்கள் உருத்திர சிவனுக்கும் தொடர்பு படுத்தப்பட்டுக் கூறப்படுகின்றன என்று (The Ancient and Madieval Architecture of India. P.58) கூறியுள்ளார். கலை நுட்பம் மிகுந்த சிற்பத் தூண்களைப் பல்லவர்களும் சோழர்களும் விசயநகர அரசர்களும் தமிழகத்தில் உருவாக்கினர்.
தமிழக வரலாற்றில் பல்லவர் காலத்திலிருந்து ஆலயத்தூண்கள் சிற்பக் கலை நோக்கில் அமைக்கப்பட்டன. மகேந்திரவர்மன் காலத்துக் குடைவரைக் கோயில்களில் செதுக்கப்பட்ட தூண்கள், மேலும் கீழும் சதுரப்பட்டை அமைப்புடனும் இடையே எண் கோண அமைப்புடனும் இருந்தன. மேலும், அவற்றின் இடைச் சதுரத்தில் தாமரைமலர் வடிவமைப்பும் செதுக்கப்பட்டிருந்தன. இத்தூண்களில் மேலுள்ள முகப்பானது அறல் போன்ற வளைவு உடையதாய், இடையிடையே மனித முகத்தை நடுவிற் கொண்ட கூடுகளையுடையதாயும் இருந்தது. மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் குடைவரைக் கோயில்களில் ஒற்றைக் கோயில்களிலுள்ள தூண்கள், சதுரப்பட்டையமைப்பும், இரண்டு சதுர முழத்தில் பிளந்த வாயுடன் கூடிய சிங்கம் கீழே அமர்ந்த தன் தலையால் தூணைத் தாங்கிக் கொண்டிருப்பது போன்றும் தூண் அமைப்பு இருப்பதைக் காணலாம். பிற்காலத்தில் எடுத்த பல ஆலய மண்டபங்களில் யாளித்தூண்களை அமைத்திட இந்த தூண்களே முன்னோடியாக அமைந்தன எனக் கொள்ளலாம். இராச சிம்ம பல்லவன் காலத்திலிருந்து தூண்கள் சிங்கத் தோற்றத்தைச் சிறப்புடன் எடுத்துக்காட்டுபவையாகவும், தோரணங்களுடனும் பிற சிற்பக் கூறுகளுடனும் எடுப்பான தோற்றமுடையவையாகவும் கலைத்தரம் மிக்கவையாகவும் உருவாக்கப்பட்டன.
தமிழகக் கோயில் வளாகத்தில் சோழ மன்னர்களும் விசய நகர - நாயக்க மன்னர்களும் புரிந்த திருப்பணிகள், சிற்ப நோக்கிலும் கட்டடக் கலை நோக்கிலும் பொற்காலப் படைப்புகள் எனலாம். தூண்களில் சிற்ப வேலைப்பாடுகளை மிகுதியாக ஆக்கிக்காட்டிய பெருமை அவர்களுக்கு உண்டு. வனப்புடன் தூண்களை அமைக்கும் அதே வேளையில், தெய்வத் திருவுருவங்களையும், அருளாளர் திருவுருவங்களையும் கோயிற் பணிபுரிந்த மன்னர்களையும், பிற நன் மக்களையும் புடைப்புச் சிற்பங்களாக அமைத்தனர்.
கல்லால் ஆன தீபத்தூண்களும் - அகல் விளக்குத் தூண்களும் - பல்லவர் காலத்திலே செதுக்கப்பட்டன என்பது வரலாற்றால் தெரிய வரும். புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தொலைவில் திருவாலத்தூர் மலை உள்ளது ; அங்கே மலையடிப்பட்டிக் கோயில் சிற்பக் கலைச் சிறப்புடன் அமைந்திருப்பதைக் காணலாம். அந்த மலையடிப்பட்டியில், கருவறைக்குச் சிறிது தொலைவில் வெட்டவெளியில் அகல் விளக்குத்தூண் 15 அடி உயரமுடையதாக நிறுவியுள்ளனர். இந்தத் தூணின் உச்சியில் விளக்கு வடிவிலான தொட்டிப் போன்ற அமைப்பு உள்ளது; அதில் நெய் ஊற்றி விளக்கேற்றி வந்துள்ளனர். ஆவுடையார் கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், திருச்சி மலைக்கோட்டைக் கோயில் முதலிய சில ஆலயங்களில் தீபத்தூண்களை இன்றும் காணலாம். கட்டடக் கலையில் சிற்பக்கலையை இணைத்து ஆலயத்தை அழகுக் கூடமாக ஆக்கியுள்ளனர். அதற்கு மேலும் சிறப்பினைக் கூட்டும் வகையில், தூண்களில் இசையொலிகள் உண்டாகுமாறு அவற்றை ஒருவகை இசைக்கருவிகள் போல ஆக்கியுள்ளனர். கலைக் கற்பனையால் உருவாக்கப் பெற்ற இசைத்தூண்களை மதுரை, திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம், செண்பகராம நல்லூர், ஆவுடையார் கோயில், தென்காசி, திருக்குற்றாலம், சுசீந்திரம், திருவானைக்கா, தாடிக்கொம்பு, தாராசுரம் முதலிய இடங்களில் காணலாம்.
பல்வேறு அழகமைப்புடன் பற்பல வடிவங்களில் பெரியனவாகவும் சிறியனவாகவும், பல வரிகளையும் உருட்டுத் திரணைகளையும் உடையனவாகவும் இசைத்தூண்கள் அமைந்துள்ளன. பொதுவாக ஆலயங்களில் காணப்படும் இசைத்தூண்கள், அவை அமைந்துள்ள மண்டபத்தின் உயரத்திற்கேற்ப உயரங் கொண்டவையாக உள்ளன. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மொட்டைக் கோபுரத்திற்கு அருகிலுள்ள ஐந்து அருமையான இசைத்தூண்கள் கலைநுட்பம் வாய்ந்துள்ளவை; இவற்றிலெழும் சுரத்தின் கிளைச் சுரங்கள் பக்கத்திலுள்ள இசைத்தூண்களிலிருந்தும் அதிர்வுகளால் (vibrations) தாமாகவே ஒலித்தலைக் கேட்கலாம். மேனாட்டு இசை வல்லுநர்கள் இவற்றைக் கண்டு ‘பியானோ கம்பங்கள்’ என்றும், வடநாட்டு இசைவல்லுநர்கள் இவற்றை ‘ ஜலதரங்கத் தம்பங்கள்’ என்றும் பாராட்டுகின்றனர். இனிய இசையொலி நோக்கில் இவை வில்லோ யாழோ எனத் தமிழிசைக் கலைஞர்கள் வியந்து போற்றுகின்றனர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் மாபெரும் மண்டபத்திலுள்ள இசைத் தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே பெருங்கல்லால் செய்யப்பட்டதாகும். நடுவில் பெரிதாக ஒரு தூணும், அதைச் சுற்றிலும் 48 சின்னஞ் சிறு தூண்களான உருட்டுக் கம்பிகளும் இணைக்கப்பட்டாற் போன்று செதுக்கப்பட்டுள்ளன. இந்த அற்புதமான அழகிய இசைத் தூண்களில் காணப்படும் ஒவ்வொரு சிறிய உருட்டிலும் ஒரு சிறிய குச்சியைக் கொண்டு தட்டினால் ஒவ்வொரு சுரம் எழுமாறு இத்தூண்களை அமைத்திருப்பது வியப்பையும் மகிழ்ச்சியையும் எழுப்புகிறது. இம் மண்டபத்தை அமைத்தவன் கி.பி. 7 - ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் செங்கோலோச்சிய கூன் பாண்டியன் என்று இவ்வூர்த்தல புராணம் கூறுகிறது. சேலம் - பெங்களூர்ச் சாலையில் தகடூர் எனும் ஊர் உள்ளது. அங்கு மல்லிகார்ச்சுனரும் பரவாசுதேவரும் மூல மூர்த்திகளாவர். மூலவர் சன்னிதிக்கு முன்புள்ள மகா மண்டபத்தில் உள்ள இரு தூண்கள் தொங்கிக் கொண்டிருப்பதை ஊன்றி நோக்கினால் தெரிந்து கொள்ளலாம். அருங்கலைப் படைப்புகளாகிய தொங்கும் தூண்களின் எடை சுமார் இரண்டு டன் இருக்கும். தூணின் அடியில் நூல் அல்லது சிறிய துணியை நுழைத்து, இருபுறமும் பிடித்துக் காட்டி வெளியில் எடுக்கையில் தொங்கும் தூண்கள் என்பது புலனாகும். |