6.11
ஆலயத்தின் பிற அமைப்புகள்
தமிழகக் கோயில்களின்
ஒவ்வொரு அமைப்பும் கலை
நுட்பத்துடன் காட்சியளிக்கின்றன. படிக்கட்டுகள்,
வேள்விக்குண்டம், நீராட்டத்தின் நீரை வெளியேற்றும் பிரநாளம்
எனும் பகுதி முதலியவையும் கட்டடக் கலை நுட்பத்தின்
சின்னங்களாகத் திகழ்கின்றன.
6.11.1
ஆலயப் படிக்கட்டுகள்
அரண்மனைகளோ,
வளமனைகளோ, மண்டபங்களோ
கட்டும் பொழுது படிக்கட்டுகளையும் அழகுற அமைப்பர்;
அதுபோலவோ கோயில்களிலும், கோயிற்குளங்களிலும்,
ஆற்றங்கரைகளிலும் படிக்கட்டுகளை நன்கு அமைப்பது மரபு.
படிக்கட்டுகளைச் சோபானங்கள்
என்றும் கூறுவர். பழையாறை
வடதளியில் காணலாகும் இரு கல்வெட்டுகளுள், ஒன்று,
சகம்
1375 (கி.பி. 1453 - இல்) ஸ்ரீமுக வருஷம் சித்திரை
மாதம் பொருவனூரைச் சேர்ந்த,
வாணாதராயன்
நரசிங்கதேவன் என்பவன் பழையாறை வடதளி
மஹாமண்டபத்தையும் சோபானங்களை (படிக்கட்டுகளை)க்
கட்டியதாகக் கூறும் என்று
வரலாற்றுப் போக்கில்
பழையாறை நகர் எனும்
நூலில் (பக்.23-24) குறிப்பிட்டுள்ளமையால்
அறியலாம்.
ஆலயப் படிக்கட்டுகள் வழியாக
இறைத் திருமுன்னர்ச்
செல்வதற்கேற்பக் கைப்பிடிச்சுவரோ பிடிப்பிற்கான நீண்ட
குழாயோ அமைப்பர்; மிக உயரமில்லாத இடத்தில்
படிக்கட்டுகளின் இரு மருங்கிலும் யானைத் துதிக்கை போன்ற
சிற்ப அமைப்போ செய்தமைப்பர். இறைவன் சன்னிதியிலும்
படிக்கட்டருகே இரு யானைத் துதிக்கையமைப்பைப் பொருத்திப்
போற்றுவர்.
ஆலயங்களில் சமய நம்பிக்கையால்
படிக்கட்டுகளைக்
குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைத்தனர். செய்குன்றாகிய
சுவாமி மலையில் பிரபவ விபவ என எண்ணும் அறுபது
ஆண்டுகளையும் நினைவிற்கொள்ளுமாறு 60
படிகள்
கட்டப்பட்டுள்ளன.
முருகன் எழுந்தருளியுள்ள திருத்தணிகை
மலையில் 365
(அஃதாவது, ஆண்டிலுள்ள எல்லா நாள்களிலும் வழிபடும்
நோக்கில்) படிக்கட்டுகள் உள்ளன.
அரக்கோணம் சந்திப்புக்கு 25
கி.மீ. தொலைவிலுள்ள
சோளிங்கபுரம் எனும் வைணவத் தலம் உள்ளது. சுவாமியின்
அருட்காட்சி பெற 1305 படிகளில் ஏறவேண்டும்.
6.11.2
பிரநாளம் (ஆலய நீர்த்தூம்பு)
பிரநாளம் என்பது சுவாமிக்கு நீராட்டும்
நீர் வெளியேற்றும்
வகையில் கருவறைக்கு இடப்புறமாக வெளியே நீட்டிக்
கொண்டிருக்கும் பகுதி. இந்த நீர்த் தூம்பிலும் யாளி போன்ற
விலங்கின் தலை அல்லது மனிதர் தலையமைப்பு மிகச் சிற்பச்
சிறப்புடன் இருக்கும்.
கருங்கல்லாலோ உலோகத்தாலோ
அமையாத தெய்வத்
திருமேனிக்குத் தைலக்காப்போ புனுகு சார்த்துதலோ
நடைபெறுவதால் நாள்தோறும் நீராட்டல் தேவையில்லை.
ஆனால், தினமும் நீராட்டுப் புரிந்திடும் நிலையில் பிரநாளம்
இன்றியமையாத் தேவையாகிறது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில்
கருவறையின் இடப்புறம்
அமைந்துள்ள யாளித்தலையமைப்புடன் கூடிய பிரநாளம் சிற்பச்
சிறப்புடன் கூடியது.
தஞ்சைப் பெரிய கோயிலில் சில
இடங்களில் இத்தகைய
நீர்த்தூம்புகள் உள்ளன; எனினும், கோயிலின் வடமேற்குப்
பாகத்தில் காணலாகும் அருள்மிகு சுப்பிரமணியர் கோயிலில்
அமைந்துள்ள நீர்த்தூம்பு, வடபால் படிக்கட்டின் அருகே
உள்ளது. வாயைப் பிளந்துள்ள யாளியின் தலையமைப்பும்,
அதனிடமிருந்து வெளியாகும் நீர் சிதறாமலிருக்கும் வகையில்
தொட்டியமைப்பும் காணலாம். நாயக்கர் காலச் சிற்பத்திறனைப்
பிரநாளத்திலும் சிற்பியர் காட்டியுள்ளனர். இதனில், நீர்த்தாரை
வளைந்து விழும் வகையில் வாழைப்பூ வடிவிலமைந்த
கவிந்த கூம்பமைப்பினைக் கண்டு வெளிநாட்டவர்களும்
வியப்படைகின்றனர்.
|