தமிழக வரலாற்றில் பொற்காலம் என அழைக்கப்படும் சங்க
காலத்தில், தமிழகம் கலைகளின் தாயகமாக விளங்கியது.
கட்டடம், சிற்பம், ஓவியம், நடனம், இசை, கூத்து எனப்
பல்வேறு
கலைகள் சிறந்து விளங்கின. தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே நடுகற்கள் கிடைத்துள்ளன.
இவை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலம் முதல்
விசயநகர - நாயக்கர் காலம்
வரை
தொடர்ச்சியான
வரலாற்றினைக் கொண்டுள்ளன.
இறந்துபட்ட வீரனின் உருவத்தை அவன் செய்த வீரதீரச்
செயலைக் காட்டும் சிற்பமாகச்
செதுக்கி அவனது பெயரையும்,
சிறப்பையும் கல்லெழுத்துகளில் பொறித்து வைப்பர். தருமபுரி
மாவட்டத்தில் உள்ள இருளப்பட்டி என்ற இடத்தில் இரு
நடுகற்கள் கிடைத்துள்ளன. இந்நடுகல் சிற்பங்களில்
வீரர்கள்
வாளும் கேடயமும் ஏந்தியுள்ளனர். இவற்றில் வட்டெழுத்தால்
ஆகிய கல்வெட்டும் உள்ளது.
இத்தகைய நடுகற்களே தமிழகத்தில்
கிடைக்கும் கற்களால் ஆன முதல் சிற்ப வகையாகும். பல்லவர்களும் பாண்டியர்களும் குடைவரைகளையும்
கட்டட வகைக் கோயில்களையும் கட்டினர். குடைவரைக்
கோயில்கள் அமைக்கும் மரபு மறையும் காலத்தில் சோழர்கள்
கட்டுமானக் கோயில்களைக் கட்டத் தொடங்கினர். சோழர்களது
பெரும்பாலான கோயில்கள்
காவிரியாற்றின் இருகரைகளிலுமே
அமைந்துள்ளன. இவர்களது கோயிற் கட்டடக் கலையும்
சிற்பக் கலையும் பல்லவ பாண்டியர் கலைகளில் இருந்து
வளர்ச்சி அடைந்தவை ஆகும். சோழர்கள் மிக உயர்ந்த
விமானங்களைக்
கட்டினர். கோபுரங்களைச் சிறியதாக
அமைத்தனர். பரிவார
தேவதைகளுக்கு முக்கியத்துவம்
அளித்தனர். பெரும்பான்மையும்
கோயிலின் அனைத்துப்
பகுதிகளையும் கல்லினால்
கட்டினர். |