பழங்காலத்தில் மக்கள் இயற்கையான குகைத் தளங்களில் வாழ்ந்தனர். எனவே தாங்கள் வாழ்ந்த குகைகளில் ஓவியங்களை வரைந்தனர். குகைகளுக்கு அருகே இருந்த பாறைகளிலும் ஓவியங்களை வரைந்துள்ளனர். குகைகளில் இருட்டாக இருந்ததால் அதிக அளவில் பாறைகளில் ஓவியங்களை வரைந்துள்ளனர். எனவே இவ்வோவியங்களைக் குகை ஓவியங்கள் என்று அழைப்பதை விடப் பாறை ஓவியங்கள் என அழைப்பது பொருந்தும்.
அக்கால மக்கள் தங்களது வாழ்வின் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியதால் ஓவியங்களை வரைந்திருக்கலாம். அவர்களுக்கு வேட்டையாடுதலே முக்கியத் தொழில். எனவே பல்வேறு மிருகங்களைத் தாம் வேட்டையாடுவது போல ஓவியங்களை வரைந்தால், வேட்டையாடும் போது அதிக மிருகங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், விலங்குகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் அவற்றை வரைந்திருக்கலாம்.
பாறை ஓவியங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மனித இனத்தின் வாழ்க்கைச் சூழலைச் சித்திரிப்பனவாக அமைகின்றன. அவர்களது எண்ணங்கள் நம்பிக்கைகள் முதலியவற்றைப் பிரதிபலிப்பனவாக அமைகின்றன. வெவ்வேறு விதமான வடிவங்களிலும், வண்ணங்களிலும் அமைகின்றன. இந்த ஓவியங்களின் வடிவம் மற்றும் இந்த ஓவியங்களில் இடம் பெறுகின்ற உருவங்களை வைத்து அவற்றை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் நிலை ஓவியங்கள் தொல்பழங்காலத்தைச் சேர்ந்த மிகத் தொன்மையான ஓவியங்களாகும். இவற்றில் விலங்கின வடிவங்கள் மிகுதியும் இடம் பெற்றிருக்கும். இத்தகைய ஓவியங்கள் தமிழகத்தில் குறைவே. இரண்டாம் நிலை ஓவியங்களில் மிகுதியாக வேட்டைக் காட்சிகளே இடம் பெறும். இந்தியப் பாறை ஓவியங்களில், காண்டா மிருகம், சிங்கம், புலி போன்ற விலங்கினங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும். மான், ஆடு, பன்றி, மாடு முதலிய வேட்டைக்குரிய விலங்குகள் அதிகமாக இடம் பெறும். இவ்வகை ஓவியங்களில் மனித வடிவங்கள் அதிகமாக இடம் பெறும். போர்க் காட்சிகள் சிறப்பாக இடம் பெற்றிருக்கும். வேட்டைக் காட்சிகளாக இருப்பினும் மனித உருவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். சடங்கு மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கும்.
முதல் நிலை ஓவியங்களில் கோடுகளாலான அமைப்பு இன்றி
அடர்த்தியான வண்ணப் பூச்சு அமைப்புக் காணப்படும். செந்நிறம்
அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கும்.
பாறை ஓவியங்களில் பயன்படுத்தப் பட்ட வண்ணக்
கலவையினை
இரசாயனச் சோதனை செய்து அவற்றின்
காலத்தைக் கணிக்கலாம்.
மேலும் ஓவியங்களின் வரைவு
முறையினை வைத்தும் அவற்றின்
வடிவமைப்பைக் கொண்டும்
காலம் கணிக்கப்படுகிறது.
பக்கவாட்டு முறை என்பது ஓவியத்தில் முகம் மற்றும் உடல் ஆகியவற்றின் ஒரு பக்கம் தெரியும்படி வரைவதாகும். வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் பக்க வாட்டு முறையில் அடர்த்தியான வண்ணக் கலவையால் வரையப்பட்டிருக்கும். நேர்வடிவ முறை என்பது ஓவியம் நம்மை நேராகப் பார்ப்பது போல அமைந்திருப்பதாகும். நேர் வடிவ முறை முக அமைப்பைச் சிறப்பாகக் காட்டும். உதாரணமாக மனித உருவங்களைக் கூறலாம். உடலைப் பக்கவாட்டு முறையில் அமைத்து முகத்தை மட்டும் திருப்பிக் கொண்டிருப்பது போல் அமைந்திருப்பதைத் திரும்பிக் காணும் முறை என்பர். மிகத் தொன்மையான ஓவியங்களில் பசு, மான் முதலியவை திரும்பிக் காணும் முறையில் வரையப்பட்டிருக்கும். |
||||||
4.1.6 கிடைக்கும் இடங்கள் | ||||||
தமிழகத்தில் பாறை ஓவியங்கள் பற்றிய ஆய்வு கி.பி.1980க்குப் பின்னரே தோன்றியது. அதன் பயனாகத் தென்னார்க்காடு, வட ஆர்க்காடு, தருமபுரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. |
|