2.0 பாடமுன்னுரை

    தேவாரம் என்பது ஒருவகை இசைப்பாடல். இது தெய்வத் தொடர்பானது சிவபெருமானை முழுமுதல் தெய்வமாகக் கொண்டு அமைபவை தேவாரப் பாடல்கள். ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஆகிய மூவரும் இனிய பண்களில் தேவாரப் பாக்களைப் பாடினர். இவர்களைச் சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்று அழைப்பது வழக்கம். சைவ நாயன்மார் அறுபத்து மூவரில் இம் மூவர் மட்டும் தேவாரம் பாடினர். அதனால் இவர்கள் "தேவார நாயன்மார்" என்று வழங்கப்பட்டனர்.

    கி.பி.7 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமண சமய ஆதிக்கம் வலுப்பெற்றது. அதனால் சைவ நெறி வலுவிழந்தது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் மன்னருக்கும் மக்களுக்கும் சைவத்தின் பெருமைகளை உணர்த்தினர். எப்படி? தமிழகத்தில் பக்தி இயக்கத்தை உருவாக்கினர். கோயில்கள் தோறும் சென்று வழிபட்டனர். சிவனருளால் பல அற்புதங்களை நிகழ்த்தினர். அப்பொழுதெல்லாம் தேவாரப் பதிகம் பாடினர்.

    பதிகம் என்றால் என்ன? பத்துப் பாடல்கள் கொண்டது ஒரு பதிகம். தேவாரப் பதிகமும் பத்துப் பாடல்கள் கொண்டது. பல ஆயிரம் தேவாரப் பதிகங்களைச் சம்பந்தரும், அப்பரும், சுந்தரரும் பாடினர். சிவபெருமானின் அருமை பெருமைகளையும் சிவநெறியின் உயர்வையும் இப்பாடல்கள் உணர்த்தும். சிவபெருமானுக்குப் பல மூர்த்தங்கள் உண்டு, இதோ சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவ மூர்த்தம்!

    கால ஓட்டத்தில் பல தேவாரப் பாடல்கள் மறைந்து போயின. கி.பி.11 ஆம் நூற்றாண்டில் சோழ மாமன்னன் முதலாம் இராஜராஜன் பெரும்பாலான தேவாரப் பாடல்களை மீட்டெடுத்தான். தேவாரங்கள் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. அவற்றின் பண்ணிசை மரபுவழி பாதுகாக்கப்பட்டது.

    ஓதுவார் என்னும் இசை வகுப்பினர் தேவாரப் பாடல்களை இன்றளவும் மரபு முறையில் பாடுகிறார்கள். இப்பாடுமுறை "தேவாரப் பண்ணிசை" என்றழைக்கப்படும்.