2.2 சம்பந்தர்

    சோழ நாட்டில் சீர்காழி என்னும் ஓர் ஊரில் அந்தணர் குலத்தில் சம்பந்தர் பிறந்தார். தந்தையார் பெயர் சிவபாதஇருதயர். தாயார் பெயர் பகவதி அம்மையார். சம்பந்தருக்குப் "பிள்ளையார்" என்று பெயரிட்டனர்.

2.2.1 முதல் தேவாரப்பாடல்

    சிவஞானம் வரப்பெற்ற குழந்தையான ஞானசம்பந்தர் அம்மையும் அப்பனும் என் உள்ளத்தைக் கவர்ந்த இறைவன் என்ற பொருள்படத் "தோடுடைய செவியன்" எனத் தொடங்கிப் பாடி மூன்று வயதுக் குழந்தை நட்டபாடைப் பண்ணில் பாடிய முதல் தேவாரப் பதிகத்தின் முதல் பாடலைக் கேட்போமா?

பண் : நட்டபாடை

தோடு உடைய செவியன் விடைஏறி ஓர் துவெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள் செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!

(முதல் திருமுறை, 1)

(விடை = எருது (சிவனின் வாகனம்), மதி -சந்திரன், சுடலைப் பொடி = சாம்பல், ஏடு உடைய மலரான் = பிரமன்)

    சிவப்பொருளை இனிய பண்களில் பாடும் உயர்வான ஞானத்தைப் பெற்றார் பிள்ளையார். அதனால் அவரை ஞானசம்பந்தர் என எல்லோரும் அழைத்து மகிழ்ந்தனர்.

2.2.2 பொற்றாளம் பெற்றமை

    சிவஞான முதிர்ச்சி பெற்ற ஞானசம்பந்தர் சிவபெருமான் பெருமையைப் பாடிப் போற்றினார். பண் சிறக்கப் பாடினார். பச்சிளங் கைகளால் தாளம் போட்டுப் பாடினார். அப்பொழுது இறைவன் திருவருளால் அவர் கைகளில் பொன்னால் ஆன கைத்தாளம் தோன்றியது.

    பண்ணும் தாளமும் சிறக்கத் தேவாரம் பாடும் பச்சிளம் பாலகனைத் தந்தையார் தோள் மீது ஏற்றிக் கொண்டார். சில அடியார்கள் திரளாகச் சூழ்ந்து கொண்டனர். ஊர் ஊராகச் சென்று கோயில்களைத் தரிசித்தனர். அப்பொழுதெல்லாம் சம்பந்தர் தேவாரப் பதிகங்கள் பாடினார். மக்களுக்கு இனிய இசையால் இறைவழி காட்டினார். இம் மண்ணில் நல்லவாறு வாழலாம் என்று பாடினார். பிறவிப்பிணி தீர்க்கலாம் என்று பாடினார்.

2.2.3 நோய் தீர்த்த பாடல்

    ஒரு தடவை சம்பந்தர், சில அடியார்களோடு திருப்பாச்சிலாச்சிராம் என்னும் தலத்தை அடைந்தார். அவ்வூரில் கொல்லிமழவன் என்றொரு சிற்றரசன் இருந்தான். அவனுக்கு ஒரு மகள். கன்னிப்பெண். அவள் முயலக நோயினால் வருந்தினாள். இது ஒருவித தொழுநோயாகும். எவ்வித மருத்துவ முயற்சியாலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. தன் மகளின் துன்பத்தைக் கண்டு கொல்லிமழவன் மனம் தளர்ந்து போனான். உள்ளம் நொந்து வருந்தினான். அவ்வேளை அங்கு ஞானசம்பந்தர் வந்தார். சுயநினைவு இல்லாது கிடந்த கன்னிப்பெண்ணைப் பார்த்தார். தந்தையார் தன் பெண்ணைக் குணப்படுத்தித் தரும்படி அழுதார். கருணையே உருவான ஞானசம்பந்தர் சிவனை உள்ளத்தில் நினைத்தார். உடனே, "துணிவளர் திங்கள்" எனத் தொடங்கித் தேவாரம் பாடினார். தக்கராகப் பண்ணில் சம்பந்தர் பாடிய தேவாரம் இதுதான்.

பண்: தக்கராகம்

துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம்எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ! மங்கையை வாட மயல் செய்வதோ இவர்
                                                                  மாண்பே?

(முதல் திருமறை,470)

இதன் பொருள் : முழு மதியானது கீற்றாக விளங்கும் பிறைமதியைத் தம் ஒளிபொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டியுள்ளார். பாம்புகளை அணிந்தவர். பூதங்கள் சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவர். அழகிய தோற்றுத்துடன் விளங்கும் நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவன் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகிறார். அப்படிப்பட்ட இறைவன் இம்மழவர் மகளை வாடுமாறு துன்பம் செய்தல் அவர் பெருமைக்குப் பொருந்துவதாகுமா?

    சிவன் பெருமைகளைக் கூறி, இப்பெண்ணை இவ்வாறு துன்புற விடுவது உனக்குப் பெருமையா? எனப் பாடினார்.

2.2.4 திருநீற்றின் பெருமை

  • பாண்டியனின் வெப்பு நோய்
  •     பாண்டியன் நெடுமாறன் சைவ சமயத்தவன். ஆனால் சமணர்களுடைய போதனையால் சமணனாக மாறினான். இதனால் பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் வேதனைப்பட்டார். பாண்டி நாட்டிற்கு வரும்படி ஞானசம்பந்தரை அழைத்தார். அழைப்பை ஏற்று வந்த சம்பந்தர் மதுரை எல்லையில் ஒரு திருமடத்தில் தங்கினார்.

        வெப்பு நோயால் துடித்துக் கொண்டிருந்தான் மன்னன். சமணர்களது மருந்து மாயமோ, மந்திர தந்திரமோ எதுவும் நோயைக் குணப்படுத்தவில்லை. பாண்டிமாதேவியும் மந்திரி குலச்சிறைநாயனாரும் சம்பந்தரை அணுகினர்.

        மன்னரைக் காப்பாற்றும்படி அன்போடு கேட்டனர். திருநீற்றின் பெருமை சொல்லும் தேவாரம் பாடினார். இதோ அந்தப் பாடல்.

    பண்: காந்தாரம்

    மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
    சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
    தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
    செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே!. .

    (இரண்டாம் திருமுறை, 2178)

    (வானவர் = தேவர் (சிவயோகத்தில் உள்ளவர்), சுந்தரம் = அழகு, தந்திரம் = ஆகமம்)

    2.2.5 திருஞானசம்பந்தர் தேவாரம்/ஐந்தெழுத்தின் பெருமை

        சம்பந்தர் பல புண்ணிய தலங்களைத் தரிசித்தார். 16 ஆவது வயதில் நம்பியாண்டார் நம்பியின் மகளுக்கும் சம்பந்தருக்கும் திருமணம் நடைபெற்றது.

    அத்திருமணத்திற்கு வந்த அனைவரும் முத்தி பெற வேண்டிச் சம்பந்தர் தேவாரம் பாடினார். பின்னர், "நமசிவாய" என்ற ஐந்தெழுத்தின் பெருமையைக் கௌசிகப் பண்ணில் பாடினார். கேட்போமா இப் பாடலை?

    பண் : கௌசிகம்

    காதல் ஆகிக் கசிந்து, கண்ணீர் மல்கி,
    ஒதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது,
    வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
    நாதன் நாமம் நமச்சிவாயவே

    (மூன்றாம் திருமறை, 3320)

        இதுவே ஞானசம்பந்தர் பாடிய கடைசித் தேவாரத் திருப்பதிகமாகும்.

    சம்பந்தர் இம்மண்ணில் வாழ்ந்த 16 ஆண்டு காலத்துள் 16,000 தேவாரப்பதிகங்கள் பாடினார். தேவார மூவருள் அதிகப் பண்களிலும் பலவகைத் தாளங்களிலும் பாடல்கள் பாடியவர் சம்பந்தர். சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் சம்பந்தரை, "இசைஞானி" என்றும் ‘கானத்தின் எழு பிறப்பு’ என்றும் போற்றி மகிழ்ந்தார். (கானத்தின் எழு பிறப்பு = இறைவன் புகழைப் பாடுவதற்கென்றே தோன்றிய தெய்வப்பிறவி என்பது இதன் பொருள்)

    2.2.6 திருஞானசம்பந்தர் தேவாரத்தில் பண்கள்

        திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களைத் திருமுறையாக வகுத்தவர்கள் பண் அடிப்படையில் முதல் மூன்று திருமுறைகளாக வகுத்தனர். இவை பின்வருமாறு :

    வ. எண்
    பண்கள்
    மொத்த பதிகம்
    பதிக எண்கள்
    முதல் திருமுறை
    இரண்டாம் திருமுறை
    மூன்றாம் திருமுறை
    1.
    நட்டபாடை
    1-22
    22
    ---
    ---
    2.
    தக்கராகம்
    23-46
    24
    ---
    ---
    3.
    பழந்தக்க ராகம்
    47-62
    16
    ---
    ---
    4.
    தக்கேசி
    63-74
    12
    ---
    ---
    5.
    குறிஞ்சி
    75-103
    29
    ---
    ---
    6.
    வியாழக் குறிஞ்சி
    104-128
    25
    ---
    ---
    7.
    மேகராகக் குறிஞ்சி யாழ்முரி
    129-135 136
    7 1
    ---
    ---
    8.
    இந்தளம்
    1-39
    ---
    39
    ---
    9.
    சீகாமரம்
    40-53
    ---
    14
    ---
    10.
    காந்தாரம்
    54-82
    ---
    29
    ---
    11.
    பியந்தைக் காந்தாரம்
    83-96
    ---
    14
    ---
    12.
    நட்டராகம்
    97-112
    ------
    16
    ---
    13.
    செவ்வழி
    113-122
    ---
    10
    ---
    14
    காந்தார பஞ்சமம்
    1-24
    ---
    ---
    24
    15.
    கொல்லி
    25-41
    ---
    ---
    17
    16.
    கொல்லிக் கௌவாணம்
    42
    ---
    ---
    1
    17.
    கௌசிகம்
    43-56 117
    ---
    ---
    15
    18.
    பஞ்சமம்
    57-66
    ---
    ---
    10
    19.
    சாதாரி
    67-99
    ---
    ---
    33
    20.
    பழம் பஞ்சுரம்
    100-116
    ---
    ---
    17
    21.
    புறநீர்மை
    118-123
    ---
    ---
    6
    22.
    அந்தாளிக் குறிஞ்சி
    124-125
    ---
    ---
    2
    ---
    ஆக
    ---
    136
    122
    125

         திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் பண் அடிப்படையில் பகுக்கப்பட்டிருப்பதனை இப்பட்டியல் சுட்டுகிறது. இக்காலத்திலும் இப்பண்ணமைவோடே பாடப் பெறுகின்றன. பண்களைப் பற்றித் தேவாரப் பாடல்களில் பல செய்திகள் காணப்படுகின்றன. சம்பந்தர் இறைவனைப் பண்ணிலாவும் மறை பாடலினால் (2.3.1) என்று குறிப்பிடுகிறார். தமது பாடல்களைப்‘பண்ணோடு இசைப்பாடிய பத்தும்’ என்று குறிப்பிடுகிறார்.பண்ணுடைய பாடல் நன்று என்றும், அத்தகைய பாடல் தவழும் ஊர் நல்ல ஊர் என்றும், இத்தகைய இசை வல்லவர்களைப் பண்ணார் என்றும், பண்ணினைப் பாடி ஆடினால் இறையருளை எளிதில் பெறமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

        தேவாரத் திருத்தலங்களுள் ஒன்றான திருவீழிமிழலைப் பதிகத்தில் பண்பற்றியும், பண்ணிசை பற்றியும் பண்மூலம் எழும் பல்வேறு ஓசை பற்றியும், அப்பண்ணின் மூலம் எழும் சுவை பற்றியும்,அவைகளின்ஊடே அமையும் தாள ஒலி பற்றியும் குறிப்பிடுகிறார்.
    பண்ணும்பத மேழும்பல வோசைத் தமிழவையும் உண்ணின்றதொர் சுவையுமுறு தாளத்தொலி பலவும் மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும் விண்ணும்முழு தானானிடம் வீழிம் மிழலையே
    (பண் : நட்டபாடை, திருஞானசம்பந்தர்)