2.5 மீட்டெடுத்த தேவாரப் பாடல்கள்

    கால ஓட்டத்தில் தேவாரப் பாடல்கள் பல மறைந்து போயின. சோழ மாமன்னன் முதலாம் இராஜராஜன் (கி.பி.10 ஆம் நூற்றாண்டு) இவற்றை மீட்டெடுக்க விரும்பினான். தேவாரம் எழுதிய ஓலைகள் சிதம்பரம் கோயிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. மாமன்னன் பெருமுயற்சி செய்து அடைத்த கதவுகளைத் திறக்கச் செய்தான்.

    மலைபோலக் குவிந்து கிடந்தன தேவார ஓலைகள். அவற்றில் கறையானால் அரிக்கப்பட்டுப் போன ஓலைகள் பல. ஒடிந்து போன ஓலைகள் பல. இருந்தும் நம்பியாண்டார்நம்பி என்பவரைக் கொண்டு பல ஓலைகளை மீட்டெடுத்தான் மன்னன்.

2.5.1 ஏழு திருமுறைகள்

    தேடிக் கண்டெடுத்த தேவாரப் பதிகங்கள் அனைத்தும் நம்பியாண்டார் நம்பிகளால் தொகுக்கப்பட்டன. அவற்றை ஏழு திருமுறைகளாக அவர் வகுத்தார். சம்பந்தர் பாடிய தேவாரங்கள் முதல், இரண்டு, மூன்று, என்னும் திருமுறைகளாயின. அப்பர் பாடியவை நான்கு, ஐந்து, ஆறு என்னும் திருமுறைகளாயின. சுந்தரர் பாடியவை ஏழாந் திருமுறையாக வகுக்கப்பட்டன.

    இவ்வாறு வகுக்கப்பட்ட திருமுறையுள் மொத்தம் 797 பதிகங்கள் இன்று கிடைக்கின்றன, இடையில் இல்லாதவை போக இவற்றுள் 8272 தேவாரப் பாடல்கள் அடங்கும். இதனை விவரமாக இங்குப் பார்க்கலாம்.

தேவார அமைப்பு

அருளியோர் திருமுறை எண்கள் பதிகங்கள் பாடல்கள்
சம்பந்தர் முதல், இரண்டு, மூன்று 384 4169
அப்பர் நான்கு, ஐந்து, ஆறு 312 3066
சுந்தரர் ஏழு 101 1037

2.5.2 தேவாரப் பண்ணிசை

    தேவாரப் பாடல்கள் இசையோடு பாட வேண்டியவை அல்லவா? எனவே சோழ மாமன்னன் இவற்றின் பண்ணிசைகளைப் பாணர் மரபுவழிப் பெண் ஒருத்தி மூலமாக உயிர்ப்பித்தான். தஞ்சையில் தான் கட்டிய ‘ஸ்ரீ இராஜராஜேஸ்வரம்’ என்னும் பெரிய கோயிலில் தேவாரங்களைப் பாட ஏற்பாடு செய்தான். ஐம்பது பாடகர்களை நியமித்தான். இவர்கள் நாள்தோறும் கோயிலில் தேவாரங்களைப் பண்ணிசையில் பாடினார்கள்.

    தலைமுறை தலைமுறையாக இவர்கள் வழி வந்தவர்கள் ஓதுவார் எனப்பட்டனர். இவர்கள் தேவாரங்களின் பண்ணிசைகளை மரபுவழி பாடுவர்.

2.5.3 இருபத்து மூன்று பண்கள்

    எண்ணற்ற தேவாரப் பண்கள் இருந்தன. அவற்றுள் 23 மட்டுமே இன்று வரை நடைமுறையில் உள்ளன.

    தேவாரப் பாடல்களை ஓதுவார்கள் இருபத்து மூன்று பண்களில் பாடுவார்கள். அப்பண்கள் பெயர் பின்வருமாறு:

1. செவ்வழிப் பண் 2. தக்கராகப் பண்
3. புறநீர்மைப் பண் 4. பஞ்சமப்பண்
5. நட்டபாடைப் பண் 6. அந்தாளிக் குறிஞ்சிப்பண்
7. காந்தாரப் பண் 8. பழம்பஞ்சுரப் பண்
9. மேகராகக் குறிஞ்சிப் பண் 10. கொல்லிக் கௌவாணப் பண்
11. பழந்தக்கராகப் பண் 12. குறிஞ்சிப் பண்
13. நட்டராகப் பண் 14. வியாழக் குறிஞ்சிப் பண்
15. செந்துருத்திப் பண் 16. தக்கேசிப் பண்
17. கொல்லிப் பண் 18. இந்தளப் பண்
19. காந்தார பஞ்சமப் பண் 20. கௌசிகப் பண்
21. பியந்தைக் காந்தாரப் பண் 22. சீகாமரப் பண்
23. சாதாரிப் பண்

2.5.4 அபூர்வமான பண்

    ‘யாழ்முரி’ என்ற பெயரில் புதியதொரு பண் பாடினார் சம்பந்தர். "மாதர் மடப் பிடியும்" எனத் தொடங்கும் தேவாரப் பாடல் இந்த அபூர்வமான பண்ணிசையில் அமைகிறது. சம்பந்தர் பாடிய இந்தப் புதிய பண் இசையை யாழில் மீட்ட இயலாது வருந்தினார் திருநீலகண்ட யாழ்ப்பாணர்.