5.1சந்தம் - சொல் பொருள் விளக்கம்

    சந்தம் என்ற சொல்லுக்கு அழகு, ஒலியின் வண்ணம் என்று பொருள் குறிப்பிடப்படுகிறது. சந்திக்கும் தன்மை சந்தமாகும். ஓசை அலை போல் மீண்டும் சந்திப்பதால் இதற்குச் சந்தம் என்ற பொருள் வந்தது என்று தமிழிசைக் கலைக் களஞ்சியம் (தொ.II,ப.274)குறிப்பிடுகின்றது. ‘சந்தஸ்’ என்ற வடசொல்லின் திரிபாகவும் கூறுவர். (முனைவர். இ. அங்கயற்கண்ணி திருப்புகழ்ப் பாடல்களில் சந்தக் கூறுகள் ப.362) இதனைத் தொல்காப்பியர் வண்ணம் என்கிறார் . சந்தம் என்ற சொல் வண்ணத்தைக் குறிக்கும்.

5.1.1 வண்ணம்

    வண்ணம் என்பது ஓசையின் நிறம் (tonal colour) என்று பொருள்படும். இது இருபது வகைப்படும் என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகள் 34-இல் வண்ணமும் ஒன்று என்கிறார். இவ்வண்ணங்களுள் நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம் இம்மூன்றும் குறில், நெடில் எழுத்துகள் பாடல்களின் இடம்பெறும் நிலையை வைத்துப்பெயரிடப்படுகின்றன.

    குறில் எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வருவதனைத் தொல்காப்பியம் குறுஞ்சீர் வண்ணம் என்கிறது.

குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்
            (தொல். பொருள் 213)

எடுத்துக்காட்டு:

பொழில் தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
            (சிலம்பு 7:14)

    நெடில் எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வரும் நிலையில் அமைவதனை நெடுஞ்சீர் வண்ணம் என்கிறது.

நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்             (தொ.பொ.212)
வாராயோ தாயே - பாதம் தாராயோ நீயே - (கீர்த்தனை)

சித்திர வண்ணம்    

நெடியவும் குறியவும் நேர்ந்துடன் வருமே
            (தொ.பொ.214)

    நெட்டெழுத்தும், குற்றெழுத்தும் சார்ந்து வருவதனைச் சித்திர வண்ணம் என்று குறிப்பிடுகின்றது.

பாதி மதிநதி போது மணிசடை - திருப்புகழ்

    ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த எழுத்துகள் அதிகம் பயின்று வரும் தன்மையை வைத்து வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணங்கள் அமைந்துள்ளன.

    பாட்டில் வல்லெழுத்துகள் மிக்கு வருவதனை வல்லிசை வண்ணம் என்பர்.

வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே
             (தொ.பொ.208)
புற்றரவு பற்றியகை நெற்றியது மற்றொருகண்
ஒற்றை விடையன் (சம்பந்தர் தேவாரம். 3:68:2)

    மெல்லெழுத்துகள் மிக்கு வருவதனை மெல்லிசை வண்ணம் என்பர். “மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே” (தொல்.பொருள். 209) இடையின் எழுத்து மிக்கு வருவதனை இயைபு வண்ணம் என்பர்.

இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே
             (தொ.பொ.210)

    இவ்வாறு பாடலில் மிக்கு வரும் எழுத்துகளால் இவ்வண்ணங்கள் பெயரிடப்படுகின்றன.

  • எழுத்தளவு

    தமிழ்ச் சந்தங்கள் எழுத்தளவு கொண்டவை.

ஈரெழுத்து அளவுச் சொற்கள்:

    தா - தத்;
    தா - தந்;

மூவெழுத்து அளவுச் சொற்கள்:

    தத், த - ததா;

    தந், த - தந்தா;
    தன், ன - தன்ன;

நான்கெழுத்து அளவுச் சொற்கள்:

    தைய்யா - தையா;

    தனத், த - தனத்;
    த - தனந் - த;

    தமிழிசைக் களஞ்சியம்
இவற்றில் மூன்றன் எழுத்தளவும் நான்கன் எழுத்தளவும் தென்னக இசையின் அடிப்படை என்கிறது.

5.1.2 சந்தவண்ணச் சொற்கள்

    சந்த வண்ணச் சொற்கள் பற்றித்
தேவாரத்தில் காணப்படுகிறது.

    தேவாரத்தில் சந்த வண்ணச் சொற்கள் தென்னா என்று அழைக்கப்படுகின்றன.

தென்னவென்று வரிவண்டிசை செய் திருவாஞ்சியம்
                (2-7-1)
தென்னாத் தெனாத் தெத்தெனா வென்று பாடி
                (7-2-6)

    இசை நிகழ்வில் ஆளத்தி (ஆலாபனை) செய்யும் பொழுது தென்னா என்றும், தெனா என்றும் இசைப்பர். இச்சொற்களின் திரிபாக, தன, தானா என்ற சொற்கள் சந்த இசைச் சொற்களாக மருவி வந்திருக்கும்.

  • சந்த விருத்தப் பாடல்கள்

    வைணவ இலக்கியமான நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் பன்னிருஆழ்வார்களுள் ஒருவரான திருமழிசையாழ்வார் பாடிய பாடல்திருச்சந்த விருத்தம் என்று அழைக்கப்படுகின்றது. இவை சந்தமிக்க இனிய ஓசை யுடையன. தாளக் கட்டமைப்புச் செறிவுடையன.

ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்ல வற்று ளாயு மாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்தும்ஆகி அந்த ரத்த ணைந்துநின்று
ஐந்து ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே
                (நாலா:754)