6.2 மதுரை பொன்னுச்சாமி முத்துக்கருப்பப் பிள்ளை, அலமேலு அம்மையாரின் மகனாக 1887 ஆம் ஆண்டில் பொன்னுசாமி பிறந்தார். இவரது தந்தையார் முத்துக்கருப்பப் பிள்ளையின் நாகசுர இசையில் மகிழ்ந்த எட்வர்டு மன்னர் நூறு வெள்ளி நாணயங்களைப் பரிசாக அளித்தார். தமது தந்தையாரிடம் நாதசுரப் பயிற்சியைப் பொன்னுசாமி பெற்றார். பிறகு மதுரை சௌந்தர பாண்டியன் நாதசுரக்காரரிடமும், கும்பகோணம் நாராயண நாயனக்காரரிடமும் பயிற்சி பெற்றார். எட்டயபுரம் இராமச்சந்திர பாகவதரிடம் பாட்டும் வீணையும் பயின்றார். 1895ஆம் ஆண்டு முதல் கச்சேரி செய்யத் தொடங்கினார். மைசூர் அரண்மனையில் அவைக்களக் கலைஞராகவும் விளங்கினார். 1904ஆம் ஆண்டில், தாம் வசித்த தெருவில் சங்கீத ரத்ன விநாயகர் கோயில் ஒன்றைக் கட்டினார். இந்நிலையில் தமிழ்ப் புலமையும், இசை வளமும் பெற்ற இவர் சிலப்பதிகாரத்தையும், அதன் உரையையும் நன்கு பயின்றார். இதன் விளைவாகப் பூர்வீக சங்கீத உண்மை என்ற இசைத் தமிழ் ஆய்வு நூலொன்றை வெளியிட்டார். தாம் எழுதிய இசைத் தமிழ் ஆய்வு நூலிற்கு பூர்வீக சங்கீத உண்மை என்று பெயரிட்டார். சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் நிலவிய இசை பற்றிய உண்மைகள் பல மறைக்கப்பட்டன ; மாற்றப்பட்டன. இவற்றை மீண்டும் கொண்டு வருவதே இந்நூலின் நோக்கம் என்றும், இதனால் இதற்குப் பூர்வீக சங்கீத உண்மை என்று பெயரிடப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பூர்வீக
சங்கீத உண்மை என்ற நூல் ஐந்து பகுதிகளைக்
கொண்டுள்ளது. இதில் 32 தாய் இராகங்களே உண்மையானவை என்றும் விளக்கியுள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்கு மைசூர் மன்னரின் உதவியோடு சென்று அம்மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் இவர் கூறிய தாய் இராகம் 32 என்கிற கொள்கை விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. |