தெருக் கூத்தாக இருந்த நாடகம் மேடையில் தொழில்முறை நாடகமாக ஆகிப் பின் பயில்முறை நாடகக் குழுக்களால் விரிவுபட்டது. புராண வரலாற்று நாடகங்களின் எண்ணிக்கை குறைந்து, சமூக நாடகங்களின் எண்ணிக்கை மிகுதிப்பட்டது. 1941-1950 வரையான காலத்தில் புராணக்கதைகளை நாடகமாக்கும் போக்கு, குறைந்தது. மாறாக வரலாற்று நாடகங்கள், தமிழர் வீரத்தைக் காட்டும் வகையில் நிகழ்த்தப்பட்டன. தேசிய இயக்கம், விடுதலை உணர்வை நாடகங்கள் வழியாகப் புலப்படுத்தியது; திராவிட இயக்கம், பகுத்தறிவுக் கொள்கைகளைப் புலப்படுத்தியது. அரசியலிலும் சமூகத்திலும் காணும் ஊழல்கள் புலப்படுத்தப்பட்டன. 1951-1960 வரையான காலத்தில் பல வகையான கருக்களைக் கொண்டு நாடகங்கள் உருவாக்கப்பட்டன. சமுதாய உணர்வு இவற்றின் மையமாக இருந்தது. திராவிட இயக்கச் சிந்தனைகளும் தமிழுணர்வும் தொடர்ந்தது. மொழிபெயர்ப்பு நாடகங்களும் வளர்க்கப்பட்டன. 1961-1970 வரையிலான காலத்தில் சமூகத்தின் பல பகுதியினர் பற்றிய செய்திகளும் சமூகப் பிரச்சினைகளும் நாடகங்களில் பேசப்பட்டன. மொழிபெயர்ப்பு நாடகங்கள் மிகுதிப்பட்டன. பொதுவுடைமை இயக்க நாடகங்களும் உருவாயின. 1971-1980 வரையிலான காலத்தில் சமுதாயச் சீர்திருத்தத்திற்கு அழுத்தம் தரும் நாடகங்கள் படைக்கப்பட்டன. தலைமுறை இடைவெளி பற்றிய கருத்துகள் பேசப்பட்டன. மக்களாட்சியில் காணும் குறைகள் வெளிப்படுத்தப்பட்டன. மேடை மரபுகளை மீறிய பல நாடகங்கள் எழுதப்பட்டு மேடையேற்றப்பட்டன. மூன்றாம் அரங்கம் என்ற கருத்து வளர்க்கப்பட்டது. இந்த அடிப்படையைக் கொண்டு நாடகக் குழுக்களும் உருவாயின. 1981-90 வரையிலான காலத்தில் நவீன நாடகப்போக்கு வளர்ச்சி பெற்றது. வீதி நாடக இயக்கம் வளர்ந்தது. தேசிய அடையாளத்துடன் நாடகங்கள் உருவாக்கப்பட்டன. அரசியல் சீர்கேடு, பொருளாதாரச்சீர்கேடு, வேலையில்லாத் திண்டாட்டம், சாதிக்கொடுமை, மனித உரிமைப் பாதிப்பு, மனித இன ஏற்றத்தாழ்வு, வரதட்சனைக் கொடுமை, புரட்சியை வரவேற்றல் முதலான கருத்துக்கள் நாடகங்களில் இடம்பெற்றன. நவீன நாடகக் குழுவினர் பலர் தொலைக்காட்சிக்குச் சென்றனர். ஆயினும் பல்வேறு நாடகக்குழுக்கள் ஆங்காங்கே உருவாகின. 1991 முதல் இன்று வரையிலும் சில நாடகக்குழுக்களாலும் தன்னார்வ நிறுவனங்களாலும் சங்கீத நாடக அகாதமியின் முயற்சியாலும் பல நாடகங்கள் நடத்தப்படுகின்றன. இதுவரையான தமிழ் நாடகங்களைத் தன்மை அடிப்படையில் பகுக்க முடியும். அவற்றில் முனைப்பான போக்குகளை அங்கத நாடகம், பொழுதுபோக்கு நாடகம், நகைச்சுவை நாடகம், சோதனை நாடகம், வீதி நாடகம், புதிய அரங்கம் என்று அடையாளங்கண்டு இப்பாடத்தில் விளக்கம் பெறலாம். |