நவீன நாடக ஆசிரியர்கள் படிப்பதற்கென்று நாடகங்களைப் படைப்பதில்லை. அரங்கத்தில் நிகழ்த்துவதற்கேற்ற முறையிலேயே படைக்கிறார்கள். படிப்பதற்கென்று நாடகங்கள் எழுதுவது பேராசிரியர் சுந்தரம் பிள்ளை படைத்த மனோன்மணீயம் தொடங்கி நிகழ்கிறது. இவையே நாடகங்கள் எனக் கல்விக் கூடங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன. அடிப்படையில் நாடகம் நடிப்பதற்கானது. இதை நவீன நாடக ஆசிரியர்கள் மனத்திற்கொண்டு படைக்கிறார்கள். உலகின் தலைசிறந்த நாடகாசிரியர்கள் தங்கள் படைப்புகளை அரங்க நிகழ்விற்கானவையாகவே படைத்திருக்கிறார்கள். புத்தகமாக இருக்கும் நாடகத்தைப் படிக்கும் வாசகரைவிட மேடையில் அதே நாடகத்தைக் காணுகிற பார்வையாளர் பாத்திரங்களோடு ஒன்றிவிட முடியும்; கதை நிகழ்ச்சிகளில் ஒன்றிவிட முடியும்; உண்மை நிகழ்வைப் பார்த்தது போன்ற மன அழுத்தம் பெற முடியும். நாடகமாகப் பார்க்கும் போது வாய்விட்டுச் சிரிக்கவும் சோகம் கொள்ளவும் அதிர்ச்சி கொள்ளவும் அச்சம் கொள்ளவும் முடியும். எழுத்தில் எழுத முடியாத பலவற்றையும் நடிகர்கள் படைத்துக்காட்ட முடியும். முகபாவம், நேர ஒருங்கிசைவு (Timing) முதலானவற்றால் எழுத்தில் இல்லாதவற்றையும் படைக்கமுடியும். வசனமே இன்றிச் சிரிக்கவைக்க முடியும். வசனமே இல்லாத பாவனை நாடகங்களின் (mime theatre) அடிப்படை இதுதானே. ஒரே நாடகம் பலமுறை படிக்கப்படும் போது வேறுபாடு தெரிவதில்லை. ஆனால் நாடகம் நடிக்கப்பட்டால் ஒவ்வொரு முறையும் வேறுபட்டதாக இருக்கும். வேறு குழுக்கள் நடிக்கிற போது வேறுபாடு மிகுதிப்படும். நாடகப்படைப்பு வாசகன் உறவைத்தாண்டிப் பார்வையாளனின் உறவை நாடுகிறது. நாடக எழுத்து ஒரு வாசகனால் வாசிக்கப்படுவதாலேயே முழுமை அடைவதில்லை. தேர்ந்த வாசகனான இயக்குநரால் வாசிக்கப்பட்டு அவரது படைப்பாற்றலால் மேடையில் நிகழ்த்தப்பட்டு நுகரப்படும்பொழுதே முழுமை அடைகிறது. ஆசிரியன் வாசகன் உறவைத் தாண்டி இயக்குநர் உடையமைப்பாளர், ஒப்பனையாளர், மேடை அமைப்பாளர், இசையமைப்பாளர், ஒலியமைப்பாளர், நாடக நடிகர்கள், பார்வையாளர்கள் எனப் பலரின் கூட்டுறவைக் கொண்டது அரங்கக்கலையான நாடகம். இந்தக் கூட்டுறவு, நாடகத்தை வாசிப்பு வடிவத்திலிருந்து நிகழ்த்து கலை வடிவத்திற்கு மாற்றுகிறது. நாடகப்பிரதியில் இலக்கிய மொழி, மேடைமொழி என இரு பகுதிகள் செயல்படுகின்றன. நாடகத்தின் இலக்கிய மொழி பாத்திரங்களின் வளர்ச்சியையும் நிகழ்வுகளின் வளர்ச்சியையும் கட்டுக்கோப்பான உரையாடல்கள் மூலம் காட்சிப்படுத்துவதாக இருக்கிறது. மேடைமொழி என்பது வரைவுகள் வண்ணங்கள் வடிவங்கள் முதலான காட்சிக் கூறுகளையும் தாளம் லயம் இசை முதலான கேள்விசார் கூறுகளையும் நடிப்பு சைகை முதலான நிகழ்வுசார் கூறுகளையும் கொண்டு படைப்பை அழகியல் அனுபவமாக மாற்றுவதாக இருக்கிறது. நாடகப்பிரதி அரங்கில் உடலசைவுகள், பேச்சு, மேடையமைப்பு, அலங்காரம், ஒலிகள் ஆகியவற்றைக் கொண்டு காட்சியாக நிகழ்த்திக்காட்டப்பட வேண்டியது என்பதோடு பார்வையாளன் நாடகத்தைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வையும் ஏற்படுத்தவேண்டும் என்பதையும் நவீன நாடகப்படைப்பாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஒப்பனையும் ஆடையும் வசீகரத்திற்குப் பயன்படுவதற்கு மாறாகப் பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்த உதவவேண்டும் என உணர்ந்திருக்கிறார்கள். நடிகன் நாடகப்பிரதியின் உள்தளங்களை அறிந்து நடிக்க வேண்டும் என உணர்ந்திருக்கிறார்கள். |