3.8 உள்ளடக்கங்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுதல்

     நாடகக் கதைகளின் உள்ளடக்கங்கள் காலம் சார்ந்தும் இடம் சார்ந்தும் வடிவம் சார்ந்தும் பார்வையாளரைச் சார்ந்தும் மாறிவந்திருக்கின்றன. சென்ற நூற்றாண்டில் தெருக்கூத்து நாடகம் செல்வாக்காக இருந்தது. புராணக்கதைகளும் நாட்டார் கதைகளும் கூத்துகளாக நிகழ்த்தப்பட்டன. சடங்கு சார்ந்தும் திருவிழா சார்ந்தும் கூத்துக்கதைகளின் உள்ளடக்கம் தீர்மானிக்கப்பட்டது. கூத்து வாத்தியார்கள் கூத்துகளை எழுதியிருக்கிறார்கள். சில பிரதிகள் அச்சில் பெரிய எழுத்து நூல்களாக வெளியிடப் பட்டிருக்கின்றன. கூத்தின் சடங்கு அம்சங்களை நீக்கிப் புராணக்கதையின் சுவையான பகுதியை மட்டும் மேடை நாடகங்களாக ஆக்கியவர் சங்கரதாஸ் சுவாமிகள். நகர வாழ்க்கையை மேற்கொண்ட மக்களுக்கான நாடகங்களை உருவாக்கியவர் பி.வி. ராமசாமி ராஜு பாடல்களை நீக்கி உரைநடைப்படுத்திய இவரது சமூகக் கதை உள்ளடக்கம், மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. இதனை வளர்த்தவர் பம்மல் சம்பந்த முதலியார். கல்வி, செல்வம், வீரம், கற்பு, இறையருள், தத்துவம், ஒழுக்கம் எனப் பலவற்றையும் விவாதித்தார்.

     நாடகம் எதிர்ப்புணர்வின் குரலாக வெள்ளையரை எதிர்த்து விடுதலைக் குரலை உள்ளடக்கமாகக் கொண்டது. பாடல்களும் வசனங்களும் உருமாறின. திராவிட இயக்கத்தவருக்குப் பிரச்சாரக் கருவியாகவும் திகழ்ந்தது. மதிப்பீடுகளின் களமாகவும் பிரச்சினைகளின் களமாகவும் நாடகம் ஆயிற்று.

     நவீனத்துவம் இது வரையிலான நாடக மரபைக் கேள்விக்குள்ளாக்கியது. புதிய சமூகக் கருதாக்கங்களின் களமாக மாறி அனைத்தையும் விமர்சனம் செய்தது. வாழ்க்கை மதிப்புகளையும் பண்பாட்டு மதிப்புகளையும் கேள்விக்குள்ளாக்கியது. சமூகத்தின் கலகக் குரலாக அது வெளிப்பட்டது. நவீனம் என்பது ஒரு வேறுபட்ட பார்வை என்பதும் சொல்லப்படாததைச் சொல்வது என்றும் பார்த்தோம். அந்த வகையில் புதிய உள்ளடக்கங்கள் கொண்டவையாக நவீன நாடகங்கள் அமைந்துள்ளன.

     வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்குமான திரை விலக்கப்பட்டு மேற்பூச்சு இல்லாத பார்வையில் நாடகம் உண்மைகளை வெளிப்படுத்தியது. நாடக இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்களான இந்திரா பார்த்த சாரதி, ந. முது சாமி, ஜெயந்தன், பிரபஞ்சன், ஞாநி முதலானவர்களின் நாடகங்கள் சமூக முரண்பாடுகளையும் நடுத்தர வர்க்கத்தினரின் மனக்குழப்பங்களையும் பேசுகின்றன. வரலாறுகள் மறுபார்வையில் புதிய அர்த்தம் கொள்கின்றன. சமகாலத்தின் முகமிழந்த விளிம்பு நிலையினர் நாடகங்களில் இடம்பெற்றனர். முத்துசாமியின் நாடகத்தில், அரசியல் விளையாட்டாகிப்போன அவலம் அங்கதமாகப் பேசப்பட்டது. தலைமுறை இடைவெளிகள் கேலிக்குள்ளாக்கப் பட்டன. பிறரது நாடகங்களில் கிராம மதிப்பீடுகளின் இழப்பு பேசப்படுகிறது. இடதுசாரி எண்ணங்களும் தலித் உணர்வுகளும் பெண்ணிய எழுச்சியும் பேசப்படுகின்றன. போரின் வன்முறை, அபத்த வாழ்வின் இயலாமை, ஆண் பெண் உறவுத் தயக்கங்களின் விளைவுகள், இருப்புக்கான சக மனிதனின் போராட்டம், என நவீன நாடகங்களின் உள்ளடக்கங்கள் தொடர்ந்து நிகழ்காலத்தை பரிசீலனைக்கு உட்படுத்துகின்றன. வாழ்க்கை குறித்த கண்ணோட்டங்களையும் சிந்தனையோட்டங்களையும் இந்நாடகங்கள் புலப்படுத்துகின்றன.