கதை தழுவி வரும் ஆட்டமும் பாடலும் நிறைந்த
நாடகத்தை நாட்டிய நாடகம் என்பர்.
நாட்டியம் + நாடகம் = நாட்டிய நாடகம்
இதனைப் பண்டையோர் கூத்து என்று அழைத்தனர்.
கூத்து ஆடுபவரைக் கூத்தர் என்றனர்.
5.1.1 கூத்து
கூத்து என்பது பல்வேறு ஆடல்களைக் குறிக்கும்
சொல்லாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கூத்துகள்
ஏழுவகை என்பர். இவற்றிற்கு முரணான கூத்துகளும் உள.
- வசைக்கூத்து x புகழ்க்கூத்து
- வேத்தியல் x பொதுவியல்
- வரிக்கூத்து x வரிச்சாந்திக்கூத்து
- சாந்திக்கூத்து x விநோதக்கூத்து
- தமிழ் x ஆரியம்
- இயல்புக்கூத்து x தேசிக்கூத்து
- வெறியாட்டு
இவைகளில் முதல் ஆறும் இரண்டு வகைகளாக இணைந்து
விளங்கும். வசைக்கூத்து என்பது ஒருவரை வசைப்படுத்திக்
கூறுதலாகும். இதற்கு முரண்பட்டதாக ஒருவரை ஏற்றிப் பாடுதல்
புகழ்க் கூத்தாக அமையும். வேந்தன் முன்னால் ஆடிக் காட்டும்
கூத்து வேத்தியல் என்றும் பொதுமக்கள் முன்னர் ஆடிக்காட்டும்
கூத்து பொதுவியல் என்றும் அழைக்கப்பட்டன. தலைவனுடைய
சாந்த குணங்களைப் பாடுவது வரிக்கூத்து எனவும்,
தலைவனுடைய சாந்த குணங்களை மாற்றிப் பாடுவது
வரிச்சாந்திக் கூத்து எனவும் அழைக்கப்படுகின்றன. தலைவன்
இன்பமாக நின்றாடியது சாந்திக்கூத்து என்றும், இதற்கு
முரண்பட்ட நிலையில் நின்றாடுவது விநோதக் கூத்து என்றும்
அழைக்கப்பட்டன. ஆரிய நாட்டினர் வந்து ஆடிக் காட்டும்
கூத்து ஆரியக் கூத்து என்றும், தமிழ்நாட்டவரின் கூத்து
தமிழ்க்கூத்து எனவும் கூறப்பட்டன. இயல்பாக ஆடும் ஆடலை
இயல்புக் கூத்து என்றும் தன் தேசத்திற்கு உரியவைகளை
ஆடிக் காட்டுவதனைத் தேசிக் கூத்து என்றும் குறிப்பிட்டனர்.
தெய்வமேறி ஆடும் ஆடலை வெறியாட்டு என்றனர்.
கலைகளைப் போற்றி வாழும் கலைஞர்களில் பாணர்,
பொருநர், கோடியர், கிணையர், வயிரர், யாழோர், பறைவினைஞர்,
விறலி போன்றோரைப் பற்றிச் சங்க இலக்கியங்கள்
குறிப்பிடுகின்றன. பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை
இரண்டும் பாணர் பெயராலும் பொருநராற்றுப்படை பொருநர்
பெயராலும் மலைபடுகடாம் கூத்தர் பெயராலும்
அழைக்கப்படுகின்றன. இத்தகு கலைஞர்களில் ஆடற்கலை
வல்லபம் பெற்றவர் கூத்தர் என்றும், விறலியர் என்றும்
அழைக்கப்பட்டனர்.
கூத்தாடும் வல்லபம் நிறைந்த இக்கூத்தர்கள் ஆடுகளம்
அமைத்து ஆடுவர் என்பதனை, புறநானூறு குறிப்பிடுகின்றது.
கூத்தர் ஆடுகளம் கடுக்கும் (புறம் - 28 : 13)
இவர்கள் கோடியர் என்பவருடன் இணைந்து கூத்துத் தொழில்
புரிந்தமையை அகநானூற்றுப் பாடல் வழியாக அறிய முடிகின்றது.
ஆடல் வல்லானைச் சைவ இலக்கியங்கள் கூத்தன்
என்றும், அம்பலத்தாடும் கூத்தன் என்றும், கூத்திறை என்றும்
கூறுகின்றன. ஆடற்கலையின் வழிபடு தெய்வமாக இவர்
போற்றப்படுகிறார்.
கூத்தை அக நிலையிலும், புறநிலையிலும் நாயன்மார்கள்
கண்டனர். திருமூலரும் காண்கிறார். இதனைத் திருமந்திரம்
ஒன்பதாம் தந்திரத்தில் விளக்கியுள்ளார்.
எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே (2674)
எங்கும் சிவம் விளங்குகிறது. எங்கெங்கும் அவனருள் கூத்தே
விளங்குகிறது. இக்கூத்தினைச் சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து,
அற்புதக் கூத்து என்று வகைப்படுத்துவர்.
5.1.2 கூத்தநூல்
சிலப்பதிகார உரை வாயிலாக அறியப்படும் நூல்களுள்
கூத்த நூல் என்பதும் ஒன்றாகும். சாத்தனார் எழுதியது. இது
கூத்து பற்றிக் கூறும் இலக்கண நூலாகும்.
பண்ணின் சிறப்பினைப் பாடலும், பாடலின் போக்கைத்
தாளமும், தாளத்தின் அமைப்பில் ஆடலும் இணைந்து சிறந்து
விளங்கும் என்பதனை,
பண்வழி நடக்கும் பாட்டின் போக்கும்
பாட்டின் வழியே தாளம் பயிலும்
தாள வழியே காலடி தட்டும்
என்று கூத்த நூல் குறிப்பிடுகிறது. இசை இறைவனோடு
தொடர்புடையது என்றும் சிவபெருமானின் தாண்டவத்தின்
பொழுது எழுந்த உடுக்கை ஒலியிலிருந்து இசை உருவாகியது
என்றும், இசையிலிருந்து ஆட்டம் தொடங்கியது என்றும் கூத்தின்
தொடக்கத்திற்கு இசையே மூலம் என்றும் குறிப்பிடுகின்றது.
இவ்வாறு கூத்து பற்றிப் பல கருத்துகள் உள. நாடகச்
சாலையைக் கூத்துக் களரி என்றும், கூத்திடுவோனைக்
கூத்துக்காரன் என்றும், நாடகப் பாடலைக் கூத்துப்பாடல் என்றும்,
நாடக மாந்தர்களை அவைக்குள் அறிமுகம் செய்தலைக்
கூத்துள்படுதல் என்றும், ஆடலாசானைக் கூத்துப் பாடுவோன்
என்றும் குறிப்பிடுவர். நாட்டிய நாடகக் களஞ்சிய ஆசிரியர்
கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியம் குறிப்பிடுவது போல, கதை
தழுவிய கூத்தே நாடகம் எனப்பட்டது. பழங்காலத்தில் நாடகம்
என்பது நடன நாடகமாக அதாவது இசையும், ஆடலும், வசனமும்
இணைந்ததாகவே விளங்கியது. ஆடல், பாடல், கவிநயம் இணைந்து,
கதையைத் தழுவி மக்களைக் கவரும் கூத்து வகையே நாட்டிய
நாடகமாக இன்று திகழ்கிறது.
|