எந்த ஒரு கலையும் நாட்டுப்புறக் கலையாக விளங்கி,
பிறகு செவ்வியல் கலையாக மாறும்.
நாட்டுப்புறக் கலை
இயற்கையை ஒட்டியது. செவ்வியற் கலை செயற்கை ஆக்கம்
பெற்றது. மகிழ்ச்சி வெளிப்பாட்டின் செயற்பாடாக ஆடற்கலை
அமைகிறது. நாட்டுப்புற ஆடற்கலையில் அதன் உணர்வோட்டம்
முதலிடம் பெறும். இப்படித்தான் ஆட வேண்டும்; இத்தகு ஆடல்
முறைகளைப் பயன்படுத்த வேண்டும்; இத்தகு கரண நிலைகளை
மேற்கொள்ள வேண்டும்; இத்தகு தாள அமைதியோடு ஆட
வேண்டும்; இத்தகு பண்ணுக்குரிய நிலையில் ஆடப்பட வேண்டும்;
இவ்வகையான அவிநயங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற
நிலைகளை அறிந்து கொண்டு நாட்டுப்புற ஆடல்கள்
ஆடப்படுவதில்லை. ஆனால், மேற்கூறிய அனைத்துப் பண்புகளும்
ஓரளவில் ஆடுபவர்கள் அனுபவங்களின் வாயிலாகப் பெற்று
ஆடுவர். இவர்கள் ஆடலில் ஆடல் இலக்கணங்கள் இரண்டாம்
நிலை பெற்று விடும். ஆனால் செவ்வியல் ஆடல்கள் இலக்கண
வரம்பிற்கு உட்பட்டவை. செவ்வியல் ஆடல்
உணர்வோட்டத்துடன் இலக்கண வரையறைகளையும்
மேற்கொண்டு ஆடப்படும் ஒரு கலையாகும். இலக்கண
வரையறைக்குட்பட்டதாக அமையும் பொழுது கற்பித்தலும்,
உணர வைத்தலும் முக்கியப் பங்கு பெறும்.
ஆடற்கலையில் நாட்டுப்புற
ஆடல்களாக அமையும்
கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம்,
மயிலாட்டம் ஆகிய நாட்டுப்புற ஆட்டங்கள்
இப்பாடப்
பகுதியில் கூறப்பட்டுள்ளன.
|