4.4 காலமும் இடமும்
காலம், இடம் எனும் தளங்களை ஒட்டி, இலக்கியத்தின்
மொழி எவ்வாறு கவனிக்கத் தகுந்ததாக உள்ளது என்பதைப்
பார்ப்போம்.
4.4.1 காலமும் மொழியும்
மொழி வெளிப்படுகின்ற தளம் மற்றும் அதனால்
வெளிப்படுத்தப்படும் தளம் காலம் ஆகும் (மற்றொன்று - இடம்).
குறிப்பிட்ட இலக்கியம் எந்தக் காலத்தில் தோன்றியதோ, அந்தக்
காலப் பகுதியின் மொழிநிலையை அது சார்ந்திருக்கும்.
காட்டாகச், சங்க இலக்கியம் என்பது, கி.மு.மூன்றாம்
நூற்றாண்டுக்கு முந்திய சங்க காலத்து மொழியைச் சார்ந்து
இருக்கிறது. இப்படிக் கூறுவதில் நான்கு நிலைப்பாடுகள் உண்டு.
(அ) சிறு சிறு வேறுபாடுகள் இருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட
காலத்தின் இலக்கியங்களிலுள்ள மொழி நிலைகளையெல்லாம்
குறிப்பிட்ட ஒரே தளத்துக்குள் கொண்டு வந்து விடுகிறோம்.
(ஆ) இதனடிப்படையில் குறிப்பிட்ட காலத்து இலக்கியத்தின்
மொழியையும் மொழி நடையையும் மொழி வரலாற்றையும்
ஆராய்கிறோம்.
(இ) இலக்கிய வரலாறு காணவும் இத்தகைய பொதுவான
மொழித்தளம் நமக்கு உதவுகிறது.
(ஈ) குறிப்பிட்ட புலவர் அல்லது கவிஞர்களின் மொழிநடையை
அல்லது மொழித்திறனை ஆராயவும் காலத்தை மையமிட்ட
மொழித்தளம் நமக்கு உதவுகிறது.
அடுத்து, குறிப்பிட்ட இலக்கியம் தோன்றிய
காலம் அன்றியும், அந்த இலக்கியம் எந்தக் காலத்தின் சமூகத்தைப் பற்றிய
செய்தியைக் கூறுகின்றதோ, அதனுடைய காலத்து மொழியை, அந்த இலக்கியம்
சார்ந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, கல்கி
என்ற புகழ்பெற்ற வரலாற்றுப் புதின ஆசிரியர் எழுதிய ‘பார்த்திபன்
கனவு’ம் ‘சிவகாமியின் சபதமும்’ பல்லவர் காலத்தைத் தளங்களாகக்
கொண்டவை ; அதுபோல், ‘பொன்னியின் செல்வன்’ பிற்காலச் சோழர் காலத்தைத்
தளமாகக் கொண்டது. ஆனால், இந்தப் புதினங்கள், குறிப்பிட்ட அந்தக்
காலங்களின் மொழியை ஓரளவாவது சார்ந்திருக்கின்றனவா?
கதைமாந்தர்களின் பேச்சுக்கள் மூலமாகவாவது, வெளிப்படுகின்றனவா? என்று
பார்த்தால் மிகச் சில சொற்கள் தவிர வேறு அறிகுறிகள் இல்லை. இலக்கியத்
திறனாய்வு, இந்த நிலைகளையெல்லாம் பார்த்துத்தான் மதிப்பீடு செய்ய
வேண்டியிருக்கின்றது.
4.4.2 வட்டார மொழி
இலக்கியத்தின் மொழி, ஒரு பொதுவான தரம் கொண்ட
(standard and common language) மொழியையே,
பெரும்பாலும் தனது தளமாகக் கொண்டிருந்தாலும், உண்மைத்
தோற்றம் (appearance of reality) மற்றும் நடைத்திறன்
காரணமாக வட்டார மொழியையும் பிரதிபலிக்கின்றது.
தி.ஜானகிராமன் புதுமைப்பித்தன்
வட்டார மொழி (dialect) என்பது, முக்கியமாக இடம்
சார்ந்தது. குறிப்பிட்ட இலக்கியம் சித்தரிக்கின்ற சமுதாயம்,
எந்தப் பகுதியைச் சார்ந்ததோ, அந்தப் பகுதியில் வழங்குகின்ற
அல்லது அந்தப் பகுதியை இன்னதென அடையாளங்
காட்டுகின்ற மொழியையே அது தனது தளமாகக்
கொண்டிருக்கிறது. அந்த மொழியை வட்டாரமொழி என்கிறோம்.
இது மண்ணின் வாசனையோடு (regional colour) சேர்ந்தது,
மேலும் தற்காலத்தில் சில வட்டாரங்கள், வட்டாரமொழிச்
சித்தரிப்புக்கு உரியனவாகக்’ கருதப்படுகின்றன. குறிப்பாகச்
சென்னை (முக்கியமாகச் சேரிகள் அல்லது அடித்தள சென்னை
வாசிகள்), கொங்கு மண்டிலம், தஞ்சை, மதுரை, திருநெல்வேலிப்
பகுதி, செட்டிநாட்டுப் பகுதி, மேற்குக் குமரி மாவட்டப் பகுதி
முதலியவை. வட்டாரச் சித்தரிப்புக்கு உரியனவாகக் கருதப்
படுகின்றன. கொங்குமண்டிலத்தின் ஆர்.ஷண்முகசுந்தரம்,
தஞ்சைத் தரணியின் தி.ஜானகிராமன், நெல்லைச்சீமையின்
புதுமைப்பித்தன் முதலியோர் இவ்வகையில் குறிப்பிடப்பட
வேண்டிய வட்டார மொழி பயன்படுத்தி எழுதியவர்களுள் சிலர்.
இடம் அன்றியும் தற்காலத்தில் இனம் அல்லது சாதியும்
வட்டார மொழியின் தளத்துக்குள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
பிராமணர், வேளாளர், நகரத்தார் (செட்டியார்) கவுண்டர்,
நாயக்கர், சவுராட்டிரர் முதலிய இனங்கள் பற்றிய படைப்புகளில்
சாதி அடிப்படையிலான வட்டார மொழியைப் பார்க்கலாம்.
தலித்திய வாழ்க்கைச் சித்தரிப்புகளில் தலித் மொழி (பறையர்,
பள்ளர், அருந்ததியர்) இன்று உணர்வுடன் சித்தரிக்கப்பட்டு
வருகின்றது.
இதுவன்றியும் இன்று, ஆங்கிலம் கற்றோர் மற்றும் பாமரர்
என்ற வேறுபாடு, வட்டார மொழி என்ற அமைப்புக்குள் பெரிதும்
இடம் பெற்று வருகிறது.
இன்றைய இலக்கியத்தில் (முக்கியமாக - நடப்பியலை -
மையமிட்ட) - சிறுகதையிலும் புதினத்திலும் (ஆனால்
கவிதைகளில் இது, அரிது) வட்டார மொழி என்பது
முக்கியப்பங்கு வகிக்கிறது.
|