|
4.3 தத்துவவியல் அணுகுமுறை |
|
|
|
இலக்கியம் என்பது மனித வாழ்வியலையும் ஒழுக்க
நெறியையும் உள்ளடக்கியது. தத்துவம் இதனையே சுட்டுகிறது.
இதன் அடிப்படையில் இலக்கியங்களைத் திறனாய்வு செய்யும்
அணுகுமுறை தத்துவவியல் அணுகுமுறை ஆகும். தத்துவத்தை
எளிதாக அணுக முடியாத ஒன்றாகப் பலரும் நினைப்பர்.
தத்துவம் பல திறத்தது. மேலும் அது பல கிளைகளாய்ப் பிரிவது,
தமிழிலக்கியத்தில் மரபுவழித் தத்துவங்களும், நவீனத்
தத்துவங்களும் இழையோடிக் கிடக்கின்றன. அவற்றை
வெளிக்கொணர்வது வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்களை
அறியப் பயன்படுகிறது. இதற்கு வாசிப்பாளர் மிகுந்த
படிப்பாளியாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனினும்
கவனமாக ஊன்றிப் பார்த்தல் அவசியமாகும்.
|
|
|
|
4.3.1 தத்துவவியல் |
|
|
|
தத்துவம் என்பது மனிதனை நல்வாழ்வியலுக்கும்
ஒழுக்கவியலுக்கும் கைப்பிடித்து அழைத்துப் போகும் குணம்
கொண்டது. மனித சிந்தனைகளின் சாரமே, தத்துவம். மனிதன்,
தன்னையும் பிறரையும் புரிந்து கொள்ளவும், புரிந்து கொண்டு
முன் செல்லவும், பலதரப்பட்ட அனுபவங்களையும்,
நியாயங்களையும் அனுசரிக்கவும் கற்றுத் தருகின்றது தத்துவம்.
தத்துவத்தை இறுக்கமானதாகவும் மாறாப் பண்பினதாகவும்
எடுத்துக் கொள்ளக் கூடாது. வரலாற்றுக்கும் சமுதாய
அமைப்புகளுக்கும் ஏற்ப வேறுபட்டு, வளர்நிலைகளுடன்
அமையக் கூடியதுதான் தத்துவம்.
|
|
|
|
வாழ்க்கையின் பல நிலைகளைப் புரிந்து கொள்வதற்கும்
யதார்த்த அனுபவங்களுடன் முரண்படாமல் கால மாற்றத்தையும்,
கருத்தியல் மாற்றத்தையும் கற்றுக் கொள்வதற்கும் தேவையான
தருணத்தில் அவற்றோடு விவாதிக்கவும் தத்துவக் கல்வி
அவசியம். இதனைப் பிளேட்டோ வற்புறுத்துகிறார்.
|
|
|
|
4.3.2 தத்துவவியல் அணுகுமுறை - வரையறை |
|
|
|
தத்துவவியல் ஏனைய அறிவார்ந்த துறைகள் போன்று
திறனாய்வுக் கருத்து நிலைகளையும் வழிகாட்டுதலையும்
தருகின்றது. இன்று தத்துவப் பார்வை, திறனாய்வுக்கு
அவசியமான ஒன்றாக ஆகியுள்ளது. ஒரு கலைஞனும் சரி,
அவனுடைய படைப்பும் சரி, குறிப்பிட்ட தத்துவச் சார்பு
கொண்ட பண்பாட்டுத் தளத்துடன் தொடர்பு கொண்டவர்களே
என்பதைக் கருதுகோளாகக் கொண்டு செயல்படுவதே
தத்துவவியல் அணுகுமுறை எனப்படும்.
|
|
|
|
4.3.3 இந்திய, மேலைநாட்டுத் தத்துவ மரபுகள் |
|
|
|
ஏற்கெனவே சுட்டிக் காட்டியது போல், இனம், சமயம,் நாடு,
காலம் முதலியவற்றின் காரணமாகத் ‘தத்துவங்கள்’ மாறுபடும்.
எனவே, இந்திய நாட்டின் தத்துவங்களும் மேலைநாடுகளின்
தத்துவங்களும் ஒரே தன்மையின அல்ல. இந்திய சமயத் தத்துவம் வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்
உண்டாக்கப் பெற்றிருக்கின்றது. இந்தியத் தத்துவ மரபில்
முக்கியமாக, அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியன
மிகவும் அடிப்படையான விவாதங்களை முன்வைக்கின்றன.
ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைச் சைவ சித்தாந்தம்
என்னும் தத்துவம் விளக்குகிறது. தமிழிலக்கியத்தில்
இத்தத்துவங்களின் கூறுகளைப் பார்க்க முடியும்.
|
|
|
|
இந்தியத் தத்துவ மரபு போதிப்பது, ஓதுவது என்ற
பாவனையில் அமைந்தவை. மேலும் இந்தியத் தத்துவங்கள் பெரும்
மோதல்களையும் அழிவுகளையும் இறுதியாக முடிவுகளாக ஏற்றுக்
கொள்வதோ போதிப்பதோ இல்லை. அதனால்தான் இங்கே
கிரேக்கம் மற்றும் பின்னைய மேலைநாடுகளில் இருப்பது போல
அவல நாடகங்கள் இல்லை. அங்கே (கிறித்துவ சமயத்தில்)
பாவத்தின்சம்பளம் மரணம் ஆனால் இங்கே (இந்து சமயத்தில்) அதற்கு மாறாக, பாவத்தின் சம்பளம் மறுபிறப்பு ஆகும்.
பாவங்கள் அல்லது கர்மங்களுக்கு ஏற்பப் பிறப்புகள்
அமைகின்றன.
|
|
|
|
கன்ம பந்தமும் அதன் வழியிலான ஜன்ம பந்தமும் அழியப்
பெறும்போது கிடைக்கிற ஆன்மீக விடுதலையின் ஆனந்தக்
களிப்பே இந்தியத் தத்துவங்களில் மையமாக உணர்த்தப்படுகிறது.
இந்தியத் தத்துவமரபு, ‘அபூர்வ உண்மை’ அதனோடான
‘அனுபூதிநிலை’ என்பதான புனிதத்தை முன்னிலைப்படுத்தியது. இது
தத்துவத்தைச் சமய வகைக்குள் வைத்துப் பூட்டி விட்டது. தத்துவம்
என்றால் விமரிசனத்துடனான ஒரு தேடல் ; ஐரோப்பியர்
தத்துவங்கள் இதைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.
|
|
|
|
4.3.4 மார்க்சியமும் தத்துவமும் |
|
|
கார்ல் மார்க்ஸ் |
|
மார்க்சியம் இருபதாம் நூற்றாண்டில் கார்ல் மார்க்ஸால்
முன்வைக்கப்பட்டது. பொருளையும் அதன் இயக்கத்தையும்
முதன்மையாகவும் மூலமாகவும் கொண்டு உலகத்தையும் அதன்
வாழ்வியல் உத்திகளையும் விளக்குவது மார்க்சியம். சமூகம்,
வர்க்கமாகப் பிளவுபட்டிருப்பதை இனங்கண்டு விளக்குகிறது
இந்தத் தத்துவம்.
|
|
|
|
பொதுவாகத் தத்துவங்கள் என்பவை மனித வாழ்க்கை
உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவன. ஆனால் மார்க்சியம்
மட்டும் சமுதாய மாற்றத்தை முன் மொழிகிறது. மேலும் மார்க்சியம்
‘பொருள்’ (Matter) என்பதனை முதன்மையாகவும் உண்மையாகவும்
கொண்டு அமைகிறது.
|
|
|
|
ஏனைய தத்துவங்கள், கருத்து (Idea) என்பதனை
முதன்மையாகக் கொண்டு அமைபவை. எனவே, ஆன்மீகம்
மற்றும் அகவய உணர்வுகளை அவை முதன்மைப்படுத்துகின்றன.
தத்துவங்கள் ஆன்மீகத்தைக் கைக்கொண்டு மனிதன் தனது
அகத்தையும் புறத்தையும் வடிவமைத்துத் தர முடியும்,
செழுமைப்படுத்த முடியும் என்பதை வலியுறுத்துகின்றன. அக
வளர்ச்சியும் புற வளர்ச்சியும் சமூகத்தையும் உலகையும் மனிதர்
யாவரையும் இணைத்துப் பார்க்கும் அன்பு, கருணையுடன் இயங்க
முடியும் என்பது சமயத் தத்துவங்களின் உள்ளீடான விளக்கமாகும்.
|
|
|
|
4.3.5 தமிழ் இலக்கியமும் தத்துவமும் |
|
|
|
தத்துவவியல் அணுகுமுறையின் மூலம் இப்போது ஒவ்வொரு
படைப்பையும் மறுவாசிப்பு செய்ய முற்படுகிறோம். சமயச்
சார்பற்ற நேரடியான வாழ்க்கை முறைகளோடு சம்பந்தப்பட்டதாகச்
சங்க இலக்கியத்திலிருந்து தத்துவத்தைக் காண முடியும். மேலும்,
இந்தியத் தத்துவங்களின் விளக்கங்களின் பின்னணியில் பார்க்கிற
போதுதான் சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டத்தினுடைய
தேவையையும் சிறப்பையும் அறிய முடியும். தத்துவவியல்
அணுகுமுறை வாழ்க்கை ஒழுக்கங்களைக் கற்பிக்கப்
பயன்படுகின்றது.
|
|
|
|
மேலைநாட்டுப் புராணங்களையும், காப்பியங்களையும்
இந்தியச் சூழலில் பொருத்திப் பார்க்க முடியாது. நம்முடைய
தத்துவ அளவுகோல், நமது பண்பாட்டு அடிப்படையிலானது.
இதைப் போல் நம்முடையதும், அவர்களின் பார்வைக்குப்
பொருத்தமானதாக இருக்க முடியாது. ஆனால் காதல், காமம்,
குரோதம், அன்பு போன்றவை உலகம் முழுவதும் ஒத்தவை.
ஆனால் இவற்றைக் கொண்ட உறவுகளும், உரிமைகளும்
அவரவர்களுக்கானவை. எனவே, இவை பற்றிப் பேசும்
புராணங்களும் காவியங்களும் அவ்வவ் இனங்களோடு
சம்பந்தப்பட்டவை.
|
|
|
|
காப்பியங்களும், புராணங்களும் வாழ்வியலோடு
தொடர்புபடுத்தப்படும் கருத்தாக்கங்கள் உடையவை ;
அறக்கருத்துகளைப் பேசுபவை ; இச்சட்டகம், உலகம்
முழுமைக்கும் ஒன்றல்ல. இவை அனைத்தும் அந்தந்த இனக்குழுப்
பண்பாட்டின் அடிப்படையில் பிறப்பவை. இராமாயணம் எனும்
காப்பியத்தைப் பார்ப்பதற்கு விசிஷ்டாத்வைதம் என்னும் தத்துவம்
மிகவும் முக்கியமானது. இது கூறும் ‘சரணாகதி’ எனும்
கொள்கையே இராமாயணம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. அது,
இலக்குமணன், பரதன், அனுமன் முதலிய பலரிடம் பல
வடிவங்களில் வெளிப்படுகிறது. இராவணன் மூலமாகவும்
வெளிப்படுகிறது. |
|
|