|
6.3 சமுதாயவியல் அணுகுமுறை |
|
|
வெ.கனகசபைப்பிள்ளை |
|
தமிழில், பலரால் அறியப்பட்டதும், பின்பற்றப்படுவதும்,
சமுதாயவியல் அணுகுமுறை (Sociological approach) ஆகும்.
இது, இலக்கியத்தின் உள்ளடக்கம் பற்றியே அதிகம் அக்கறை
கொள்கிறது; அதனையே தளமாகக் கொள்கிறது. ஒரு சமுதாயவியல்
அறிஞன் செய்கிற வேலையை இந்த அணுகுமுறை மூலம்,
திறனாய்வாளன் செய்கிறான். சமுதாய வரலாறு எழுத இந்தத்
திறனாய்வுமுறை, பல சமயங்களில் அறிஞர்களுக்கு உதவுகின்றது.
தமிழ்ச் சமூக வரலாற்றுக்கு - முக்கியமாகப் பழந்தமிழ்ச்
சமூகத்தை அறிய - இந்த அணுகுமுறை பெருமளவில் துணை
செய்துள்ளது. வெ.கனகசபைப் பிள்ளை, கே.ஏ.நீலகண்ட
சாஸ்திரியார் முதலிய பல அறிஞர்கள் இவ்வாறு பல நூல்கள்
செய்துள்ளனர். |
|
|
|
6.3.1 சமுதாயவியல் அணுகுமுறை - விளக்கம் |
|
|
|
சமுதாயவியல் அணுகுமுறையின் அடிப்படைக்கருதுகோள்கள் பின்வருவன : |
|
|
|
(1) |
இலக்கியம் வெற்று வெளியிலிருந்து பிறப்பதில்லை;
குறிப்பிட்ட சமுதாயச் சூழலில்தான் அது பிறக்கிறது. |
(2) |
அவ்வாறு தோன்றும் இலக்கியம், ஒரு சமுதாய அமைப்பில்
இயங்குகிறது; ஒரு சமுதாயத்தை நோக்கிச் செல்கிறது;
அச் சமுதாயத்தினால் ஏற்கப்படவோ, புறக்கணிக்கப்படவோ
செய்கிறது. |
(3) |
ஒரு சமுதாயப் பின்புலத்தில் பிறக்கிற இலக்கியம், அந்தச்
சமுதாயத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ
புலப்படுத்துகின்றது. |
(4) |
படைப்பாளியின் சமுதாய நோக்கம், தேவை முதலியன
அவனுடைய இலக்கியத்தில் வெளிப்படுகின்றன. |
|
|
|
|
வாழ்வியல் நடைமுறைகளின் காரணமாக, சமுதாயத்தின் ஒரு
விளைபொருளாக அமைகிற (Social product) இலக்கியம்,
தோற்றம், பொருள், பயன்பாடு ஆகிய மூன்று நிலைகளிலும்
மனித குலத்தோடு நெருக்கம் கொண்டதாக விளங்குகின்றது.
சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தவும், விளைவு ஏற்படுத்தவும்
கூடியதாக இலக்கியம் அமைவதால், சமூகத்தில் அக்கறை கொண்ட
பலரும் இத்திறனாய்வின் பயன்பாட்டில் அக்கறை கொள்கின்றனர்.
முக்கியமாக, மார்க்சிய அறிஞர்கள், இந்தத் திறனாய்வு
முறையில் கவனம் செலுத்துவதோடு, மார்க்சிய மெய்ஞ்ஞானம்
காட்டும் முறையியலின் வழியாக, இலக்கியத்திற்கும்
சமுதாயத்திற்கும் உள்ள உறவுகளை விளக்குகின்றனர்.
சமுதாய மாற்றம், மார்க்சியவாதிகளால் முன் மொழியப்படுவதால்,
இலக்கியத்தைச் சமூகவியலின் அங்கமாகப் பார்ப்பது,
அவசியப்படுகிறது. |
|
|
|
6.3.2 சில அடிப்படைப் பண்புகள் அல்லது கோணங்கள் |
|
|
|
சமுதாயவியல் திறனாய்வு மிகவும் விசாலமானது ; மேலும்,
இது மிகவும் பழைமையானதும் அதே நேரத்தில் தொடர்ந்து
பரவலாகச் செய்யப்பட்டு வருவதும் ஆகும். எனவே, இது பல
கோணங்களில் (dimensions or angles) வெளிப்படுகிறது.
அவற்றுள், குறிப்பாகச் சமுதாயப் பின்புலம் (Social background)
காணுதல், மற்றும் குறிப்பிட்ட இலக்கியம் தோன்றுவதற்குக்
குறிப்பிட்ட பின்புலமே காரணம் என்ற முறையில் ஆராய்தல்
ஆகியவற்றை இங்குப் பார்க்கலாம். உதாரணமாக, தமிழ்ச்
சிறுகதைகளின் தொடக்க காலத்தில், விதவையர் சோகம்,
பால்ய விவாகத்தின் கொடுமைகள் முதலியவற்றை மிகுதியாகவே
காணலாம். காரணம், 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச்
சமூகத்தில், முக்கியமாகப் பிராமண இனத்தவரிடையே
பால்ய விவாகம், ஒரு சமூகக் கட்டாயமாக இருந்து வந்தது.
அந்தச் சோகமே, இத்தகைய கதைகள் தோன்றக் காரணம்; அதே நேரத்தில், அண்மைக் காலமாகத் தமிழ்ப் புனைகதைகளில்
அத்தகைய பாடுபொருளைக் காண்பதரிது. காரணம், அந்தச்
சூழ்நிலை இப்போது இல்லை. காலதாமதமாகத் திருமணமாகின்ற
முதிர்கன்னிகள் பிரச்சனை, இன்றையப் புனைகதைகளில்
இடம் பெற்று வருவதைப் பார்க்கலாம். மேலும், பெண்கள்
எழுச்சி மற்றும் பெண்ணியச் சிந்தனை பெருகி வருவதையும்
பார்க்கலாம்.
சமுதாய நிறுவனங்கள் (Social Institutions) பற்றிய சித்திரிப்பு:
திருமணம், தனிக்குடும்பம், கூட்டுக் குடும்பம், சமூக நியதிகள்
அல்லது எழுதப்படாத சட்டங்களும் மரபுகளும், சாதி
முதலியவை சமுதாய நிறுவனங்களாகும். இலக்கியத்தில் இவை
எவ்வெவ்வாறு இடம் பெற்றுள்ளன என்று கண்டறிவது
சமுதாயவியல் அணுகுமுறையில் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
அடுத்துச் சமுதாய மதிப்புகள் அல்லது விழுமியங்கள்
(Social Values) . இவை, பெரும்பான்மை மக்களால் அல்லது
செல்வாக்குப் பெற்ற சமூகக் குழுவினரால் இவையிவை நல்லன
அல்லது தீயன, கெட்டன அல்லது ஏற்புடையன என்று
நீண்டகாலமாக அங்கீகரிக்கப்பட்டு வருவனவாகும்.
|
|
|
|
எடுத்துக்காட்டாகக் காதல் என்பது தனிமனித
உணர்வுகளையும் நியாயங்களையும் சார்ந்திருக்கிற அதே
வேளையில் அது ஒரு சமுதாய மதிப்பாகவும் விளங்குகிறது.
எனவேதான் காதலை ஏற்பது, நிராகரிப்பது என்பன சமூக
நிகழ்வுகளாகி அமைகின்றன. நவயுகக் காதல் எப்படிப்பட்டதாக
இருக்கிறது. சாதியும் மதமும் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று
கிண்டல் செய்கிறார் கவிஞர் மீரா. குறுந்தொகைக் காதல்,
பெற்றோர் யார், ஊர் எது, உறவினர் யார் என்று பார்க்காமல்,
செம்புலத்தில் பெய்த மழைபோல் இருவர் மனமும்
கலப்பதாக இருந்தது. இப்போது? கவிஞரின் பார்வையில், |
|
|
|
உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர் |
|
|
|
நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார்
வகுப்புங் கூட |
|
|
|
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள் |
|
|
|
எனவே
செம்புலப்பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே. |
|
|
|
இவ்வாறு, காதல், ஒரு சமூக மதிப்பாக வெளிப்படுகிறது.
சமுதாயவியல் அணுகுமுறையில் இத்தகைய தகவல்கள்
வெளிப்படுத்தப்படுகின்றன. |
|
|
|
இவ்வாறு, சமுதாயத்தின் நிலைப்பாடுகளையும், அதன்
பல்வேறு அங்கங்களையும், அதன் நிறுவனங்களையும், அதன்
மரபுகளையும் சித்திரிப்பதும் விமரிசனம் செய்வதும் தொன்றுதொட்டு
இலக்கியத்தில் பல வடிவங்களில் காணப்பட்டு வருகிறது. மேலும்,
சமுதாயக் குழுக்கள், இருப்பிடங்கள், சமுதாய மாற்றங்கள்
முதலியன பற்றியும் இலக்கியங்கள் சித்திரிக்கின்றன.
இவற்றையெல்லாம் ஒரு முறையியலோடு அல்லது வழிமுறையோடு
திறனாய்வு செய்வது, சமுதாயவியல் அணுகுமுறையின் கடமையாக
அமைகிறது. |
|
|