3.2 சமய நூல்கள்

     பொதுவாக, இலக்கியப் பண்புகள் உடையவற்றை இலக்கியங்கள் என்ற பெயரால் அழைத்தாலும், சமய நிகழ்வுகளாலும் சமயக் கருத்துகளாலும் ஆதிக்கம் செலுத்தப்படுவனவற்றையும் அல்லது அவற்றையே மையப்படுத்துகிறவற்றையுமே சமய இலக்கியங்கள் என்று அழைப்பது மரபு. வைணவ சமய இலக்கியங்களும், பின்னால், இசுலாமிய, கிறித்துவ சமய இலக்கியங்களும் தமிழில் கணிசமாகக் கிடைக்கின்றன. இத்தகைய சமய இலக்கியங்களுக்கு அமைந்த உரைகள் ஒருவகையென்றால், சமய தத்துவ நூல்களுக்கு அமைந்த உரைகள் இன்னொருவகை.    

    சமய இலக்கியங்களுள், வைணவம் சார்ந்த நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்கு (பழைய) உரைகள் உண்டு. குருபரம்பரையாக/ அல்லது ஆசிரிய - மாணவ     வழியில் தொடர்ந்து பல உரைகள்,     இப்பாசுரங்களுக்குத்     தோன்றின. சைவம் சமய இலக்கியங்களுள் - பத்துப் பாட்டில் ஒன்றாகத் கருதப்படுகிற- திருமுருகாற்றுப்படைக்கு     நச்சினார்க்கினியர் உரை உண்டு. அதுபோன்று, மணிவாசகரின் திருக்கோவையாருக்குச் சிறந்ததோர் உரை உண்டு. பொதுவாக, இந்த இடைக்காலத்தில் சைவ சமயமே, வேறு எந்தச் சமயத்தை விடவும் மிகுந்த செல்வாக்குடன் இருந்தது என்றாலும் , சைவ இலக்கியங்கள் உரையாசிரியர்களின் கவனத்தை அதிகம் கவரவில்லை. 20-ஆம் நூற்றாண்டில்தான், இவற்றுள் சிலவற்றிற்கு விரிவான உரைகள் தோன்றியுள்ளன.

3.2.1 வைணவ இலக்கிய உரைகள்

    வைணவ இலக்கியங்கள் என்றால், பெரும்பாலும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களே நினைவுபடுத்தப்படுகின்றன. இவை, பொய்கை, பூதம், பேய் ஆகிய (கி.பி. 7-ஆம் நூற்றாண்டு) முதல் மூன்று ஆழ்வார்கள் முதல் நம்மாழ்வார், ஆண்டாள் முதலிய பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்டவை. இவை, நாதமுனிகள் (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு) என்பவரால் தொகுக்கப்பட்டன. அப்போது உரைகள் தோன்றவில்லை. ஆனால், வடமொழி வேதத்துக்கு நிகரான ‘திராவிட வேதம்’ இது என்ற பெருமை இதற்குக் கிடைத்தது. எனவே, தத்துவச் சிறப்பும், இலக்கிய நயமும், பக்தி உருக்கமும் கொண்ட இந்த வைணவ     பிரபந்தங்கள் குறிப்பாக, நம்மாழ்வாரின் திருவாய்மொழி உள்ளிட்ட பாடல்கள் - வைணவ அறிஞர்களின் உள்ளங்களைக் கவர்ந்தன. இவை இசைவடிவிலும், விளக்கங்களுடனும் ஓதப்பட்டு வந்தன. பின்னர், நாதமுனிகள் வழிவந்த ஆளவந்தார், மற்றும் இராமாநுஜர் ஆகியோரின் விருப்பத்தினால், திருக்குருகைப்பிரான்பிள்ளை (பிள்ளான்) என்பவரால், முதன்முதலாக, நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்க உரை எழுதப்பட்டது. வைணவ சம்பிரதாயத்தில் குருபரம்பரை முக்கியமானது. இதன் வழித் திருவாய்மொழிக்கு மேலும் மேலும் விளக்கமாகத் தொடர்ந்து, உரைகள் எழுதப்பட்டன. இந்த உரைகள், முக்கியமாக இரண்டு அம்சங்களைக் கொண்டவை : i) பெரும்பாலான பகுதிகள், தமிழும் சமற்கிருதமும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டன. ii)எழுத்துகளின் எண்ணிக்கை முறையில் - அதாவது ‘படி’ என்ற முறைகொண்டு எழுதப்பட்டவை. மணிப்பிரவாளம் என்பது - தமிழ் சிவந்த     மாணிக்கமும் (மணி), வடமொழிச் செம்பவளமும் (பிரவாளமும்) வேறுபாடின்றிக் கலந்து கோத்த கோவை என்று பொருள்படும். ஒரு ‘படி’ என்பது மெய்யெழுத்துகள் நீங்கலாக, உயிரும் உயிர்மெய்யுமாக 32 எழுத்துகளைக் கொண்டது. இந்த கிரந்த எண்ணிக்கை முறையில் உரைகள் அடையாளம் பெறுகின்றன. திருவாய் மொழிக்கு அமைந்த இத்தகைய உரைகள் பின்வருமாறு    

 • திருக்குருகைப் பிரான்      பிள்ளை (பிள்ளான்)
 • - 6,000 படி(ஆறாயிரப்படி)
 • நம்பிள்ளை
 •          - 9,000 படி (ஒன்பதாயிரப்படி)      (இந்த உரை சொன்னவர் நஞ்சீயர் என்ற கருத்து உண்டு.)
 • பெரியவாச்சான் பிள்ளை
 • - 24,000 படி (இருபத்து நாலாயிரப்படி)
 • வடக்குத் திருவீதிப்          பிள்ளை
 • - 36,000 படி முப்பத்தாறாயிரப்படி)    
 • மணவாளசீயர் (சுருக்கமாக)
 • - 12,000 படி (பன்னீராயிரப்படி)    

      இந்தத் திருவாய்மொழி வியாக்கியானங்களை வைணவர்கள் ‘பகவத்விஷயம்’ என்று கொண்டு அவற்றைப் போற்றுவர். இவ்வுரையாசிரியர்களில்     தனிச்சிறப்புப்          பெற்றவர் பெரியவாச்சான்பிள்ளை     ( ஆசான் = ஆச்சான் ).     இவர், திருவாய்மொழிக்கு மட்டுமல்லாமல், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் உரையெழுதியுள்ளார். இதனால் இவரை “வியாக்கியானச் சக்கரவர்த்தி” என்பர்.     

      வடக்குத்திருவீதிப் பிள்ளையின் திருவாய்மொழி 36,000 படி உரை, ‘ஈடு’ என்றும் வழங்கப்படுகிறது. நம்பிள்ளை, நாள்தோறும் காலட்சேபத்தில்     (சொற்பொழிவில்) அருளிச் செய்தவற்றை வடக்குத் திருவீதிப் பிள்ளை     உரையாக்கி எழுதிவைத்தார்; அதனாலேயே இது ஈடு எனக் கூறப்பட்டதெனச் சொல்லப்படுகிறது. இந்த     உரை பதசாரம் (பொழிப்புரை-சுருக்கம்), விளக்கம், (தேவைப்படுகிறபோது) மேற்கோள்கதை, கருத்துரை, எடுத்துக்காட்டு- என்ற சில பகுதிகளைக் கொண்டு விளக்கமாக அமைகிறது.    

      திருவாய்மொழிக்கும் ஏனைய திவ்வியப் பிரபந்தங்களுக்கும் அமைந்த வியாக்கியானங்கள், கதாகாலட்சேப முறையைக் கொண்டு, எளிய பேச்சு நடையில் அழகும் ஆற்றலும் கொண்டு, எண்ணற்ற பழமொழிகளையும் நாட்டுப்புறக் கதைகளையும், நாட்டுப்புறப் பழக்கவழக்கங்களையும், அவர்களின் மொழியில் உள்ள மரபுத் தொடர்களையும்     கொண்டு விளங்குகின்றன. இவற்றுள் பல இடங்களில் வைணவ தத்துவமும், இலக்கிய நயமும் ஒருசேர விளக்கப்படுகின்றன. இவை, திருவாய்மொழியை ரசனையோடு காணுகின்றன; சாரமான கருத்துகளையும், உள்ளுறையாக விளங்கும் தத்துவங்களையும்     ஒருசேர     விளக்குகின்றன. முக்கியமாக, பெரியவாச்சான் பிள்ளை உரையும், வடக்குத் திருவீதிப் பிள்ளையின் உரையும், அன்றைய திறனாய்வுக்குச் சாட்சியமாகவும், திறனாய்வு வரலாற்றுக்கு அணிகலமாகவும் விளங்குகின்றன.

  3.2.2 சைவ இலக்கிய உரைகள்

      வைணவ - திவ்வியப் பிரபந்தம், ‘உரைக்களஞ்சியம்’ கொண்டது. ஆனால் சைவ இலக்கியங்களுக்கு உரைகள் மிகவும் குறைவு, திருமுருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியருடைய உரை உண்டு, பத்துப்பாட்டிலுள்ள பிற பாடல்களோடு சேர்ந்து இந்த உரை தோன்றியது. பன்னிரு திருமுறைகள், உரையாசிரியர்களின் கவனத்தைப் பெறவில்லை. முக்கியமாக, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் தேவாரப் பாடல்கள், சைவ உலகில் மிகுந்த பெருமையும் செல்வாக்கும் பெற்றவை. ஆயின் இவற்றுக்கு உரைகள் எழவில்லை. பெரியபுராணம் என்ற காப்பியத்துக்கும் அன்று உரை எழவில்லை. திருமுறைகளின் இந்நிலை குறித்துச் சைவப் பெருமக்கள் வருந்துகின்றனர். கி.வா.ஜகந்நாதன் அவர்கள், “பழங்காலத்தில் திவ்வியப் பிரபந்தத்துக்குச் சில பெரியோர்கள் உரை வகுத்தது போல (சைவ) திருமுறைகளுக்கும் யாரேனும் வகுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இப்போதுள்ள (திருமுறைகளின்) மூலத்தில் எத்தனையோ பிழைகள் இருக்கின்றன. பல பாடல்களுக்கு எத்தனைதான் மண்டையை உடைத்துக் கொண்டாலும் பொருள் விளங்குவதில்லை”. என்று துன்புற்றுக் கூறுகிறார்.

      சைவ இலக்கியங்களில், சிறந்த உரையைப் பெற்றது, மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ஆகும். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்த உரையின் ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. தொல்காப்பியத்துக்கு உரையெழுதிய பேராசிரியரே இதற்கும் உரையெழுதியதாகப் பலர் கூறுகின்றனர். ஆனால், ஆராய்ந்து பார்த்தால், தொல்காப்பிய உரையாசிரியர்க்கும் இவர்க்கும் நடையாலும், மொழியாலும், கருத்தாலும் ஒற்றுமைகள் இல்லை. ஆயின், திருக்கோவையார் உரை, இலக்கியத்தின் பண்பும் சிறப்பும் உணர்ந்த சிறந்த உரையாகும். “திரு” என்பதற்கு அவர் தருகிற உரை, தமிழர்தம் அழகியலுக்கு (Aesthetics) அடியெடுத்துக் கொடுக்கிறது. “திரு என்பது கண்டோரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் - என்றது அழகு” என்று தெளிவாக வரையறை செய்கிறது. தொடர்ந்து அது பற்றி விளக்கவும் செய்கிறது.

      இந்நூலாசிரியரின் திருவாசகம், ‘திருவாசகத்துக்கு உருகார், ஒருவாசகத்துக்கும் உருகார்’ என்று போற்றப்படுவது. ஆனால், 19- ஆம் நூற்றாண்டில்தான், தாண்டவராயர் என்பவரால் திருவாசக அனுபூதி உரை என்பது எழுதப்பட்டது. ‘சம்பிரதாய உபதேசம்’ என்று இதனை இவர் குறிப்பிடுகிறார். 20-ஆம் நூற்றாண்டில், திருவாசகத்தில் உள்ள திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகிய     மூன்றற்குமட்டும்     பண்டிதமணி. மு.கதிரேசன் செட்டியார் உரையெழுதினார். கதிர் மணி விளக்கம் என்ற பெயர் பெற்ற இவ்வுரை, பலவகையாலும் சிறப்புக் கொண்ட உரையாகப் போற்றப்படுகிறது.

      பெரியபுராணம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளைக் கோத்துக் காப்பியப் பண்புடன் ஆக்கப்பட்ட செல்வாக்கு மிக்க சைவ இலக்கியம். இதற்கு விளக்கவுரை, 20-ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது. சி.கே. சுப்பிரமணிய முதலியார், சைவத்திலும், சைவ அடியார்களிடத்திலும் சேக்கிழாரிடத்தும் மிகுந்த பற்றுதலோடு     இதற்கு     உரையெழுதியுள்ளார். அவ்வுரை, குறிப்பிடத்தக்க ஒரு பணியைச் செய்கிறது: நாயன்மார்கள், குறிப்பாக அப்பரும் சம்பந்தரும் பல தலங்களுக்குச் சென்று, வழிபாடுகள் நிகழ்த்தியவர்கள்;     வழிபாடுகளைத் தொடங்கி வைத்தவர்கள்; இவர்களும் பிற நாயன்மார்களும் தலயாத்திரை சென்று வந்த வழிகளைப் பெரியபுராணம் துணை கொண்டு விளக்குகிற வகையில் மண்டல வரைபடங்கள் (maps) தயாரிக்கப்பட்டு இவ்வுரையில் தரப்பட்டுள்ளன. 20-ஆம் நூற்றாண்டின் அறிவியல் முன்னேற்றத்தின் பயன் இவ்வாறு உரையில் வெளிப்படுகிறது.