1.1 அமைப்பியல் : வரலாறு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ருசிய உருவவியல் (Russian Formalism) மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்தது. செக்கோஸ்லோவாகியா நாட்டில் அது வளர்ந்து பல புதிய கோணங்களையும் முனைப்புகளையும் பெற்றது. மொழியியல் அறிஞர்களின் ஆராய்ச்சி, உருவவியலுக்குப் புதிய கண்ணோட்டங்களைத் தந்தது. 1930 - களுக்குப் பிறகு, ருசிய உருவவியல், செக் நாட்டின் மொழியியல், ஜெர்மானிய தத்துவங்கள், பிரான்சு நாட்டின் நவீனத்துவ சிந்தனைப் போக்குகள் முதலியவற்றின் பின்னணியில், அமைப்பியல் தோன்றியது. ருசியாவின் முக்கோரவ்ஸ்கி (Jan Mukorovski), ஸ்வீடன் நாட்டு மொழியியலாளர் டிசாசூர் (Ferdinand De saussure),ருசிய நாட்டுப்புறவியல் அறிஞர் விலாதிமிர் பிராப் (Vladimir Propp), பிரான்சு நாட்டின் நாட்டுப் புறவியல் அறிஞர் லெவ் ஸ்ட்ரோஸ் (Levi Strauss), மற்றும் அந்நாட்டின் தோதொரொவ் (Todorov), முதலியவர்கள் அமைப்பியலுக்கு வித்திட்டதோடு அதனை நன்கு வளர்த்தார்கள். பிரான்சு நாட்டில் அமைப்பியல், மிகவும் சிறப்பாக வளர்ச்சிபெற்றது. முக்கியமாக, நாட்டுப்புறவியலையும், மொழியியலையும் இலக்கியத்தையும் விளக்கிட அது பெரிதும் துணை செய்தது. பிறகு அது அமெரிக்காவுக்கு ‘ஏற்றுமதி’ யானது. அங்கு அது, பிற யாவற்றிலும் தனித்து நின்று செல்வாக்கு மிகுந்த துறையாகி விளங்கத் தொடங்கியது. முக்கியமாக இலக்கியத் திறனாய்வில் அது தனிச் சிறப்புப் பெற்று விளங்கியது.தொடர்ந்து சமுதாயவியல் மற்றும் தத்துவம் முதலிய துறைகளிலும் அது சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டது. அமைப்பு (structure) என்பது ஒரு கலைச்சொல் (technical term). அது, தூலமான கட்டுமானத்தைக் குறிப்பிடுகிறது. ஒரு பொருளில் பல உறுப்புக்கள் இருக்கின்றன. ஆனால் இவை பிரிக்க முடியாதவை; ஒன்று மற்றொன்றை மாற்றி வளர்ப்பதாக உள்ள இந்த உறுப்புக்கள், ‘முழுமை’ யொன்றில் உயிர்ப்புடன் ஒன்றிணைந்திருக்கின்றன என்று அமைப்புப் பற்றி அமைப்பியல் விளக்கம் தருகிறது. இத்தகைய அமைப்பு, ஒரு செய்தியை அல்லது ஒரு பொருளை உணர்த்துகிறது. ‘அழகே செய்தி (Beauty is Information), அமைப்பே அழகு, அமைப்பே செய்தி என்று அமைப்பு என்பதனை ஆழமானதொரு கருத்தியலாக அமைப்பியல் கொண்டிருக்கிறது. அந்த அமைப்பினுடைய அழகையும் அது தரும் செய்தியின் உண்மைகளையும் அமைப்பியல் ஆராய்கின்றது. அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதனால், அந்த அமைப்பினைப் படைப்பு (work) எனக் கொள்ளாமல் பனுவல் (text) என அது கொள்கிறது. பனுவலுக்குள்ளேயே, ஒரு கலை வடிவத்தின் அல்லது இலக்கியத்தின் அழகும் பொருளும் எல்லாமும் இருக்கின்றன-வெளியே அல்ல என்று அமைப்பியல் கூறுகிறது. படைப்பாளி மற்றும் படைப்பு என்பதற்குள்ள முக்கியத்துவத்தை வாசகன் (reader) பக்கமாக நகர்த்துவது, அமைப்பியலின் முக்கியமான பண்பாகும். பனுவல் என்பது இயங்குதல் தன்மை கொண்ட பல பகுதிகள் கொண்டது; அந்தப்பகுதிகள், ஒரு முழுமையின் பகுதிகளேயன்றித் தனிமையானவை அல்ல என்றும், அத்தகைய பகுதிகளை வாசகன் எவ்வாறு புரிந்துகொள்கிறான்; வாசகனுடைய புரிதல் தன்மைகள், பனுவலின் விசேடத்தன்மைகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன- என்றும், அமைப்பியல் விளக்குகிறது. அமைப்பு என்பதற்குரிய விளக்கத்தை அமைப்பியல் எவ்வாறு காணுகிறது எனக் கண்டோம். இது அமைப்பியலின் அடிப்படை விதி. இவ்வாறு ஒரு பகுதியை, ஓர் உறுப்பை ஆராய்கின்ற போது, அந்த அந்த ஒழுங்கிணைவுக்குள்ள அதன் உறவோடு ஆராயவேண்டும். உதாரணமாக, லெவ் ஸ்ட்ரோஸ், மானிடவியலில் (Anthropology) இனக்குழுக்கள் பற்றி ஆராய்கிறபோது உறவு முறைகள் பற்றி (kinship) விளக்குவார். அந்த அடிப்படையைப் பின்பற்றித் தமிழ் மரபில் உள்ள உறவுமுறைகளைப் பார்க்கவும், தமிழில் ‘மாமா’ என்பது தாய்வழியே வரும் ஓர் உறவு; சித்தப்பா / பெரியப்பா என்பது தந்தை வழி வரும் உறவு; இந்த உறவுகள் திருமண உறவுகள் முதலியன வரை நீள்வன. இவற்றைத் தமிழ்க் குடும்ப அமைப்புக்குள் மட்டுமே விளக்க முடியும். ஆங்கில மரபில் இரண்டற்குமே ‘uncle’ என்ற சொல்தான் உண்டு. தமிழகக் குடும்ப அமைப்பை விளக்குவதற்கு உரியது அல்ல, இது. அது போன்று தமிழில் குடும்ப உறவுகளைக் காட்டப் பல சொற்கள் உண்டு. அவற்றுள் சில: அப்பச்சி, அம்மாச்சி, ஆத்தா, அப்பத்தா ஐயா, அம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, சின்னம்மா, அக்கா தங்கை, அண்ணன், தம்பி, அத்தான், மச்சான், மாப்பிள்ளை, மருமான், மாமா, அம்மான் , மாமனார், அத்தை , மாமியார், அண்ணி, கொழுந்தன், கொழுந்தி, மச்சினிச்சி, கணவன், மனைவி, இல்லாள், அகமுடையான், அத்திம்பேர்..... இப்படிப் பல சொற்கள் உண்டு. சொற்களின் வளம் (vocabulary) தமிழ்ச்சமூகத்தில் குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் காட்டும், மேலும், இந்தச் சொற்கோவையில் மணவுறவு, சாதி, ஆணாதிக்கத்தன்மை எல்லாவற்றையும் பார்க்கலாம். (உதாரணம்: கணவன், அகமுடையான் ஆகிய ஆண்பாற்களுக்கு இணையாகப் பெண்பால் காட்டுகிற “ள்”- என்ற எழுத்தில் முடிகிற பெண்பால் சொற்கள் இல்லை; அதுபோல் ‘இல்லாள்’ என்பதற்கு இணையாக ‘ன்’- இல் முடிகிற ஆண்பாற் சொற்கள் இல்லை). இவையெல்லாம் ‘குடும்பம்’ என்ற முழுமை அல்லது அமைப்புக்குட்பட்ட உறவுகள் அல்லது உறுப்புக்கள் பற்றிய ஆராய்ச்சியினால் வெளிப்படுகின்றன. இது, அமைப்பியலின் ஓர் அடிப்படையாகும். மேலும், கதைப் பின்னல், இருநிலை எதிர்வு என்பன அமைப்பியலின் சிறப்பான அம்சங்களாகும். அவற்றைப் பார்க்கலாம்: |