1.3 கதைப் பின்னல்

    கதை அல்லது கதைப் பண்பு கொண்ட நிகழ்ச்சிவருணனை (narrative)யில், கதைக்குரிய பண்பு, அதாவது ஒன்றற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள்,     கதைத்தன்மையுடையனவாக     எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன     என்று விளக்குகின்றபோது, அது, கதைப்பின்னல் (plot) என்பதனால் ஆனது என்று அமைப்பியல் கூறுகிறது. கதைப்பின்னல் என்பது, கதையமைப்பைத் தீர்மானிக்கிற ஒரு சக்தியாகும். இது, சிறு சிறு நிகழ்ச்சிகளின் கூட்டு வடிவமாகத் தோன்றினாலும், தன்னளவில் இது முழுமையானது, தன்னளவில் கட்டுக்கோப்பானது. பாடுபொருள் அல்லது கரு (theme) என்று சொல்லப்படுவதை விளக்குவதாகவும் அதனை ஒரு தூலப்பொருளாக ஆக்குவதாகவும் கதைப்பின்னல் அமைகின்றது. “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” என்பது சிலப்பதிகாரத்தின் பாடுபொருள் எனக் கொண்டால், அதனை     அவ்வாறு கொண்டுவருவதற்குக் காரணமாகவும், அதனை விளக்குகிறதாகவும் அமைவது கதைப்பின்னலாகும், கண்ணகி, தெய்வமாகிறாள், கவுந்தியடிகள் எனும் சமணத்துறவி முதல் பலரும் அவளைப் பாராட்டுகின்றனர்; சேரன் செங்குட்டுவன், இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து பத்தினிக் கோட்டம் சமைக்கிறான்.- இது கதைப்பின்னல் ஆகும். கதைப்பின்னலின் சிறப்பு என்பது, கதையை வாசிக்கிற வாசகன், கதைப்பின்னலின் போக்கோடு இயைந்து சென்று, அதன் முழுமையை அறிந்துகொள்வதில் இருக்கிறது. இத்தகைய     சிறப்புடன் கதைப்பின்னல் இல்லையென்றால், சிறுகதையோ, நாவலோ, காவியமோ சிறப்படையாது.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
அமைப்பியல் தோன்றிய காலப்பகுதி எது?
2.
உறவுமுறைகள் பற்றி அமைப்பியல் முறையில் ஆராய்ந்த மானுடவியலாளர் யார்?
3.
படம் - பாடம் இவற்றிற்கிடையே முரண்பட்ட பொருளை உணர்த்தும் சிறப்புக்கூறு யாது?
4.
கதையமைப்பைத் தீர்மானிக்கிற சக்தி எது?
5.
கதைப்பின்னலின் சிறப்பு என்பது எதிலே இருக்கிறது?
6.
பண்பு (nature) என்பது ‘இயல்பானது’ எனின், அதற்கு மாறாக- ‘ஆக்கிக்கொள்ளப்படுவது’, என்பது எது?