|
இலக்கியத் திறனாய்வு முறைகளில்
பெண்ணியம் (Feminism)
சிறப்பான தொரு பார்வைக் கோணத்தைத் தந்திருக்கிறது. எந்தத்
திறனாய்வுக்கும் அதனுடைய பார்வை, கூர்மையும்
தெளிவும்
கொண்டிருப்பது மிகவும் அவசியம். பெண்ணியம், அத்தகையதொரு
கூர்மையைத் தந்திருப்பதோடு, வழக்கமான
விளக்கங்களுக்கு
மாற்றாகப் (alternative) புதிய விளக்கங்களை- பெண்மை- என்ற
கோணத்திலிருந்து தந்திருக்கிறது. எனவே திறனாய்வுக்கு ஒரு புதிய
பரிமாணம் கிடைத்திருக்கிறது. நவீன இலக்கியத்தை எழுதுவதற்குரிய
புதிய தளங்களை அது
முன்வைக்கிறது; அதேபோது,
வாழ்க்கைநிலையிலுள்ள எதிரும்புதிருமான
பிரச்சனைகளின்
உண்மைகளைக் காட்டிச் சிந்திக்கவும் தூண்டுகிறது. அண்மைக்
காலமாக - குறிப்பாக 1970-களுக்குப்
பிறகு, தமிழகத்தில்
பெண்விடுதலை முழக்கங்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. அதன்
பின்னணியில் இலக்கியத்திலும் பெண்ணியச் சிந்தனை
பெருகி
வந்துள்ளது. |
|