|
4.3 பெண்ணியத்திறனாய்வு
: வரையறைகள்
‘சமூக வரலாற்றில், மக்களில் பல பகுதியினர்
ஒதுக்கப்பட்டும்,
ஒடுக்கப்பட்டும் வந்தனர்; அதற்கான
காரணகாரியங்களை
வெளிப்படுத்த வேண்டும்; அதன் வழி, மாற்றங்களையும் கொண்டு
வரவேண்டும்” - இது, பெண்ணியத் திறனாய்வின் நோக்கமாகும்.
பெண்ணின் நோக்கிலிருந்து செயல்படுவது இத்திறனாய்வு. பெண்
விடுதலை என்ற ஒளியில் பெண்ணியத் திறனாய்வு
என்பது,
சமுதாயம் என்ற பன்முகப்பட்ட அனுபவங்கள் தந்த உணர்வு
நிலையில், பெண்ணின் ஆளுமை எவ்வாறு
இலக்கியத்தில்
வெளிப்படுத்தப்படுகிறது என்று பார்ப்பதாக அமைகிறது. ஆனால்
அத்தோடு அமையாது, இதுகாறும் பெண்கள் பற்றிச் சொல்லப்பட்டு
வந்த நியாயங்கள், உருவாக்கப்பட்டு
வந்த மதிப்புகள்,
கற்பிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட புனிதங்கள் என்பனவற்றை
அடையாளங்கண்டு விளக்குவது, பெண்ணியத் திறனாய்வு ஆகும்.
இந்தச் சமூக அமைப்பு, ஆண்களை மையமிட்டது;
அதனை
எதிர்கொண்டு, பெண்களின் எதிர்வினைகளை இது முன்வைக்கிறது.
வரலாறு, கருத்துநிலை, வடிவம் நடை முதலியவற்றில்,
பெண்ணியப் படைப்பாளிகள், தமக்கென ஒரு
குறிப்பிட்ட
போக்கினையும் குறிப்பிட்ட பாணியையும்
உருவாக்கிக்
கொள்வதற்குப் பெண்ணியத் திறனாய்வு தூண்டுகிறது. இவ்வாறு
எலைன் ஷோவால்ட்டர் (Eline Showwalter) கூறுகிறார்.
மரபுவழிவந்த இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுவரும் பெண்
பற்றிய
போலியான கருத்துருவாக்கங்களை உடைத்தெறிவதும்,
பெண்
அடக்குமுறைகளின் பல வடிவங்களை
வெளிக்கொணர்வதும்,
பாலியல் (sex) மற்றும் பாலினம்
(gender) ஆகியவற்றை மையப்படுத்தி, அதிகார
உறவுகளையும் ஆதிக்க
மனப்பான்மைகளையும்
எடுத்துக்காட்டுவதும் பெண்ணியத் திறனாய்வின் பணிகளாகும்.
இவ்வாறு கேட் மில்லட் (Kate Millet)
கூறுவார்.
சமூகவியல், வரலாற்றியல், உளவியல், மார்க்சியம்,
அமைப்பியல்,
பின்னை அமைப்பியல் முதலிய ஏனைய பிற கோட்பாடுகளோடு
இது நெருக்கம் கொண்டிருக்கிறது. மேலும், இதன் கருத்துநிலைகள்,
மிதவாதம், தீவிரவாதம் முதலிய
பல பண்புகளைப்
பெற்றிருக்கின்றன.
4.3.1 பெண்ணியத்திறனாய்வு : மூன்று
கோட்பாடுகள்
மேலை நாடுகளின் சூழலில் பெண்ணியம்,
மூன்று வகையான
கோட்பாடுகளாக வெளிப்படுகின்றது. அவை:
1. பிரஞ்சுப் பெண்ணியத் திறனாய்வு. இது உளவியல்
பகுப்பாய்வு முறையில் பெண்ணியத்தை விளக்கவேண்டும் என்கிறது.
பெண்ணின் சுயமான விருப்பங்கள், உணர்வுகள், ஆசைகள்,
எதிர்பார்ப்புகள், இவற்றின் முறிவுகள், சிதைவுகள் முதலியவை
உள்ளத்தே அழுத்தப்பட்டிருக்கின்றன (Repression). அவை
ஏற்புடைய சூழ்நிலைகள் வருகிறபோது பல வடிவங்களில்-
குறியீடுகளாகவோ, படிமங்களாகவோ, சொற் சிதறல்களாகவோ-
வெளிப்படுகின்றன. இவ்வாறு பிரஞ்சு பெண்ணியக் கோட்பாடு
சொல்கிறது.
2. ஆங்கிலப் பெண்ணியத் திறனாய்வு.
இது முக்கியமாக,
மார்க்சிய ஒளியில் பெண்ணியத்தை
விளக்குகிறது. பெண்
ஒடுக்கப்பட்டவள் (Oppression) என்ற கோணத்தில், வரலாற்றின்
இறுக்கத்தில் சமுதாயத்தில் பெண் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறாள்
என்றும் பெண்ணடிமைத்தனம் பல்வேறு
வடிவங்களையும்
செயல்நிலைகளையும் கொண்டிருக்கிறது என்றும், இது
பெண்ணியத்தைக் காணுகின்றது.
3. அமெரிக்கப் பெண்ணியத்
திறனாய்வு. இது,முக்கியமாக, புறவய நிலைக்குச் செல்லாமல்,
இலக்கியப் பனுவலை (text)
மையமிட்டே செல்லுகின்றது. பெண்ணியம்,இலக்கியப் பனுவல்களில்
எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் காட்டிக் கொள்கிறது, அல்லது,
அதனைச் சொல்லிக் கொள்கிறது (Expression) என்று காண்பதை
வலியுறுத்துகிறது. பின்னை அமைப்பியல் கூறும் வழியை
இது
பயன்படுத்திக் கொள்கிறது.
இந்தியச் சூழலிலோ, தமிழ்ச் சூழலிலோ பெண்ணியத்திறனாய்வு,
இவ்வாறுதான் இருக்கிறது என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது.
இந்த மூன்றனுடைய தாக்கங்களும் இங்கே பரவலாக
உண்டு.
ஆயினும், முக்கியமாக,ஆங்கிலப் பெண்ணியத் திறனாய்வுமுறையே,
இங்கே அதிகம் வழக்கத்திலுள்ளது என்று சொல்ல வேண்டும்.
4.3.2 பெண்ணியப் பார்வையில் பெண்ணடிமை
வரலாற்று நிலையில்
தமிழ்ச் சமூக அமைப்பில்
பெண்ணடிமைத்தனம் எவ்வாறு இருந்தது என்பதனையும்,அதனைச்
சங்கப்பாடல் எவ்வாறு பதிவு செய்திருக்கிறது என்பதனையும் ஓர்
எடுத்துக்காட்டு மூலம் இங்கே காணலாம். மன்னன் பூதபாண்டியன்
மாண்டு போகின்றான். மனைவி பெருங்கோப் பெண்டு, அவன்
எரியுண்ட ஈமத்தீயில் தானும் விழுந்து சாக முனைகிறாள். அருகே
இருந்த சான்றோர் தடுக்கின்றனர். அதனை மறுத்து, ‘பல்சான்றீரே
பல் சான்றீரே..... பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே..’
என்று
விளித்து அவள் பேசுகிறாள்!
அணில்
வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள் எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரல்பெய் பள்ளிப்பா யின்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ...
(...எமக்கு)
நள்ளிரும் பொய்கையும், தீயும் ஓரற்றே.”
(புறம். 246)
இந்தப் பாடலைக் கொண்டு, பெருங்கோப்
பெண்டு, எவ்வளவு
அன்பு கொண்டிருந்தாள் அவனிடம் என்றும், என்னே அவள்
கற்புத் திறன் என்றும் வியந்து பலர் விளக்குகின்றனர். ஆயின்,
பெண்ணியத் திறனாய்வு இந்த
விளக்கத்தை மறுக்கிறது.
இந்தப்பாடலில், எங்காவது பூதபாண்டியன்- பெருங்கோப்பெண்டு
அன்பு சொல்லப்பட்டிருக்கிறதா? இல்லை. காதல்
கொண்ட
அவனைப் பிரிந்திருக்கமுடியாது என்று எங்காவது அவள்
சொல்லியிருக்கிறாளா? இல்லை. கணவன் இறந்த பின், அந்தப்
பொறுப்பு இவளுக்குத் தரப்படலாம் என்று குறிப்புரையாக எதாவது
உண்டா? இல்லை. ஆனால் கைம்மை நோன்பின் கொடுமை,
பெயரளவில் உயிரோடு
இருந்து நடைமுறையில்
செத்துக்கொண்டிருக்கும் அவலம்- இதுதானே பாடல் முழுதும்
இடம்
பெறுகிறது! பெண்ணடிமைத்தனம் ஆழமாக வேரூன்றிக்
கிடப்பதைப்
பெண்ணியத் திறனாய்வு வெளிப்படுத்துகின்றது.
அந்தப் பெண்-
பெருங்கோப் பெண்டு, இறுதியில் “உயவற்
பெண்டிரேம் அல்லேம்”
என்று (உயவற் பெண்டிர் = கைம்மை
நோன்பால் வருந்தும்
பெண்டிர்) பிரகடனப்படுத்துவது,
வேதனைகளின் குமுறலாக மட்டுமல்லாமல், ஒரு
கலகக்குரலாகவும்
(rebellious voice)
வெளிப்படுகிறது.
இவ்வாறு, பெண்ணியத் திறனாய்வு, மறைந்து கிடப்பவற்றிலிருந்து
உட்பொருள் கண்டு விளக்குகிறது.
4.3.3 ஆண் - பெண் சமத்துவம்
எல்லா நிலைகளிலும் ஆணும் பெண்ணும்
சமநிலையிலிருக்க
வேண்டும்; சலுகைகள் வேண்டாம் - உரிமைகளே வேண்டும்;
பெண்ணின் பங்கு இல்லையென்றால், குடும்பம் மட்டுமல்ல, சமூக
முன்னேற்றமும் தடைப்படும் என்று பெண்ணியத் திறனாய்வு
கூறுகிறது. ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் என்ற நாவலை
முன்வைத்து இதனைப் பார்க்கலாம். எழுபதுகளுக்கு முன்னால்,
வழக்கமான குடும்ப நாவல்கள் எழுதியவர், இவர். அதன் பின்னர்
சமூக உணர்வும் போராட்ட குணமும் கொண்ட படைப்புக்களை
எழுதத் தொடங்கினர்.கரிப்பு மணிகள் என்ற நாவல், தூத்துக்குடி
உப்பளத் தொழில் பற்றியதாகும். உப்பளத்தில் பல பிரச்சனைகள்-
வேலை நிரந்தரமின்மை, தொழிலாளர்களுக்குப் பல வசதிக்குறைகள்,
போதாத கூலி, பெண்தொழிலாளர்களுக்கு எதிரான
பாலியல்
வன்முறைகள் - இப்படி அவ்வப்போது பிரச்சனைகள். சங்கம்
வைக்கிறார்கள். போராடுகிறார்கள். ஆனால் பாதிக்கப்படுகிறார்களே
தவிர, வெற்றி கிடைக்கவில்லை. காரணம்? நாவலாசிரியர், கதையின்
ஊடேயும் இறுதியிலும் முத்தாய்ப்பாக முன் வைக்கும்
கருத்து:
தொழிற் சங்கத்திலும் எல்லோரும் ஆண்கள். போராட்டத்தில்
தலைமை தாங்குபவர்களும் முன்னணியில் நிறுத்தப்படுபவர்களும்
ஆண்கள். தொழிலாளர்களுள், பாதிக்குமேற்பட்டவர்கள் பெண்கள்;
ஆனால், சங்க அமைப்புகளிலும் போராட்டங்களிலும் அவர்களின்
பங்கு இல்லை. ஆண் ஆதிக்கம் வெற்றி தேடித்தராது. பெண்களின்
பங்கு- செயல்பாடு- இல்லையேல் சமூக நியாயங்களும் உரிமைகளும்
கிடைக்காது. இந்தக் கருத்து, நாவலின்
சாராம்சமாகச்
சித்திரிக்கப்படுகிறது. எனவே ஆண் பெண் சமத்துவம் என்பது
சமுதாயத்தின் பல பரிமாணங்களிலும் ஏற்படவேண்டும் என்று
பெண்ணியம் வலியுறுத்துகிறது.
4.3.4 தொன்மங்களும் பெண்ணியமும்
தொன்மம் (myth) என்பது
பழங்கதை வடிவம். நீண்ட
வரலாற்றின் சில நிகழ்வுகளையும் உணர்வுகளையும் சாராம்சமான
கதை வடிவத்தில் ஆக்கித் தருவது தொன்மம். சங்க இலக்கியத்தில்
பாரி மகளிர், வெள்ளி வீதியார், பேகன் மனைவி
கண்ணகி,
நன்னனால் (காவல் மரத்தின் மாங்கனி தின்றதற்காகக்) கொலை
செய்யப்பட்ட பெண், பூதபாண்டியனின் மனைவி- இவர்கள் பற்றிய
செய்திகள் தொன்மம் சார்ந்தவை. பெண்ணியத் திறனாய்வின் மூலம்,
இந்தப் படைப்புகளை ஆராய நிறைய வாய்ப்புண்டு.
பெண்
நிராகரிக்கப்படுதல், அவலத்திற்குள்ளாதல் முதலிய நிலைகளுக்கு
ஆளாகிறாள். சமுதாயவியல் அடிப்படையில் பெண்
ஏன்
அடிமையானாள் என்பதை ஆராயலாம். களவு- கற்பு ஆகிய காதல்
உறவுகளில், பெண்ணுக்கு
வரையறைகளும் ஒழுக்கக்கட்டுப்பாடுகளும், அச்சம் மடம்
நாணம் போன்ற
உணர்வுகளும் வலியுறுத்தப்படுகின்றன என்ற செய்தியும் இத்தகைய
ஆராய்ச்சிகளுக்கு உதவும்.
4.3.5 பெண்மொழியும் பெண் உடலும்
மரபு வழியில் அங்கீகரிக்கப்பட்ட
எழுத்துமொழி, ஆண்
ஆதிக்கத்தைச் சார்ந்தது என்று பெண்ணியச் சிந்தனையாளர்கள்
கருகின்றனர். உடல்வலு, வன்மை சார்ந்த மனம், அலட்சியம்,
ஒதுக்கம் (ஒதுக்கி வைக்கும் மனப்பான்மை), ‘தான்’ என்ற அகந்தை
- முதலிய உணர்வுகள் சார்ந்த மொழி, ஆணின் மொழி. குடும்ப
உறவுகளிலும் சமூக உறவுகளிலும் பணிந்து
போகிறதாகப்
பெண்ணின் மொழி வெளிப்படுகிறது. பெண் உரிமை,
பெண்
விடுதலை முதலிய சூழல்களில்
பெண்ணின் மொழி
கூர்மையடைகிறது; இது, புதிய ஆளுமையைப் பிரதிபலிக்கிறது
என்று பெண்ணியத் திறனாய்வு கருதுகிறது.
ஆண்டாண்டுக் காலமாகப் பெண்களின்
உடலை - உடல்
உறுப்புகளை ‘அழகு’ என்ற பெயரில் போகப் பொருளாகவே கருதி
வருணித்து வருகிறார்கள் என்று பெண்ணியம் கூறுகின்றது. ஆனால்,
பெண், தன் உடல் உறுப்புகளின் வலிமையையும் மேன்மையையும்
முதலில் அறிந்துகொள்ள வேண்டும் என்று
பெண்ணியம்
சொல்லுகிறது. பாலின வேறுபாடு், உடல்மொழி ஆகியவற்றைக்
கொண்டு பெண் ஒடுக்கப்படுவதையும், இதன் பின்னால் அதிகார
அரசியல் செயல்படுவதையும் வெளிப்படுத்துகிறார், கேட் மில்லட்
என்ற பெண்ணியத் திறனாய்வாளர், இவர் எழுதிய
“பாலியல்
அரசியல்” என்ற நூல் (Sexual Politics) இவ்வகையில் சிறப்பு
மிக்கதாக விளங்குகிறது.
தமிழில் பெண் கவிஞர்கள் பலர் இன்று பெண்ணியச் சிந்தனை
யுடையவர்களாக விளங்குகிறார்கள். அவர்களைப்
பற்றியும்
அவர்களுடைய கவிதைகளில் பெண்ணியம் படிந்து கிடக்கும்
படிமங்கள், குறியீடுகள், பலவித சொல்லாடல்கள்
பற்றியும்
ஆராய்வது பெண்ணிலை வாத ஆராய்ச்சிக்கு உதவக் கூடியதாகும்.
பெண் - உடல்மொழி எனும்போது கருப்புப்
பெண்ணியமும்
(Black Feminism) பெண்ணியல்
சிந்தனையாளர்களால்
முன்வைக்கப்படுவது நினைவுக்குவரும். பெண்ணடிமைத்தனம்,
பொதுவாக இருந்தாலும் அதனுள்ளும் கறுப்பர் இனத்துப் பெண்கள்
கூடுதலாகவே பாதிக்கப் படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
தமிழ்ச் சூழலில், சிவப்பு -
கறுப்பு என்ற நிறங்கள்
பேதப்படுத்தப்பட்டு அதனடிப்படையில்
பெண்கள்
அவமானப்படுத்தப் படுகின்றனர். தொலைக்காட்சி
ஊடகம்,
பெண்களை மோசமாகச் சித்திரிப்பதில், இந்த நிற
வேற்றுமை
மிகவும் வன்மை யுடையதாகக் காணப்படுகிறது. பெண்ணியத்
திறனாய்வு இதனுடைய சித்திரிப்பு முறைகளைக் கவனமாக எடுத்துக்
கொள்ளுகிறது. |