|
5.3 தலித்துக் கலைவடிவம்
கலை என்பது வட்டாரம், இனம், சாதி, வர்க்கம்
முதலியவற்றைச் சார்ந்து அமைவதுதான். தலித்துகளின்
அழகியல் வெளிப்பாடுகளில் அவர்களின் கலை வடிவங்கள்
முக்கியமானவை. தலித்து மக்களின் கலை வடிவங்கள்,
வெளியிடங்களில்
நிகழ்த்தப் பெறுகிற நிகழ்த்துகலை வடிவங்களே
ஆகும். மேலும் உயர்சாதியினரிடம் காணப்படுவது போன்ற
தூலமற்ற நுண்கலை வடிவம் (Abstract Art Form) இவர்களிடம்
மிகக் குறைவு. பெருந்தெய்வ வழிபாடுகளைச் சார்ந்திருத்தலும்,
வைதிகச் சடங்குமுறைகளைச் சார்ந்திருத்தலும் தலித்துக்
கலைகளில் இல்லை. நவீன மேடைகள், பெரிய அரங்குகள்
முதலியவை இவர்களின் கலை நிகழ்வுகளில்
கிடையாது.
தலித் மக்களின், முக்கியமான கலை வடிவங்களாகக்
கூறப்பட்டுபவை:
பறையாட்டம், தப்பாட்டம், பெரிய மேளம், நையாண்டி
மேளம், கரகாட்டம், மாடுபிடியாட்டம், ராசா - ராணியாட்டம்,
கரடியாட்டம், உறுமி மேளம், குறவன் குறத்தியாட்டம்
முதலியவைகளாகும்.
உணர்வுநிலைகளை நேரடியாக வெளிப்படுத்துதல்,
எதார்த்தமும் தூலமும் கொண்ட நிகழ்வுகள், தனியாளாக
அல்லாமல் பலர் சேர்ந்து நிகழ்த்தும் நிலைகள் என்ற
பண்புகளை முக்கியமாகக் கொண்டவை தலித் கலைகள். சிறு
தெய்வங்களையும், சிறு தெய்வங்கள் தொடர்பான கதைகள்
அல்லது தொன்மங்களையும், நடைமுறை வாழ்வில் கண்ட
அல்லது வெகுவாகப் பாதித்த செய்திகளையும் இவை
சொல்லுகின்றன. தெய்வங்களின் வழிபாட்டு இடங்கள், நடவு
நடுதல், கதிர் அறுப்பு முதலிய விவசாயம் நடைபெறும்
வயல்வெளிகள், காடுகள், சாவுகள் நடக்கிற இடங்கள்-
இவற்றிலேதான்
இவை அதிகம் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால்
அண்மைக் காலங்களில் தலித் கலை வடிவங்கள் ஒரு
‘வித்தியாசம்’ என்ற முறையில், அரசு விழாக்களிலும், பொதுக்
கலை அரங்குகளிலும் ஊர்வலங்களிலும்
நிகழ்த்தப்படுகின்றன.
5.3.1 தலித்திய நாட்டுப்புறக் கலைகளும் நாடகங்களும்
சங்க காலத்திலிருந்தே பல கூத்து வடிவங்கள், பாமர
மக்கள் மத்தியிலே
பிரத்தியேகமாக வழங்கி வந்தன. தொடர்ந்து
எல்லாக் காலங்களிலும் செவ்வியல் கலைவடிவங்களுக்கு
இணையாக, இன்னொரு பக்கம், தாழ்த்தப்பட்ட மக்கள்
அதிகமாகப் பங்கு பெறுகிற கூத்துக்களும் இருந்து வந்தன.
நாயக்கர் காலத்தில் பள்ளு நாடகங்கள், குளுவ நாடகங்கள்,
குறவஞ்சி நாடகங்கள் முதலியவை பிரசித்தமாக இருந்தன.
‘அரக்கன்வதை’ என்ற கதை சொல்லல் மரபும் இருந்தது.
மேலும்,
நொண்டி நாடகங்கள் என்ற வகை மிகவும் குறிப்பிடத்தகுந்த
ஒன்றாகும். ஆட்டமும் கூத்தும்
பாட்டும் இணைந்த எள்ளலும்
நகைச்சுவையும் கொண்ட ஒரு கலை வடிவம், இது.
தலித் மக்களை - அதாவது, அன்று தீண்டத்தகாதவர்கள்
என்று சொல்லப்பட்ட
மக்களை மையமாகவும் நாயகர்களாகவும்
கொண்டு பல நாட்டுப்புறக் கதைகளும் கதைப்பாடல்களும்
(Ballads) தோன்றியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை,
காத்தவராயன் கதை மற்றும்
மதுரைவீரன் கதை ஆகியவை.
காத்தவராயன், பறையர் இனத்தவன்; மதுரை வீரன், சக்கிலிய
இனத்தவன். இரண்டு பேருமே தங்கள் சாதிக்கு மீறிய உயர்சாதி.
மற்றும் ஆளும் இனத்தைச் சேர்ந்த
பெண்களைக்
காதலிக்கிறார்கள். அதற்காகப் பழி வாங்கப்படுகிறார்கள்.
கொலைக்கும் செத்தவர் ஆவிக்கும் பயந்தவர்களால் இவர்கள்
சிறு தெய்வங்களாகவும் ஆக்கப்பட்டார்கள். தலித்தியத்
திறனாய்வுக்கு, இவை சிறந்த களங்களாக அமையக் கூடியன.
நந்தன் கதை, திருநாளைப் போவார் கதையாகப்
பெரிய
புராணத்தில் இடம் பெறுகிறது. இந்தக் கதையினைத்
தாழ்த்தப்பட்ட
இனத்தவர், மற்றும் பண்ணை - அடிமை
விவசாயிகள் சார்பாக இருந்து, கதா கலாட்சேபமுறையில்
கலை
வடிவமாக ஆக்கியவர், 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
கோபாலகிருஷ்ண பாரதியார். கதையின் பெயர்,
நந்தனார்
சரித்திரக் கீர்த்தனை. இன்று, நவீனத்துவத்தின்
பின்னணியில்,
தலித்து நாடகங்கள் பல எழுதப்பட்டும் இயக்கப்பட்டும்
வருகின்றன.
|