தலித்திய வழியிலான திறனாய்வு என்பது, நடைமுறையில்
சமுதாயவியல் திறனாய்வேயாகும்.
இலக்கியத்தில் தலித்து மக்கள்
எவ்வாறு சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள், அவர்களுடைய
வாழ்க்கையனுபவங்கள், உணர்வுகள், சிந்தனைகள், எதிர்வினைகள்
முதலியவை எவ்வாறு சித்திரிக்கப் பட்டுள்ளன என்று பார்ப்பது
இதனுடைய பணி. இது ஒரு பொதுவான வரையறைதான். ‘தலித்’
என்பதை
விதந்து (குறிப்பிட்டு) பிரத்தியேகமாகச்
சொல்லுவதற்குரிய காரணத்தையும் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
“தலித்துகளுக்கு பிரத்தியேகமான - வித்தியாசமான-
வாழ்நிலைகள் உண்டு; வித்தியாசமான வரலாற்றுச் சூழல்கள்
உண்டு; தாழ்த்தப்படுதல், ஒடுக்கப்படுதல், தீண்டாமைக்கு
ஆளாதல், பொருளாதார நிலையில் பிறரைச் சார்ந்திருத்தல்
எனும் கொடிய நிலைகள் உண்டு”- என்ற
கருதுகோள்கள் அல்லது
முன்னோட்டமான கருத்தியல்கள் தலித்தியத் திறனாய்வுக்குச்
சரியான
பார்வையைத் தருபவையாகும். மேலும், சமூக
வன்கொடுமைகளுக்கு எதிராக எழுச்சி பெறுதல் என்பது
தலித்தியத்
திறனாய்வின் அடிப்படையுணர்வாக அமைகிறது.
குறிப்பிட்ட வகுப்பினரின் வாழ்க்கையை - அதன்
பிரச்சனைகளைச் - சொல்லுவதாக இருந்தாலும் அதனை, நேர்
கோடாகப் பார்ப்பதை இது மறுக்கிறது. சாதியம், தீண்டாமை,
என்பது தத்துவம் என்ற அடிப்படை மதவாதத்தோடு பிணைந்து
கிடக்கிறது என்பதனைக் கருத்திற் கொண்டு, அத்தகையதொரு
சூழலை மறுதலிப்பதாகவும், மாற்றுத் (alternative) தேடுவதாகவும்
தலித்துக்களின்
வாழ்க்கைச் சித்திரம் அமைய வேண்டும் என்று
இத்திறனாய்வு கருதுகிறது. எனவே தலித் இலக்கியத்தை
இயங்கியல் (dialectics) முறையில், முரண்பட்ட சக்திகளின்
மோதலாகப்பார்க்க வேண்டும்.
இது, இந்தத் திறனாய்வின்
அடிப்படையான பார்வைக் கோணமாகும்.
5.4.1 தலித் இலக்கியத்தின் பரிமாணங்களும் திறனாய்வும்
தலித் வாழ்க்கை நிலைகளையும் தலித் உணர்வுகளையும்,
அவர்களுடைய தனிச் சிறப்பான பண்பு நிலைகள் என்று
கொள்வதும் இவ்வகை எழுத்தின் முக்கியமான பணியாகும்.
அமிழ்த்தப்
பட்டுக் கிடக்கும் தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு, ஒன்றோடு ஒன்றாயிணைந்த
இரண்டு பக்கங்கள்
உண்டு. ஒன்று- உழைப்பையே கூலியாகவும் வாழ்க்கையாகவும்
கொண்டிருக்கிற அல்லது மிகச்சிறு நிலங்களுக்கு
உரிமையாளர்களாக இருக்கின்ற அடித்தள வர்க்கம் என்ற நிலை.
அடுத்து, வருணம் அல்லது சாதியம் என்ற முறையில் அடிப்படை
உரிமைகள் மறுக்கப்பட்டுத் தீண்டாமை முதலியவற்றின் பிடியில்
இறுக்குண்டு கிடக்கும் நிலை. இவ்விரண்டும், பொருளாதார-
சமூகத் தளங்களில் தொடர்ந்து காணப்படுகின்றவை. தலித்
இலக்கியத்தின் முக்கியமான பரிமாணங்களாக இவை
விளங்குகின்றன.
தலித்தியத்தின் இன்னொரு முக்கியமான பகுதி, தலித்தியப்
பெண்கள் பற்றியது. தலித் என்ற முறையிலும் பெண் என்ற
நிலையிலும்- இரண்டு பக்கங்களிலும் அவர்களுக்கு ஏற்படுகின்ற
நிலை பற்றியது தலித்தியப் பெண்ணியம். சாதிய முறையிலான
அடக்கு முறைகளின்
ஒரு அடையாளமாக உயர்சாதிக்காரர்களால்,
தலித் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள்.
காவல் துறையும் நீதி மன்றங்களும் கூட இத்தகைய பெண்கள் மீது
பரிவோ நியாய
உணர்வோ கொள்வதில்லை என்பது இன்னொரு
அவலம்.
தலித்திய இலக்கியத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய
கலையியல் பரிமாணம்
ஒன்று உண்டு. அது, அவர்களின்
சொல்வழக்கும் மொழி நடையும் பற்றியது. பிராமணர்கள் தங்கள்
மொழிவழக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். வாழ்க்கை
நடைமுறைகள், புழங்குகிற
பொருள்கள், பிற பிற சூழ்நிலைகள்
காரணமாகத் தலித் மக்களிடம், தனிப்பட்ட சில மொழி
வழக்குகள்
காணப்படுகின்றன. உயர் சாதி மக்கள். அதனை இழிவழக்கு என்று
கருதுதல் கூடும். ஆனால் அந்த மொழியில் உயிர்ப்பும்
எதார்த்தமும் உண்டு. திறனாய்வு, இத்தகைய சொல்வழக்குகளையும்
மொழி நடையையும் ஆழ்ந்து கவனித்து அதன் அழகையும்
பயனையும் கண்டறிந்து சொல்ல வேண்டும். அதேபோது இந்த
மொழிவழக்கு, சூழ்நிலைகளையும் காலங்களையும் பொறுத்து
மாறுதல் அடையக்
கூடியதே என்பதையும் நினைவிற் கொள்ள
வேண்டும்.
5.4.2 தலித்தியத் திறனாய்வின் சில பிரச்சனைகள்
தலித் இலக்கியமும் அதன் திறனாய்வும் சந்திக்கின்ற ஒரு
முக்கியமான
கேள்வி, தலித் இலக்கியம், யாரால் எழுதப்படுவது
என்பதாகும். தலித்துக்கள் பற்றித் தலித் எழுதுவதே தலித்
இலக்கியம் என்றொரு கருத்துநிலை- முக்கியமாக, ஒரு சில தலித்
எழுத்தாளர்களால் முன் வைக்கப்படுகிறது. ஒரு தலித்து,
தலித்துக்களின் வாழ்க்கை பற்றி நன்றாக அறிந்திருப்பது
சாத்தியம்
தான். ஆனால் மாறிவரும் சூழலில், இன்றைய தலித்துகளில் பலர்,
புதிய சூழ்நிலைகளால்,
பல புதிய பின்புலங்களோடு வாழ்கிறார்கள்.
மேலும், பிறப்பினாலேயே, ஒருவர்,தன்னுடைய வர்க்கம்,
தன்னைச்
சுற்றியிருப்போரின் தாழ்த்தப்பட்ட நிலை, தன்னுடைய வரலாற்றுப்
பின்புலம் முதலியவற்றில் உணர்வும் சார்பும் பெற்றிருப்பார்
என்பது நிச்சயமில்லை. இன்னொரு பக்கம் - வேறொரு
சூழ்நிலையைச்
சேர்ந்த ஒருவர், தலித்துக்களின் மேலோ,
ஒடுக்கப்பட்ட பிறர் மேலோ, அனுதாபமும் அக்கறையும்
கொண்டிருக்கக்கூடும் என்பதை மறுத்துவிடவும் முடியாது. எனவே
சார்பு என்பது வெறுமனே பிறப்பின்
அடிப்படையில் அமைவதல்ல.
மனிதநேயம் சார்ந்த கொள்கை, உண்மையின் மீதான அக்கறை
போன்றவை, சார்பு நிலைகளைத் தீர்மானிக்கின்றன.
மேலும், குறிப்பிட்ட ஒன்றனை எழுதியவர் யார்,
அவருடைய சாதி என்ன,
உட்சாதி என்ன என்பவற்றை வாசகரோ
திறனாய்வாளரோ அறிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது
தவறாகும். அது இயலாததும் ஆகும். படைப்பும்,
அதனுள்ளிருக்கும் உண்மைகளுமே முக்கியம்.
தலித் இலக்கியத்தின் பிறப்பிடம் என்று அறியப்படுவது,
மராத்திய
மாநிலம், வளர்ப்பிடம் என்றறியப்படுவது, கர்நாடகம்.
பம்பாயில் 1958-இல் தலித் இலக்கியம்- பண்பாடு பற்றிய முதல்
மாநாட்டில் ஒரு பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
“ஒடுக்கப்பட்டோரால் எழுதப்பட்ட இலக்கியமும் ஒடுக்கப்பட்டோர்
பற்றி மற்றோரால் எழுதப்பட்ட இலக்கியமும் தலித் இலக்கியம்
எனும் தனியடையாளத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது”
தலித்தியத் திறனாய்வுக்கு
இது ஒரு வரைகோடு தருகிறது.
மேலும், யார் எழுதுகிறார்கள் என்பதை விட, யாருடைய
வாழ்க்கை, எவ்வாறு
தரப்படுகிறது என்று பார்ப்பது தான் சரியான
கண்ணோட்டமாகும்; சரியான திறனாய்வாகும்.