1.1 சிறுகதை
இலக்கணம்
சிறுகதை இப்படி
அமைய வேண்டும் என்று திட்டவட்டமாக
வரையறுக்க இயலாது. ஏனெனில், அந்த வரையறையை மீறி ஏதாவது
ஒரு சிறுகதை பிறந்து விடலாம். ஆனாலும் கூட கீழ்க்காணும்
விளக்கங்கள் சிறுகதை என்றால் என்ன என்பதை ஓரளவு புரிய வைக்க உதவும்.
1.1.1
இலக்கணம்
சிறுகதை அளவில்
சிறிதாக இருக்க வேண்டும். அது, ஒருமுறை
உட்கார்ந்து படித்து முடித்துவிடக் கூடியதாக இருக்க வேண்டும்.
அதே சமயத்தில், நாவலின் சுருக்கம் சிறுகதை ஆகிவிடாது;
நாவலின் ஓர் அத்தியாயமாகவோ அல்லது நீண்ட கதையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட
கிளைக் கதையாகவோ இருக்க முடியாது.
சிறுகதை என்ற வடிவம் தன்னளவில் முழுமை பெற்ற ஒரு தனிப் பிண்டம். எந்த உணர்ச்சியை
அல்லது கருத்தை அது தன்னகத்தே
கொண்டிருக்கிறதோ, அதைப் படிப்பவரின் நெஞ்சில் மின்வெட்டைப்
போல் பாய்ச்சும் ஆற்றல் சிறுகதைக்கு வேண்டும். கதைக்குப்
பின்னேயுள்ள கதாசிரியரின் கலையாற்றல், கற்பனைத் திறன்,
சொல்லாட்சி, அவர் சொல்ல விரும்பும் செய்தி இவ்வளவும் இலக்கண
வரம்புகளை விடவும் மிகமிக முக்கியமானவை. சிறந்த சிறுகதை
ஆசிரியர்கள் எந்த இலக்கணத்தையும் மனத்தில் நினைத்துக்
கொண்டு எழுதுவதில்லை. அவர்கள் எழுத்துகள் தாமாகவே சிறுகதை
வடிவம் பெற்றுவிடுகின்றன.
1.1.2
மேலைநாட்டு அறிஞர்களின் விளக்கம்
மேலை மற்றும்
கீழை நாடுகளில் இலக்கியத் தரமுடைய
சிறுகதைகள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோற்றம்
பெற்றன. அமெரிக்காவில் வாஷிங்டன் இர்விங், எட்கர்
ஆலன்போ, நத்தானியல் ஹாதார்ன் போன்றவர்களும், ருஷ்யாவில்
துர்கனேவ், செகாவ் போன்றவர்களும், பிரான்சில்
மாப்பசானும்
மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ளனர். இவர்களும் இவர்களது
படைப்புகளை ஆராய்ந்த திறனாய்வாளர்களும் கீழ்க்கண்ட
வரையறைகளைச் சிறுகதைக்குத் தருகின்றனர்.
சிறுகதை என்பது
சிறிய கதை என்ற பொருளில் இல்லாமல்,
ஒரு புதிய இலக்கிய வடிவத்தின் பெயரைக் குறிக்கும் தனிச்சொல்
என்ற விளக்கத்தை பிராண்டர் மாத்யூ கொடுத்துள்ளார்.
சுருக்கமும்
செறிவும் சிறுகதையின் முக்கியப் பண்புகள் என்று
ஜேம்ஸ் கூப்பர் லாரன்ஸ் கருத்துரைத்துள்ளார்.
சிறுகதை அரைமணியிலிருந்து
ஒருமணி அல்லது இரண்டு மணி
அவகாசத்திற்குள், ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்க
வேண்டும் ; தன்னளவில் முழுமை பெற்றிருக்க வேண்டும். அது
தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாக இருக்க வேண்டும்.
கதையைப் படித்து முடிப்பதற்குள் புறத்தேயிருந்து எவ்விதக்
குறுக்கீடுகளும் பாதிக்காமல், வாசகனின் புலன் முழுவதும்
கதாசிரியனின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும்
என்று எட்கர் ஆலன்போ சிறுகதையைப் பற்றிய
தமது
மதிப்பீட்டைத் தந்துள்ளார்.
சிறுகதை என்பது
எடுத்த எடுப்பிலேயே படிப்போரின்
கவனத்தை ஈர்த்துப் பிடித்தல் வேண்டும். நெகிழ்ச்சியின்றி இயங்கி
உச்சநிலை முடியும் வரை வாசகரின் முழுக்கவனத்தையும்
ஒருமுகப்படுத்தி, இடையீடோ, சோர்வோ நேரும் முன்பாகவே
சிறுகதை முற்றுப் பெறுதல் வேண்டும் என்று ஹெச்.ஜி.
வெல்ஸ்
கூறியுள்ளார்.
சிறுகதை குதிரைப்
பந்தயம்போல, தொடக்கமும் முடிவும்
சுவை மிக்கதாக இருக்க வேண்டுமென்று எல்லரி செட்ஜ்விக்
என்ற
அறிஞர் குறிப்பிடுகிறார்.
சிறுகதைகள்
எளிய கருப்பொருளைக் கருவாகக் கொள்ளுதலே
சிறப்புடையது என்கிறார் சிறுகதை உலகின் தந்தை எனப்
புகழப்படும் செகாவ்.
1901இல்,
பிராண்டர் மேத்யூ என்ற திறனாய்வாளர்,
சிறுகதை
என்பது ஒரே ஒரு பாத்திரத்தின் நடவடிக்கைகளைப் பற்றியோ, ஒரு
தனிச் சம்பவத்தைப்பற்றியோ, அல்லது ஒரு தனி உணர்ச்சி பற்றியோ
எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கும் என்று விளக்கியுள்ளார்.
ஹெச்.இ.பேட்ஸ்
என்பவர், எழுதும் ஆசிரியரின் எண்ணத்
துணிவு சிறுகதையில் எவ்வாறு வேண்டுமானாலும் வெளிப்படலாம்
என்கிறார்.
1.1.3
இந்திய அறிஞர்களின் விளக்கம்
1917ஆம் ஆண்டிலேயே
சிறுகதை பற்றி விமர்சித்த
ரா. வாசுதேவன் என்பவர், சிறுகதை என்பது
சிறு கால
அளவுக்குள் படித்து முடிக்கப்பட வேண்டியது என்றும், அதன்
உருவம் சிறியதாக அமைந்திருக்கும் என்றும் கூறுகிறார்.
சிறுகதை என்பது
வாழ்க்கையின் சாளரம். சிறுகதை ஒரு
தொடக்கம், மையச் சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற
மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. சிறுகதை, வாழ்க்கையின் ஒரு
பகுதியை, கவலையை மறந்து விட்டுக் கவனிப்பதாக உள்ளது.
சிறுகதையின் வடிவம் கதை எழுதுபவரின் மனோதர்மத்தைப்
பொறுத்தது என்று புதுமைப்பித்தன் சிறுகதையின்
போக்கை
விளக்கியுள்ளார்.
மனித உணர்ச்சிகளில்
ஏதாவது ஒன்றைத் தொட்டு உலுக்குவதுதான் சிறுகதை என்று விந்தன்
அதன் இலக்கணம்
கூறுகிறார்.
பழங்காலத்தில்
தன்னுணர்ச்சிப் பாடல்கள் பெற்றிருந்த
இடத்தைத் தற்காலத்தில் சிறுகதை என்ற இலக்கிய வகை
பெற்றுள்ளது என்று கூறியுள்ளார் மு.வ.
சிறுகதை என்பது
ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம்; உள்ளப்
போராட்டமாக இருக்கலாம். அது ஏதாவது ஒன்றாக
இருக்கும்
வகையில் சிறுகதை பிறக்கும். இரண்டாகவோ அல்லது அதற்கு
அதிகமாகவோ இருந்தால் சிறுகதை பிறக்காது என்கிறார்
க.நா.சுப்ரமணியன்.
சிறுகதைக்குள்
அடங்கும் காலத்துக்கு எல்லை இல்லை. ஒருவரது பிறப்பு முதல் இறப்பு வரையில்
சிறுகதையின் காலமாய் இருக்க முடியும் அல்லது ஒருவர் வாழ்க்கையில், ஒரே நாளில்,
ஒரு
மணியில், சில வினாடிகளில் கூடக் கதை முடிந்துவிடலாம் என்று
மணிக்கொடி எழுத்தாளரான பி.எம். கண்ணன்
சிறுகதையை
விளக்கியுள்ளார். |