1.4 சிறுகதை அமைப்பு சிறுகதையின் அமைப்பு திட்டமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். “திறமை வாய்ந்த இலக்கிய மேதை ஒருவன் சிறுகதையை எழுதும்போது, கதையின் நிகழ்ச்சிகளுக்காக அவன் கருத்துகளைப் புனைவதில்லை. குறித்த ஒரு முடிவுக்காக ஆழ்ந்த கவனத்துடன் நிகழ்ச்சிகளைக் கற்பனையில் கண்டு பிடிக்கிறான்” என்கிறார் எட்கர் ஆலன்போ. சிறுகதைகள் தொடக்கம், உச்சக் கட்டம், முடிவு என்று ஒரே அமைப்பைப் பெற்றிருந்தாலும், தங்களுக்குள் நுட்பமான வேறுபாடு கொண்டிருக்கும் என்கிறார் பி.எஸ். ராமையா. சிறுகதை அமைப்பில் தலைப்பு, தொடக்கம், முடிவு என்பன இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளன. சிறுகதைக்கு நல்லதொரு பெயர் இன்றியமையாதது. பொருத்தமான பெயரும் அதன் கவர்ச்சியுமே வாசகர்களை ஈர்த்துப் படிக்கத் தூண்டுகின்றன. பெயரைத் தேடி வைப்பதில்தான் சிறுகதை ஆசிரியரின் தனித்திறமை அடங்கியிருக்கிறது. சிறுகதையின் சிறு தலைப்புகள் கதையின் பெரிய உட்கருத்தை உள்ளடக்கிய ஆலம் வித்துப் போன்று இருக்க வேண்டும். அடுத்தது காட்டும் சிறிய கண்ணாடி போலத் தலைப்புகள் அமைந்திருக்கலாம். திறனாய்வாளர்கள் சிறுகதையின் தலைப்பை நான்கு வகையாகப் பிரிப்பர். அவை, 1.கதையின்
தொடக்கத்தை வைத்து அமையும் தலைப்பு என்பனவாகும். ஜெயகாந்தனின் போன வருசம் பொங்கலப்போ, கி. ராஜநாராயணனின் கதவு, கி.வா. ஜகந்நாதனின் மங்க் - கீ, சூடாமணியின் இரண்டாவது தந்தி, அகிலனின் ஏழைப்பிள்ளையார் போன்ற கதைகளில் தொடக்கமே தலைப்பாக அமைந்துள்ளது. ஏதாவது சிக்கலை அடிப்படையாக வைத்துப் புனையப் பட்டிருக்கும் கதைகளுக்கு அவற்றின் பொருளை வைத்துப் பெயரமைவது உண்டு. விந்தனின் பசிப்பிரச்சினை, அகிலனின் படியரிசி, சுந்தர ராமசாமியின் பொறுக்கி வர்க்கம், ஜெகசிற்பியனின் இருட்டறையில் உள்ளதடா உலகம், ஜெயகாந்தனின் சாத்தான் வேதம் ஓதட்டும், தி.ஜ.ர.வின் மரத்தடிக் கடவுள் என்ற கதைகள் இவ்வகையைச் சேர்ந்தன. இத்தலைப்புகளைப் பார்த்த உடனேயே கதையை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். சில கதைகள் மையப் பாத்திரத்தின் பெயரையோ பண்பையோ பெயராகக் கொண்டிருக்கும். புதுமைப்பித்தனின் திருக்குறள் குமரேசப் பிள்ளை, காஞ்சனை, வ.ரா. வின் மாட்டுத் தரகு மாணிக்கம், கு.ப.ரா.வின் நூருன்னிசா, லா.ச.ரா.வின் சாவித்திரி போன்றவை பாத்திரத்தின் பெயரையே தலைப்பாகக் கொண்டுள்ளன. கதையின் முடிவை வைத்துச் சில சிறுகதைகளுக்குத் தலைப்புகள் இடப்பட்டுள்ளன. புதுமைப் பித்தனின் திண்ணைப் பேர்வழி, கு.ப.ரா.வின் படுத்த படுக்கையில், சோமுவின் மங்கலம் போன்ற கதைகள் முடிவை வைத்துப் பெயரிடப்பட்டுள்ளன. சிறுகதையின் தொடக்கமே விறுவிறுப்பாக அமைந்து வாசகர்களைப் படிக்கத் தூண்டவேண்டும். ‘ஒரே ஒரு ஊரிலே’ என்ற பழைய முறையிலோ அல்லது பிறப்புத் தொடங்கி, வாழ்க்கை வரலாறு போன்றோ சொல்வதைக் காட்டிலும் ஒரு நிகழ்ச்சியின் இடையில் தொடங்குவதே சிறப்புடையதாகும் என்கிறார் இரா. தண்டாயுதம். ‘சிறுகதையின் தொடக்கம் திடுதிப்பென காலப் (Gallop) எடுத்த மாதிரி நம் மனதில் தென்பட வேண்டும்’ என்று சி.சு.செல்லப்பா கூறுகிறார். 'சிறுகதையின் தொடக்கம் ஆவலைத் தூண்டுவதாக அமைய வேண்டும்; அவர்கள் சலிப்படையும் முன் அவர்களை ஒரு நிகழ்ச்சியின் மத்தியில் இழுத்துச் சென்றுவிட வேண்டும். அதற்குக் கதையின் தொடக்கத்திலேயே வாசகரின் கவனம் கவரப்பட வேண்டும். இல்லாவிட்டால் கதை சுவையாக இல்லை என்று ஒதுக்கி விடுவர்' என்று பி.கோதண்டராமன் கூறுகிறார். பொதுவாகக் கதைப் பொருளுக்கும் கதைக் கருவிற்கும் ஏற்ற தொடக்கம் அமையும்போது சிறுகதைகள் சிறக்கின்றன. கு.ப.ரா.வின் விடியுமா? என்ற கதை, ‘தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து போனோம்’ என்று தொடங்குகிறது. தந்தியை யார் அனுப்பியது, அதன் பின் என்ன நிகழ்ந்தது என்பதை அறிய இத்தொடக்கம் ஆவலைத் தூண்டுகிறது. பரபரப்புடன் கதை முழுவதையும் ஒரே மூச்சில் படித்துவிட முடிகின்றது. இதுவே சிறந்த தொடக்கத்தின் இயல்பாகும். சிறுகதைகள் சுவையான உரையாடலுடன் தொடங்குதலும் உண்டு. ந. பிச்சமூர்த்தியின் வித்தியாசம் என்ற கதை இதற்குச் சரியான எடுத்துக் காட்டாகும். “மனுஷாளெல்லாம் குரங்கின் வம்சம் என்று மேல்நாட்டுப் புஸ்தகங்களில் படிக்கிறோமே அது பொய் என்று சில சமயம் தோணுது. நிஜமாக இருந்தால் நல்லதென்று சில சமயம் தோன்றுகிறது?” “‘குரங்கு’ என்று என்னை இப்பொழுது வைவதற்காகவா?” “அடி அசடு, அதெல்லாம் இல்லை. அந்த மாதிரி இருந்தால் சிவனே என்று ஒரு புளியமரத்தையோ ஆலமரத்தையோ புடித்துக் கொண்டுவிடலாம். வாடகையும் கிடையாது. மரங்களுக்கும் பஞ்சமில்லை.” “மனுஷனாகி விட்ட பிறகு அந்தப் பேச்சேது? இனிமேல் ஆகவும் முடியாது.” இப்படித் தொடக்கமே சுவையான உரையாடலாக அமைந்து மேன்மேலும் படிக்கத் தூண்டுகிறது கதை. வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் என்ற கதை இயற்கை வர்ணனையுடன் தொடங்குகிறது. “எங்கே பார்த்தாலும் இருள்; காரிருள், கருத்த மேகங்கள் வானத்தில் இடைவிடாது சென்று கொண்டிருக்கின்றன; சந்திரன் சற்று நேரத்திற்குத் தோன்றுகிறான். உடனே முன்னிலும் கனமான மேகங்களுக்கிடையில் மறைந்து விடுகிறான். காற்று சீறிக்கொண்டு செல்கிறது. தூரத்தில் புலியும் கரடியும் உறுமிக் கொண்டிருக்கின்றன. பக்கத்துக் கொல்லைகளில் நரிகள் ஊளையிட்ட வண்ணமாக இருக்கின்றன. அதோ அந்த ஆலமரத்தின் மீதிலிருந்து ஒரு கோட்டான் பயங்கரமாகக் கத்துகிறது”. இத்தொடக்கம், கதையில் ஏதோ பயங்கர நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்பதை உணர்த்தி மேலே படிக்கத் தூண்டுகிறது. கி.சந்திரசேகரின் சாருபாலா என்ற கதை, பாத்திர வர்ணனையுடன் தொடங்குகிறது. “நிலைக் கண்ணாடியின் முன் நின்று கொண்டிருந்தாள் சாருபாலா. அவளுக்கு 40 வயது முடிந்திருந்தும் கண்ணாடியில் தெரிந்த உருவம் இன்னும் 10 வருடங்கள் குறைவாகவே மதிப்பிடும்படி இருந்தது. தன் இடது கையை மடக்கி இடுப்பில் குத்திட்டும், வலது கரத்தைத் தொங்க வி்ட்டும் அவள் நின்ற மாதிரி, நாட்டியக் கலையில் அவளுக்குள்ள ஈடுபாட்டைப் புலப்படுத்தியது. ஓர் இழை கூட வெளுக்காத அவள் கேசம், தைலமிட்டுப் படிய வாரப்பட்டு, கோடிட்ட வகிட்டின் இருபுறமும் கறுத்து மின்னியது..........’ இப்படித் தொடங்கி, சாருபாலாவைப் பற்றி மேலும் அறிய ஆவலைத் தூண்டிப் படிக்க வைக்கின்றது அக்கதை. மேற்கூறியவாறு, சிறுகதைத் தொடக்கம், வாசகர்களைக் காந்தம் போலக் கவர்ந்து, அவர்கள் சிந்தனையைச் சிதறவிடாது மேலே படிக்கத் தூண்ட வேண்டும். சிறுகதையின் முடிவு இன்பகரமாக இருக்க வேண்டும் எனச் சிறுகதை வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்டது. “பல ஆசிரியர்களுக்குக் கதை முடிவில் சுபம் என்று போட்டால் தான் திருப்தி. ஆனால் அது ஒரு பலவீனம்” என்பது கி.ரா. வின் கருத்தாகும். வாழ்வு என்பது எப்போதும் மகி்ழ்ச்சியானது அல்ல; அழுகையும் உண்டு, ஆகவே, துன்பியல் முடிவுகளையும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. பெயின் என்ற திறனாய்வாளர், ‘ஒரு கதை இன்பியல் முடிவினாலோ அல்லது துன்பியல் முடிவினாலோ அழகு பெற்று விடாது. இவற்றில் எது சரியான, பொருத்தமான முடிவாக உணரப்படுமோ அத்தகைய முடிவால்தான் அக்கதை வெற்றிபெற முடியும்’ என்கிறார். கதையின் உச்ச நிலையும் முடிவும் ஒன்றாகச் சில கதைகளில் அமைந்திருக்கும். அதாவது, கதையின் உள்ளீடு உச்ச நிலையிலேயே முழுத் தெளிவைப் பெற்று அத்துடன் கதை முடிந்துவிடும். ஒரே பாத்திரத்தைச் சுற்றி வரும் கதையில் உச்ச நிலையும் முடிவும் ஒன்றாகவே இருக்கும். பெரும்பாலும், கதை உச்சக் கட்டத்தை அடைந்த பிறகு ஓரிரு வாக்கியங்களில் சுருக்கமாக முடிந்து விட வேண்டும். |