1.5
சிறுகதை உத்திகள்
சிறுகதை
சிறப்பாக அமைய நடைத் தெளிவு, சிறந்த பாத்திரப்
படைப்பு, வடிவச் செம்மை போன்றவை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.
ஒரு படைப்பாளியை, மற்றொரு
படைப்பாளியிடமிருந்து தனித்து இனங்காட்டுபவை அவர்கள் கையாளும் படைப்பாக்க
உத்திகளே ஆகும். படைப்பாக்கத்தில்
மொழிநடை, பாத்திரப் பண்பு இரண்டும் முக்கியப் பங்கு
வகிக்கின்றன.
1.5.1
நடை
நடை
என்பது கதை ஆசிரியருக்கே உரிய தனித்த
வெளிப்பாடாகும். "நடை ஓர் ஆசிரியரின் மேற்சட்டை போன்றது
அன்று; உடம்பின் தோல் போன்றது" என்று கூறுவார் கார்லைல்.
“நடை
அழகு என்பது ஆசிரியரின் தனிச்சொத்து என்று
கருதினாலும், ஆசிரியர் அவர் வாழ்ந்த காலத்தின் செல்வாக்குக்கு
உட்பட்டிருப்பதை மறுக்க இயலாது. காலத்தின் சிந்தனைகள்,
எண்ணங்கள் அவற்றை வெளியிடும் பேச்சு மொழி, எழுத்து மொழி
இவ்வளவையும் ஜீரணித்துக் கொண்டுதான் படைப்பாளரும்
தம்முடைய சொந்த நடையில் படைப்பை வெளியிடுகின்றார். எனவே
நடைக்கு ஆசிரியர் மட்டும் காரணமாவதில்லை. அவர் வாழும்
காலமும் காரணமாகிறது” என்கிறார் அகிலன்.
“நல்ல
நடையானது படிப்பவரைக் கடைசி வரை
சலிப்பூட்டாமல் தன்னோடு இழுத்துச் செல்ல வேண்டும்,” என்கிறார்
பிளாபர் என்ற மேனாட்டுப் படைப்பாளி.
தமிழ்ச்
சிறுகதை எழுத்தாளர்களில் வ.வே.சு. ஐயர், வ.ரா,
புதுமைப்பித்தன், கல்கி, ந. பிச்சமூர்த்தி, அகிலன், ஜெயகாந்தன்,
சுஜாதா போன்றோர் தங்களுக்கென்று தனித்துவ நடையைக்
கையாண்டுள்ளனர்.
வ.வே.சு.
ஐயரின் தமிழ்நடை கம்பீரமானது. புதுமைப்பித்தன்
நடை கிண்டல், எள்ளல் நிரம்பியது. புதுமை, விறுவிறுப்பு, எளிமை
என்ற மூன்றின் கூட்டுறவு வ.ரா.வின் நடை. கேலி, கிண்டல்,
நகைச்சுவை, கற்பனை அனைத்தும் கலந்த நடை கல்கியின் நடை. லா.ச.ரா.வின்
நடை இலக்கியத் தமிழில் சொற்சிக்கலாகவும்,வார்த்தை
அலங்காரங்களாகவும் அமைந்து புதுப்பாங்கில் அமைந்திருக்கும்.
அகிலனின் நடை ஆற்றொழுக்கான நடை. ஜெயகாந்தனின் நடை
யதார்த்த நடை. பாத்திரங்களின் பேச்சுத் தமிழைப் பிரதிபலிக்கும் நடை
அது. சென்னைத் தமிழில் பல கதைகளை எழுதியவர் ஜெயகாந்தன். சுஜாதாவின்
நடை சுருக்கமும், திட்பமும் அதே
சமயத்தில் சோதனை முயற்சியும் வாய்ந்தது. நாஞ்சில் நாட்டுப் பேச்சுத்
தமிழைக் கையாண்டு சிறப்பாக எழுதியவர்கள் சுந்தர ராமசாமியும் நீல பத்மநாபனும்
ஆவர். தஞ்சை மாவட்டப் பேச்சு மொழியைக் கையாண்டு எழுதியவர் தி. ஜானகிராமன்.
கி. ராஜநாராயணன், பூமணி, பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்)
வண்ணதாசன் போன்றோர் திருநெல்வேலி வட்டார மொழியைக்
கையாண்டவர்கள்.
புதுமைப்பித்தனின்
நாசகாரக் கும்பல் என்ற கதையில்
அமைந்த நடை இது.
“வே ! ஒமக்கு
என்னத்துக்கு இந்தப் பெரிய எடத்துப் பொல்லாப்பு? அது பெரிய
எடத்துக் காரியம். மூக்கம் பய படுதப் பாட்டெப் பாக்கலியா ! பண்ணையார்வாள் தான் கண்லே வெரலெ விட்டு ஆட்ராகளே
! ஒரு வேளை
அது மேலெ அவுகளுக்குக் கண்ணாருக்கும். சவத்தெ விட்டுத் தள்ளும்
!” |
திருநெல்வேலி
வட்டார வழக்குக் கலந்த நடையில் கிண்டல்
தொனி வெளிப்பட எழுதியுள்ளார் அவர்.
கல்கியின்
கைலாசமய்யர் காபரா என்ற கதையில்
காணப்படும் நடை இது.
“பிரசித்தி
பெற்ற தமிழ் எழுத்தாளரும் பிரகஸ்பதிச் சுப்பன் என்ற புனைபெயரால்
புகழ்பெற்றவருமான ஸ்ரீபிராணதர்த்தி ஹரன் இன்று காலை மரணமடைந்த
செய்தியை மிகுந்த துக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மயிலாப்பூரில்
அவருடைய சொந்த ஜாகையில் திடீரென்று உயிர்போன காரணத்தினால்
அவருடைய வருந்தத் தக்க மரணம் நேரிட்டது. அவருக்கு அந்திம ஊர்வலத்துக்கும்
கணக்கற்ற ஜனங்கள் - சுமார் ஒன்பது பேர் இருக்கலாம் - வந்து
கௌரவித்ததிலிருந்து இந்த எழுத்தாளர் தமிழ் வாசகர் உள்ளத்தில்
எவ்வளவு மகத்தான இடத்தைப் பெற்றிருந்தார் என்பதை ஊகிக்கலாம்.
அவருடைய அருமையான ஆத்மா சாந்தியடைவதாக”. |
இது,
நகைச்சுவையும் எள்ளலும் கலந்த கல்கியின் நடையாகும்.
உணர்ச்சியும்,
சொல்வேகமும் நிறைந்த லா.ச.ரா. வின் நடையைக்
கீழ்க்காணும் பகுதியில் காணலாம்.
“திடீரென்று
இடியோடு இடிமோதி ஒரு மின்னல் வானத்தின் வயிற்றைக் கிழித்தது.
இன்னமும் என் கண் முன் நிற்கிறது, அம்மின்னல் மறைய மனமில்லாமல்
தயங்கிய வெளிச்சத்தில் நான் கண்ட காட்சி ! குழுமிய கருமேகங்களும்
காற்றில் திரை போல எழும்பி, குளவியாகக் கொட்டும் மின்னலும்,
கோபக்கனல் போல் சமுத்திரத்தின் சிவப்பும், அலைகளின் சுழிப்பும்,
அடிபட்ட நாய்போல் காற்றின் ஊளையும், பிணத்தண்டைப் பெண்கள்
போல, ஆடி, ஆடி, அலைந்து அலைந்து, மரங்கள் அழும் கோரமும்.!”
|
இவ்வாறு,
நடையின் போக்கு கதாசிரியர்க்குக் கதாசிரியர்
மாறுபட்டு அவர்களுக்கென்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தித்
தருவதுடன், கதையில் வரும் உணர்ச்சிகளுக்கு ஏற்ப வளைந்து
கொடுக்கும் இயல்பைப் பெற்றிருக்க வேண்டும் என்பது
இன்றியமையாததாகும்.
1.5.2
நோக்கு நிலை
ஒரு
சிறுகதை அதைக் கூறும் கோணத்திலும் சிறந்திருக்க
வேண்டும். கதை கூறும் கோணத்தை நோக்கு நிலை
உத்தி என்று
குறிப்பிடுவர். குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியை ஆசிரியர் எந்தக்
கோணத்திலிருந்து பார்க்கிறார் ; எந்த விதமான உள்ளீட்டுக்கு
எந்தக் கோணத்தைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது முக்கியம்.
ஆசிரியர்
நோக்கு, முக்கியப் பாத்திர நோக்கு, கடிதம்
அல்லது நாட்குறிப்பு மூலம் கதை கூறல் என்று பலவாறான நோக்கு
நிலைகளில் கதைகள் கூறப்படுவதுண்டு. ஆசிரியர் கதை கூறும்போது, தன்னை
உணர்த்தாமல் (‘நான்’ என்று கதைசொல்லிச் செல்லாமல்), படர்க்கையில் கதை
கூறுவது சிறந்த முறையாகும். பெரும்பாலான கதைகள் இவ்வகையைச் சார்ந்தன.
ஆசிரியரும் ஒரு பாத்திரமாக நின்று கதை கூறுவதுண்டு. புதுமைப்பித்தனின்
கோபாலபுரம்,
விபரீத ஆசை, கு.ப.ரா. வின் விடியுமா?,
மாயாவியின் பனித்திரை,
தி.ஜானகிராமனின் கோபுர விளக்கு,
அகிலனின் கரும்பு தின்னக் கூலி,
சூடாமணியின் படிகள் போன்ற கதைகளில்
ஆசிரியரே ஒரு பாத்திரமாக நின்று கதையைக் கூறுகிறார்.
விலங்குகள்,
அஃறிணைப் பொருட்கள் போன்றவை கதை கூறுவதாகவும் சில கதைகள் அமைந்துள்ளன.
வ.வே.சு. ஐயரின்
குளத்தங்கரை அரசமரம், புதுமைப்பித்தனின்
கட்டில் பேசுகிறது, வேதாளம் சொன்ன கதை
போன்றவை இதற்குச் சான்றுகளாகும்.
சி.சு.
செல்லப்பாவின் வலி, மௌனியின்
பிரபஞ்சகானம்,
பிரக்ஞை வெளியில், புதுமைப்பித்தனின்
நினைவுப்பாதை,
க.நா.சு. வின் வரவேற்பு போன்ற
கதைகளில் மனம் பேசுவதாக, மனம் பின்னோக்கி எண்ணுவதாகக் கதைகள் அமைந்துள்ளன.
இவ்வாறு,
கதை கூறும் முறைகள் பலவாறாக
அமைந்திருந்தாலும், ஆசிரியர் படர்க்கைக் கூற்றில் கதை கூறும் முறையே
பெரும்பான்மையான கதைகளில் அமைந்துள்ளன.
1.5.3
பாத்திரப்படைப்பு
ஒரு
படைப்பு என்ற நிலையில் முன்னிடம் வகிப்பவை பாத்திரங்கள்தாம். சிறுகதை
சிறியகதை என்பதால் அதில் அவசியமற்ற பாத்திரங்கள் தவிர்க்கப்பட்டுத்
தேர்ந்தெடுத்த பாத்திரங்களே இடம் பெறுகின்றன.
அன்றாட
வாழ்வில் நாம் காணும் மனிதர்கள்தாம் சிறுகதைப்
பாத்திரங்கள். தொடக்கத்தில் கதாசிரியர்கள் இலட்சியங்களுடன்
தேர்ந்தெடுத்துப் படைத்த பாத்திரங்களும் உண்டு. ஆனால் இன்று
‘வாழ்க்கையில் இலட்சியமில்லாதவனை, ஏமாற்றமடைந்தவனை, ஏமாற்றுபவனை’ என்று
அனைவரையும் படைத்து வருகின்றனர்.
சிறுகதை
ஆசிரியர்கள் ஒரு கதையைச் சொல்லாமல் பாத்திரங்களை மட்டும் உருவாக்கி
உலவ விட முடியும். ஆனால்
பாத்திரங்கள் இல்லாத கதை இருக்க முடியாது. எனவே பாத்திரங்கள்தாம் சிறுகதையின்
அடிப்படை.
சிறுகதை
ஆசிரியர்கள் தங்கள் பாத்திரங்களை அறிமுகப்
படுத்தச் சில முறைகளைக் கையாளுவர். ஆசிரியர் நேரடியாகப் பாத்திரத்தை
அறிமுகப்படுத்துவது ஒரு முறையாகும். காட்டாகப் புதுமைப்பித்தனின்
திருக்குறள் குமரேசப் பிள்ளை என்ற
கதையில், குமரேசப் பிள்ளையை நயமாக அறிமுகம் செய்வதைக்
காணலாம்.
“நீங்கள்
பட்டணம் போனால் கட்டாயம் பார்க்க வேண்டியது
என்று சொல்கிறார்களே, உயிர்க்காலேஜ் செத்த காலேஜ் என்று.
சென்னையில் அவை இரண்டிற்கும் அதிகமான வித்தியாசம்
ஒன்றுமில்லை. அதில் இரண்டாவதாக ஒரு காலேஜ் சொன்னேனே
அதில் அவசியமாக இருக்க வேண்டிய பொருள் எங்களின்
அதிர்ஷ்டத்தாலும், சென்னையின் துரதிர்ஷ்டத்தாலும்,
எங்களூரிலேயே இருக்கிறது. அதுதான் எங்களூர் திருக்குறள்
குமரேசப் பிள்ளை”.
ஆசிரியர்கள்
பாத்திரங்களை எவ்வாறு, எங்கிருந்து பார்த்துப்
படைக்கின்றனர் என்பதை அவர்கள் சொல்வதிலிருந்தே காணலாம்.
தி.
ஜானகிராமனின் சிலிர்ப்பு என்ற
கதையில் வரும்
காமாக்ஷி என்ற சிறுமி அழியாத ஓவியமாகப் படைக்கப் பட்டுள்ளாள்.
அப்பாத்திரம் உருவான விதத்தைப் பற்றி, ஆசிரியரே சொல்கிறார்:
“ஒரு சமயம்
மூன்றாம் வகுப்புப் பெட்டியொன்றில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்.
வறுமை நிரம்பிய ஒரு சிறுமி தன் வாழ்வுக்காக வசதியுள்ள ஒரு
குடும்பத்தவரோடு சென்று கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையை
இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. அப்போது உலகம் சிறை போலிருந்தது
எனக்கு. அந்த நடுக்கம், ஒரு அச்ச நிலை, என்னுடைய உள்ளத்தை
ஆட்டி வைத்தது. இதை வைத்துத்தான் சிலிர்ப்பு
என்ற கதையை எழுதினேன்.” |
பாத்திரங்களைப்
படைக்கும் போது ஆசிரியர்கள்
அனுபவிக்கும் அவஸ்தை நிலையை ஆசிரியர் சி.சு. செல்லப்பா
அழகாகக் கூறியுள்ளார்:
“ஒரு கழுகின்
பார்வையும் பாம்பின் செவியும் சேர்ந்து அவன் இருதயத்தைக் கொட்டிக்
கொட்டி உணர்ச்சி நெறி ஏற்றிக் கொண்டே இருக்கின்றன. சதா கிண்டிக்
கிளறிக் கொண்டே இருக்கும் மன உளைச்சல், சேறும் சகதியுமான மனக்குழப்பம்.
பொதுவாக அவஸ்தை நிலை. இந்த அவஸ்தை நிலைதான் எந்தச் சிருஷ்டிக்கும்
மூலவித்து. பிரமனிடம் அவன் சிருஷ்டிக்கு மூலக்கருத்து எங்கே
கிடைத்தது என்று கேட்டால் அங்கும் அவஸ்தையின் எதிரொலிப்புதான்
கிளம்பும். பாற்கடலிலிருந்து அமிர்த வசுக்கள் தோன்றினதும்
இந்தக் கொந்தளிப்பின் நடுவேதான், ஏன், உபாதை தாங்க முடியாமல்தானே
அவதாரங்களே பிறந்தன.” |
தாம்
வெவ்வேறு மனிதர்களிடத்தில் கண்டு மகிழ்ந்த
பண்புகளை யெல்லாம் ஒரே மனிதனிடத்தில் புகுத்தித் தாமே ஒரு
புதிய பாத்திரத்தை உருவாக்குவதும் ஆசிரியரின் திறமையாகும்.
மேற்கூறியவாறு
சிறுகதைகளில் பாத்திரங்கள் உயிர்பெற்று, வாசகர்கள் மனத்தில் உலாவரும்
விதத்தில் படைக்கப்பட்டுள்ளன. காலத்தால் அழியாத பாத்திரப் படைப்புகள்
எழுத்தாளனின்
எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.
|