1.6
சிறுகதை வகைகள்
சிறுகதைகளை
மூன்றாக வகைப்படுத்துவார் ஸ்டீவன்சன்
என்ற அறிஞர்.
(1) |
கருவால்
வந்த கதை (The Story of Plot) |
(2) |
பாத்திரத்தால்,
அதன் குணநலன்களால் உருவான கதை (The Story of Character) |
(3) |
பாத்திரங்களின்
உணர்வுகளை மட்டும் முக்கியத்துவப்படுத்தும் கதை (The Story
of Impression) |
இவை
தவிர, நிகழ்ச்சியால் சிறக்கும் கதை என்ற வகையையும் இணைத்துக் கொள்ளலாம்.
1.6.1
கருக்கதை
சிறந்த
சிறுகதை ஆசிரியர்களான மாப்பசான்,
ஆண்டன் செகாவ், ஓ ஹென்றி போன்றவர்கள்
கதைக்கருவினால் சிறந்த கதைகளைப் படைத்துள்ளனர். சின்னஞ் சிறிய கதைக்குள்
ருசிகரமான கதைக்கருவைப் பதித்து இவர்கள் கதை சொல்கின்றனர். புதுமைப்பித்தன்
கருவினால் சிறக்கும் பல கதைகளைப் படைத்துள்ளார். சங்குத்
தேவனின் தர்மம் என்னும் கதை இதற்கு நல்ல சான்றாகும். முறுக்குப்
பாட்டி முத்தாச்சி என்ற கிழவி தன் ஒரே மகளுக்குக் கல்யாணம்
செய்வதற்காகத் தங்கத்தில் காதணி செய்து மடியில் கட்டிக் கொண்டு, காட்டில்
தனிவழி நடந்து செல்கிறாள். சங்குத் தேவன் என்ற பெயர் பெற்ற வழிப்பறித்
திருடனின் பயம் அவளை ஆட்டி வைக்கிறது. வழியில் அந்தத் திருடனே அவளோடு
நடந்து வருகிறான். கிழவிக்கு அவனை யாரென்று தெரியவில்லை. வழித்துணை
என்று நம்பி அவனிடமே சங்குத்தேவனைத் திட்டுகிறாள். தன் மடிக்கனத்தையும்,
மகள் கல்யாணத்தையும் சொல்லுகிறாள். திருடன் பத்திரமாக அவளை ஊர் எல்லை
வரையில் கொண்டு வந்து விட்டு, அவளிடம் ஒரு பணப்பையைக் கொடுக்கிறான்.
கிழவி அவன் பெயரைக் கேட்கிறாள். சங்குத்
தேவன் என்று பதில் வருகிறது.
இக்கதையில்
ஓஹென்றியின் கதையில் வருவது போலக் கதையின் கடைசிப் பகுதியில் வாசகர்கள்
வியக்கக்கூடிய ஒரு முடிவு வருகிறது. கெட்டவன் எல்லா நேரங்களிலும் கெட்டவனாக
இருக்க மாட்டான் என்ற கதைக் கருவைக் கொண்டு உருவாக்கப்பட்ட இச்சிறுகதை
வாசகர்களுக்குச் சுவைதரும் விதத்தில் படைக்கப்பட்டுள்ளது.
1.6.2
பாத்திரக் கதை
புதுமைப்பித்தனுடைய பொன்னகரம்
என்ற கதை அம்மாளு
என்ற பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு
எழுதப்பட்ட கதையாகும். அம்மாளு சாதாரண ஏழைக் கூலித் தொழிலாளி, அவள்
கணவன் குதிரை வண்டி ஓட்டுபவன். அவன் அடிபட்டு மூச்சுப் பேச்சில்லாமல்
கிடந்தபோது அவனுக்குப் பால் கஞ்சி ஊற்றுவதற்காக அவள் தன் கற்பை விலை
பேசுகிறாள். கற்பு என்பது பாதுகாத்துப் போற்றக் கூடிய ஒன்று என்ற மேல்தட்டு
வர்க்கத்தின் நம்பிக்கைகளை அறியாத அம்மாளு கணவனுக்காகச் செய்த காரியத்தைப்
பற்றிப் பேசுவது பொன்னகரம் கதையாகும். மூன்று பக்கங்களில் அமைந்த இதில்
அம்மாளு இல்லாவிட்டால் கதை இல்லை. அவளே, அவள் செய்கையே கதையை உருவாக்கியிருக்கிறது
என்று பார்க்கும் போது இக்கதை பாத்திரத்தால் சிறந்த கதை என்றே கூற
வேண்டும்.
கதைகளைப்
படைக்கும் நெறிகளில் ஜெயகாந்தன் பாத்திர உருவாக்கத்திலேயே அதிகக் கவனம்
செலுத்துகிறார். அவர் படைத்த பாத்திரங்கள் வாழ்க்கையில் நம் கண்முன்னால்
காண்பவராவார்கள். ஜெயகாந்தனின் படைப்புகளில் அவர்கள் தாம் வாழும் சூழலிலிருந்து
அப்படியே எழுந்து வந்து இயங்குகிறார்கள்; உறவாடுகிறார்கள்; பேசுகிறார்கள்;
சிந்திக்கிறார்கள்; கோபப்படுகிறார்கள்;சிரிக்கிறார்கள்;
அழுகிறார்கள். ஒரு தாயைப் போலத் தம் பாத்திரங்களோடு ஜெயகாந்தன் ஒன்றி
நிற்கின்றார்.
ஜெயகாந்தனைப்
போன்றுதான் தி.ஜானகிராமனும் பாத்திரங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகின்றார்.
1.6.3
நிகழ்ச்சிக் கதை
அமெரிக்க
எழுத்தாளர் எட்கர் ஆலன்போ, ஹெமிங்வே,
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாக்கப்ஸ்
போன்றவர்கள் கதையம்சம் இல்லாமல் சுவையான
நிகழ்ச்சியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கதைகள் படைத்துப் புகழ்பெற்றனர்.
புதுமைப்பித்தன் இவ்வகைக் கதையையும் படைத்துள்ளார்.
நினைவுப் பாதை என்ற கதையில் கதையம்சம் என்ற ஒன்று இல்லை.
இழவு வீட்டில், இரண்டாவது நாள் விடிவெள்ளி கிளம்பும் நேரத்தில் தொடங்கி,
சுமார் இரண்டே நாழிகைகளுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைச் சொல்லி, நான்கே
பக்கங்களுக்குள் கதையை முடித்துவிடுகிறார் புதுமைப்பித்தன். மேலெழுந்தவாறு
பார்த்தால் திடீரென்று தொடங்கித் திடீரென்று முடிவுபெற்ற கதைபோல் தோன்றும்.
ஆனால் ஆழ்ந்து நோக்கினால் படிப்பவரின் மனப்பக்குவத்திற்குத் தகுந்தாற்போல்,
நிகழ்ச்சிகளுக்குப் பின்னே உள்ள மறைமுகமான கதை, படிப்பவரின் உள்ளத்தில்
வளர்ந்து கொண்டே போகும். இக்கதையின் முழு உருவம் சிந்திக்கச் சிந்திக்கப்
புலனாகும் விதத்தில் அமைந்துள்ளது. அதாவது தலையும் காலும் இல்லாத முண்டம்
போன்ற ஓர் ஓவியத்தை வரைந்து, அதற்கு முன்னும் பின்னும் உள்ள அழகுகளைக்
கற்பனையால் கண்டு மகிழச் செய்வதே இந்த வகைக் கதையின் நோக்கம்.
1.6.4
உணர்ச்சிக் கதை
காதல்,
பசி, கோபம், துக்கம், நகைச்சுவை, விரகதாபம் என்று ஏதாவது ஓர் உணர்ச்சியை
அடிப்படையாகக் கொண்டு சில கதைகள் படைக்கப்படுகின்றன. புதுமைப்பித்தனின்
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற சிறுகதையில் நகைச்சுவை
உணர்வு மேலோங்கி இருக்கின்றது. கல்கியின் பெரும்பான்மையான சிறுகதைகளில்
நகைச்சுவையுணர்வே மேலோங்கி இருக்கும். புதுமைப்பித்தனின்
வாடாமல்லி கதை, அதன்
நாயகி சரசுவின் தன்னுணர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. விரகதாபமா
அல்லது சுய இரக்கமா அவ்வுணர்ச்சி எது என்பதை வாசகர்களின் கருத்திற்கே
விட்டுவிடுகிறார்.
கல்யாணி
என்ற கதையில், கல்யாணியின் விரகதாபத்தை மையப்படுத்திப் பேசியுள்ளார்
புதுமைப்பித்தன். ஜெயகாந்தன் வாய்ச்சொற்கள்
என்ற கதையில் கண்ணில்லாத இருவரின் காதல் உணர்ச்சியைக் கதைப்படுத்தியுள்ளார்.
“அந்த இரவு
சம்பவத்திற்குப் பின் பகலும் இரவும் கண்ணப்பனைப் பற்றிய நினைவுகளிலேயே
சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் ருக்குமணி. மானசீகமாய் அவன் குரலையும்
பாட்டையும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தாள். வாழ்க்கை முழுதும்
அவன் பாடிக்கொண்டே இருக்க, பக்கத்தில் உட்கார்ந்து தான் கேட்டுக்
கொண்டே இருப்பதைக் காட்டிலும் உலகத்தில் வேறு ஒரு இன்பம் இருப்பதாக
அவளால் நம்ப முடியவில்லை” |
கு.ப.ரா.
வின் கதைகள் காம உணர்வின் உளவியல் பக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.
இவ்வாறு,
மனித உணர்வுகளை முக்கியத்துவப் படுத்தி எழுதித் தமக்கென்று முத்திரை
பதித்த எழுத்தாளர்களும் உள்ளனர். |