2.4 சிறுகதை வளர்ச்சியில் இதழ்களின் பங்கு

சிறுகதையின் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டவை இதழ்கள். இதழ்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சிறுகதைகளும் புகழ் அடைந்தன; சிறுகதை ஆசிரியர்களும் மக்களிடையே செல்வாக்குப் பெற்றனர். எனவே, சிறுகதை இலக்கியத்தில் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும்போது, இதழ்களின் பங்களிப்பைப் புறக்கணிக்க இயலாது.

2.4.1 கலைமகள், ஆனந்த விகடன் இதழ்கள்

கலைமகள், ஆனந்த விகடன் என்ற இதழ்கள் முப்பதுகளின் தொடக்கத்தில் தோற்றம் பெற்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. ஆனந்த விகடனை எஸ்.எஸ்.வாசன் 1928இல் தொடங்கினார். சராசரி வாசகர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த எழுத்தாளர் கல்கியின் எழுத்துகளால் பரவலாக இவ்விதழ் தமிழ் மக்களால் அறியப்பட்டுப் போற்றப்பட்டது. நல்ல சிறுகதைகள் வெளியிடுவதில் இவ்விதழ் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் காட்டியது. ஆனந்த விகடன் தன் அரசியல் கட்டுரைகளாலும், நகைச்சுவைத் துணுக்குகளாலும், சிறுகதைகளாலும் பெருவாரியான வாசகர்கள் மனங்களில் இடம் பெற்றிருந்தது. ஜெயகாந்தன் சரஸ்வதி போன்ற சிறு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தாலும், ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கிய போதுதான், அவர் வெகுஜனக் கூட்டத்தால் அறியப்பட்டார். ஆனந்த விகடன், எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகளுக்கும் அவ்வப்போது இடம் கொடுத்து வந்துள்ளது. 1931 முதல் 1941 வரை, பத்தாண்டுக் காலம் விகடனில் கல்கி ஆசிரியராக இருந்த போது, புதிய சிறுகதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். சிறுகதை எழுத்தாளர்களுக்குச் சன்மானம் (ஊக்கத் தொகை)ழங்கும் வழக்கத்தை ஆனந்தவிகடன்தான் முதன்முதலில் கொண்டு வந்தது.

கலைமகள் இதழ் 1932ஆம் ஆண்டு மாத இதழாகத் தோற்றம் பெற்றது. வெறும் பொழுதுபோக்குப் பத்திரிகையாக இல்லாமல், உயர்ந்த இலக்கியத்திற்கும், சிறப்பான சிறுகதைகளுக்கும் இடமளித்துச் செல்வாக்குப் பெற்றது. நாற்பதுகளில் மணிக்கொடி எழுத்தாளர்களும் இவ்விதழில் எழுதியுள்ளனர். பங்கிம் சந்திரர், சரத் சந்திரர், தாகூர், பிரேம் சந்த், காண்டேகர் ஆகியவர்களுடைய கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் கலைமகள் இதழில் வெளிவந்தன. கலைமகளில் எழுதிய எழுத்தாளர்களும், வாசகர்களும் இலக்கியத் தரம் வாய்ந்தவர்களாக அறியப்பட்டனர். கலைமகள் இதழில் எழுதிய எழுத்தாளர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது.

2.4.2 மணிக்கொடி இதழ்

மணிக்கொடி இதழ் 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் கு.சீனிவாசன், தி.ச.சொக்கலிங்கம், வ.ரா (வ.ராமசாமி) இவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டது. வ.ரா (வ.ராமசாமி) இதன் ஆசிரியராவார். லண்டனிலிருந்து வெளியான சண்டே அப்சர்வர் என்ற ஆங்கில இதழைப் போன்று, தமிழிலும் ஓர் இதழ் நடத்த வேண்டும் என்ற முயற்சியின் விளைவே இவ்விதழாகும். இதில் பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, பி.எம்.கண்ணன் ஆகியோர் கதை எழுதியுள்ளனர். இவ்விதழில் சிறுகதை எழுதும் முறை, சிறுகதை பற்றிய கொள்கைகள், மேனாட்டுச் சிறுகதை முயற்சிகள் இவற்றைப் பற்றிக் கட்டுரைகள் வெளியாகின. இவ்விதழ் தொடங்கிய ஒன்றரை ஆண்டுகளில் நின்று, பின்பு பி.எஸ். ராமையாவை ஆசிரியராகக் கொண்டு மீண்டும் வெளிவந்தது. சிறுகதைக்கான இவ்விதழ், தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடுத்தது. இலக்கியத் தரம் வாய்ந்த சிறுகதைகளையும் சாகா வரம் பெற்ற சிறுகதைகளையும் வெளியிட்டு இவ்விதழ் சிறப்புப் பெற்றது. அத்துடன் வாசகர்களுக்குச் சிறுகதை பற்றிய முழுமையான உணர்வினை ஏற்படுத்த முயன்றது. உலகின் தரமான சிறுகதைகளைத் தமிழ் வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காக மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் கதைகளை மணிக்கொடி இதழ் வெளியிட்டது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்ய மொழி, ஜப்பான் மொழி ஆகியவைகளிலிருந்தும், இந்திய மொழிகளான இந்தி, வங்காளி, மராத்தி மொழிகளிலிருந்தும் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. மணிக்கொடியில் புத்தக மதிப்புரையும், அந்த மதிப்புரையின் மீது விவாதங்களும் இடம்பெற்றன.

சிறுகதைப் படைப்பில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டு, உலகத் தரமான, எட்டக் கூடிய தரமான எந்நாளும் போற்றக்கூடிய கதைகளை வெளியிட்டுச் ‘சிறுகதை இலக்கியத்திற்கு ஒரு சிவிகையாக’ மணிக்கொடி இதழ் சிறந்தது. இதனால் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் இக்காலக் கட்டத்தை மணிக்கொடிக் காலம் என்று போற்றுகின்றனர்.

பேராசிரியர் சிவத்தம்பி மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றி விமர்சிக்கும் போது, அவர்களை மணிக்கொடிக் குழுவினர் என்று சுட்டுகின்றார். ரகுநாதன் மணிக்கொடிப் பரம்பரையினர் என்றும், சிட்டி, சிவபாதசுந்தரம் இருவரும் அவர்களை மணிக்கொடிக் கோஷ்டி என்றும் சுட்டும் அளவு, அவர்கள் இலக்கியத் தரமான சிறுகதைகளைப் படைப்பதில் ஒன்றுபட்டிருந்தனர் எனலாம்.

2.4.3 பிற இதழ்கள்

ஆனந்த விகடன், கலைமகள், மணிக்கொடி இதழ்களுக்கு முன்னர். தொடக்கத்தில் விவேக சிந்தாமணி, விவேக போதினி போன்ற இதழ்கள் சிறுகதைகளை வெளியிட்டுச் சிறுகதை வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டன. அடுத்த நிலையில் மாதவையா ஆசிரியராகப் பணியாற்றிய தமிழ்நேசன், பஞ்சாமிர்தம் இதழ்கள் நல்ல சிறுகதைகளை வெளியிட்டு வந்துள்ளன. பாரதியார் காலத்தில் சக்கரவர்த்தினி இதழ் சிறுகதை ஆக்கத்திற்குத் துணை நின்றுள்ளது. சுதேசமித்திரன், நவசக்தி, விமோசனம் ஆகிய இதழ்கள் சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்டன. சுதேசமித்திரன் வாரப் பதிப்பு, தினமணி வார வெளியீடு, ஆனந்த போதினி, அமிர்தகுண போதினி, பிரசண்ட விகடன், ஊழியன், சுதந்திரச் சங்கு, காந்தி போன்ற இதழ்களில் சிறுகதைகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டு வந்தது. சூறாவளி (1939), பாரத தேவி (1939), கலாமோகினி (1942), கிராம ஊழியன் (1943-1947), சந்திரோதயம் (1954-47), முல்லை (1946), தேனீ (1948) என்ற இதழ்கள் வெளிவந்தன. அவ்வப்போது தோன்றி மறைந்த இவ்விதழ்களும் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வந்துள்ளன. பின்பு சரஸ்வதி, ஹனுமான், சக்தி, எழுத்து போன்ற இதழ்கள் ஐம்பதுகளில் தோற்றம் பெற்றன. அறுபதுகளில் தீபம், இலக்கிய வட்டம், கணையாழி, நடை, கசடதபற, கொல்லிப்பாவை, யாத்ரா, பிரக்ஞை, சுவடு, அஃ, வாசகன், கண்ணதாசன் போன்ற இதழ்கள் அவ்வப்போது தோன்றின. அவற்றில் சில மறைந்தன. தீபம், கணையாழி, கண்ணதாசன் இதழ்கள் சிறுகதை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பின்னர் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் குங்குமம், குமுதம், கல்கி, தாய், சாவி, இதயம் பேசுகிறது போன்ற வார இதழ்களும் தினமலர், தினத்தந்தி போன்ற நாளிதழ்களின் வாரப் பதிப்புகளும் சிறுகதைகளை வெளியிட்டு வந்தன. சுபமங்களா, காலச்சுவடு, நிகழ், புதிய பார்வை, கவிதாசரண், புதுஎழுத்து, தாமரை, செம்மலர் போன்ற இதழ்களும் சிறுகதை வெளியீட்டில் அக்கறை காட்டி வருகின்றன. இவை தவிர மகளிர் இதழ்களான மங்கை, மங்கையர் மலர், அவள் விகடன், பெண்மணி, சிநேகிதி போன்ற இதழ்களும் சிறுகதை வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன. மொத்தத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இதழ்கள் தலையாய இடத்தைப் பெற்றுள்ளன எனலாம்.