2.5
சிறுகதை வளர்ச்சியில் பிற காரணிகளின் பங்கு
இதழ்கள்
பல்வேறு வகையான சிறுகதைப் போட்டிகளை உருவாக்கி, சிறுகதை எழுத்தாளர்களின்
எண்ணிக்கையை அதிகப்படுத்தின. அதேபோலச் சிறுகதைத் தொகுப்பு முயற்சிகளாலும்,
அமைப்புகளின் பரிசுத் திட்டங்களாலும் சிறுகதை சிறப்பாக வளர்ச்சியடைந்தது.
2.5.1
போட்டிகள்
இதழ்கள்
சிறந்த சிறுகதைகளை உருவாக்கவும், புதிய எழுத்தாளர்களை உருவாக்கவும்
முயன்றன. கல்கி, 1933இல், சிறுகதைப் போட்டி ஒன்றை
ஆனந்த விகடனில் நடத்தினார். போட்டிக்கு முந்நூறு கதைகள்
வந்திருந்தன. அவற்றில் மூன்றை மட்டும் பரிசுக்குரிய கதைகளாகத் தேர்ந்தெடுத்தார்கள்.
தேர்வுக் குழுவில், இலக்கிய உலகில் புகழ் பெற்ற ஏழுபேர் இடம் பெற்றிருந்தனர்.
ரசிகமணி டி.கே.சி., கே.எஸ்.வேங்கடரமணி, நகைச்சுவை எழுத்தாளர் எஸ்.வி.வி.,
அறிவியல் கட்டுரை எழுத்தாளர் பெ.நா.அப்புஸ்வாமி, ஆங்கிலப் பேராசிரியர்
கே.சாமிநாதன், ஆசிரியர் கல்கி, விகடன் அதிபர் வாசன் முதலிய எழுவர்
நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். எம்.ஜே.ராமலிங்கம் எழுதிய
ஊமைச்சி காதல் என்ற கதைக்கு முதல் பரிசும், ஆர்.எஸ்.ஸ்ரீகண்டன்
எழுதிய தோல்வி என்ற கதைக்கும்,
பி.எஸ்.இராமையா எழுதிய மலரும் மணமும்
என்ற கதைக்கும் கூட்டாக இரண்டாம் பரிசும் அறிவிக்கப்பட்டது. பரிசுக்
கதைகள் பின்பு விகடனில் வெளிவந்தன.
ஆனந்த
விகடன் சிறுகதைப் போட்டி நடத்திய சில மாதங்களுக்குப் பின்னர்
கலைமகள் பத்திரிகை நிறுவனம் ஒரு சிறுகதைப் போட்டிக்கு ஏற்பாடு
செய்தது. ஆனந்த விகடனைப் போல் கலைமகள் போட்டி பரபரப்பைக் கொடுக்கவில்லை.
என்றாலும், சிறுகதை எழுதுவோர் இடையே அதற்கு மதிப்பு வளர்ந்தது. ந.பிச்சமூர்த்தி
முள்ளும் ரோஜாவும் என்ற தலைப்பில்
சிறுகதை எழுதி முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து கலைமகள் இதழ் வருடம்
தோறும் வித்தியாசமான சிறுகதைப் போட்டிகளை நடத்துகின்றது.
அந்தாதிக் கதைகள், கிழமைக் கதைகள், இரட்டைக் கதைகள், இரட்டை மணிமாலைக்
கதைகள், ஏர்முனைக் கதைகள், போர்முனைக் கதைகள், வண்ணக் கதைகள்
என்று அக்கதைப் போட்டிகள் பல பெயர்களில் அமைந்தன. கலைமகள் இதழ், அமரர்
ராமரத்தினம் நினைவுச் சிறுகதைப் போட்டிகளைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக
நடத்தி வருகின்றது.
ஆனந்த
விகடனும் தொடர்ந்து பல சிறுகதைப் போட்டிகளை நடத்தி வந்துள்ளது. குறிப்பிட்ட
தொழில் செய்வோரை மையமாக வைத்துக் கதை எழுதும் போட்டி நடத்தப்பட்டது.
பின்னர் முத்திரைக் கதைகள், வைரமோதிரக் கதைகள் என்று பல போட்டிகள்
வைக்கப்பட்டன. விகடனின் வெள்ளி விழா ஆண்டில் சிறுகதைப் போட்டிகள் நிகழ்த்தப்பட்டு
நல்ல சிறுகதைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
கலைமகள்,
ஆனந்த விகடன் இதழ்களைத் தவிர, குமுதம், கல்கி, குங்குமம், இதயம் பேசுகிறது
போன்ற இதழ்களும் சிறுகதைப் போட்டிகள் நிகழ்த்தியுள்ளன. பின்னர், அரசு
மற்றும் தனியார் அமைப்புகள், குறிப்பாக, ஆயுள் காப்பீட்டுக் கழகம்,
குடும்பக் கட்டுப்பாட்டுத் துறை போன்றவைகளும் தங்கள் கருத்துகளைப்
பரப்பும் விதமாகச் சிறுகதைப் போட்டிகளை நடத்தியுள்ளன.
இத்தகைய
போட்டிகள், தமிழ் இலக்கிய உலகிற்கு நல்ல சிறுகதைகளைத் தந்தன என்பதைவிடப்
புதிய புதிய எழுத்தாளர்களை உருவாக்கித் தந்தன என்று கூறலாம்.
2.5.2
தொகுப்பு முயற்சிகள்
சிறுகதை
வளர்ச்சியில் ‘தொகுப்பு முயற்சியை’ ஒரு மைல்கல் என்று குறிப்பிடலாம்.
முதலில் இம்முயற்சியை மேற்கொண்டவர் அல்லயன்ஸ்
பதிப்பக நிறுவனர் குப்புசாமி அய்யர்
ஆவார். அவர் 1941 முதல் 1944 வரை ஆண்டுக்கு ஒரு தொகுதியாக நான்கு தொகுதிகளைக்
கதைக் கோவை என்ற பெயரில் வெளியிட்டார்.
இத்தொகுதிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண் பெண் எழுத்தாளர்களுடன்,
ஈழத் தமிழ் எழுத்தாளர்களும் இடம்பெற்றிருந்தனர். பல கதைகள் இந்தத்
தொகுப்புக்கென்றே எழுதப்பட்டவைகளாகும். சுமார் 200க்கும் மேற்பட்ட
கதைகள் இத்தொகுப்புகளில் இடம் பெற்றிருந்தன. உ.வே.சா, பெ.நா.அப்புஸ்வாமி,
பண்டித மணி கதிரேசஞ் செட்டியார், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார்,
வையாபுரிப் பிள்ளை, வரதராசனார் போன்ற தமிழ் அறிஞர்களும் இத்தொகுதிகளில்
கதைகள் எழுதியுள்ளனர்.
கதைக்கோவை வெளியான பிறகு, கல்கி வானொலியில் அத்தொகுப்புகளைப்
பற்றி விமர்சனம் செய்துள்ளார். இம்முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பைத்
தொடர்ந்து கலைமகள் நிறுவனம் தாங்கள் நடத்திய சிறுகதைப்
போட்டிகளில் பரிசு பெற்ற கதைகளைத் தொகுத்து - இரட்டை
மணிமாலை, இரட்டைக் கதைகள், மணிக்கதைகள், கிழமைக் கதைகள்
என்ற பெயர்களில் தொகுப்புகளை வெளியிட்டது. அமுத நிலையத்தார் அமுதக்
கதம்பம் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டனர். பின்பு
1963ஆம் ஆண்டு வெளியான சிறுகதைகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து,
1965ஆம் ஆண்டு, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச்
சங்கம் நூலாக வெளியிட்டது. தொடர்ந்து அவ்வமைப்பு அடுத்தடுத்த
ஆண்டுகளில் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டது. சாகித்திய
அக்காதெமியும் தமிழ்ச் சிறுகதைத்
தொகுப்பினை வெளியிட்டுள்ளது. முதல் தொகுதி அ.சிதம்பரநாதன்
செட்டியாராலும், இரண்டாவது தொகுதி அகிலனாலும்
தொகுக்கப்பட்டன. பின்பு 2000ஆம் ஆண்டு நவீனத்
தமிழ்ச் சிறுகதைகள்
என்ற பெயரில் சா.கந்தசாமி 1965
முதல் 1995 வரையில் வெளிவந்த கதைகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துத்
தொகுத்துள்ளார். 1900 முதல் 2005 வரையிலான பெண் எழுத்தாளர்களின் கதைகளைப்
பெண் மையக் கதைகள் என்ற பெயரில்
இரா.பிரேமா தொகுத்துள்ளார். அதற்கு
முன்பு, 1995இல், இ.எஸ்.டி என்பவர் ஐம்பத்துநான்கு பெண் எழுத்தாளர்களின்
சிறுகதைகளைத் தொகுத்து ஒரு நந்தவனத் தென்றல்
என்ற பெயரில் கோவை விஜயா பதிப்பகம்
மூலமாக வெளியிட்டுள்ளார். பின்பு அவரே மூத்த தலைமுறையினர் சிறுகதைகள்
முப்பத்து ஏழினைத் தொகுத்துத் தலைவாழை
என்ற பெயரில், 1994இல், அன்னம்
பதிப்பாக வெளியிட்டுள்ளார். வானதி பதிப்பகம்
நூறு எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து நான்கு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.
கலைஞன் பதிப்பகம், கவிதா பதிப்பகம், காவ்யா
பதிப்பகம் போன்ற பலரும் இத்தகைய தொகுப்புச் சிறுகதைகளை
வெளியிட்டு வருகின்றனர். ஜெயகாந்தனின் சிறுகதைகளைக்
கவிதா பதிப்பகம் தொகுத்து வெளியிட்டுள்ளது. கலைஞன் பதிப்பகம்
- விந்தன் சிறுகதைகள், நீல பத்மநாபன் சிறுகதைகள், ஜெயந்தன் சிறுகதைகள்,
ஜோதிர்லதா கிரிஜா சிறுகதைகள், உஷா சுப்பிரமணியன் சிறுகதைகள் என்று
பல தனிப்பட்ட சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து வெளியிட்டு
வருகின்றது. மேலும், கலைஞன் பதிப்பகம் இந்த
நூற்றாண்டுச் சிறுகதைகள் என்ற பெயரில் மூன்று தொகுதிகளை
வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் சிவசங்கரி, அறுபது முன்னணி எழுத்தாளர்களின்
சிறுகதைகளைத் தொகுத்து நெஞ்சில் நிற்பவை
என்ற பெயரில் இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். காவ்யா
பதிப்பகம் - தலித் சிறுகதைகள்
தொகுப்பினையும், பெண்ணியச் சிறுகதைகள்
தொகுப்பினையும் வெளியிட்டுள்ளது. இவ்வாறு, தமிழில் சிறுகதைத் தொகுப்புகள்
பல்கிப் பெருகியுள்ளன.
2.5.3
அமைப்புகளும் பரிசுகளும்
நல்ல
தமிழ்ச் சிறுகதைகளை உருவாக்கவும், நல்ல சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும்
தமிழகத்தில் தனிப்பட்ட அமைப்புகள் தோற்றம் பெற்றன. அவற்றில் முக்கியமானது
இலக்கியச் சிந்தனை என்னும் அமைப்பு.
1970ஆம் ஆண்டு, இலக்கிய ஆர்வம் மிகுந்த இலட்சுமணன்,
சிதம்பரம் என்ற இரு சகோதரர்களால் இது தோற்றுவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் வெளியாகும் வார, மாத இதழ்களில் வெளியான சிறுகதைகளைச்
சேகரித்து, ஒவ்வொரு மாதமும் அம்மாதம் வெளியான சிறந்த சிறுகதைகளைத்
தேர்வு செய்கின்றனர். பின்பு, அந்த ஆண்டின் சிறந்த பன்னிரண்டு கதைகளில்
மிகச் சிறந்த கதையாக ஒன்று தேர்ந்தெடுக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட
கதைகள் பன்னிரண்டும் ஒரு சிறந்த திறனாய்வாளரால் திறனாயப்படுகின்றன.
ஒவ்வோர் ஆண்டின் கதைகளையும் தனித்தனியாகத் தொகுத்து வானதி
பதிப்பகம் நூலாக வெளியிட்டு வருகிறது. இதனை முப்பத்தைந்து
ஆண்டுகளாகத் தொடர்ந்து செவ்வனே செய்து வரும் இவ்வமைப்பு, தரமான தமிழ்ச்
சிறுகதை முயற்சிகளுக்குத் துணை நின்றுள்ளது. இலக்கியச் சிந்தனையின்
முயற்சியினால் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலரையும் வாசகர்கள் இனம்
கண்டு கொள்ள முடிகிறது. வண்ணதாசன், வண்ணநிலவன், ஐராவதம், ஆதவன், ராஜநாராயணன்,
பிரபஞ்சன், வீர வேலுச்சாமி, நாஞ்சில் நாடன், திலீப்குமார் ஆகியவர்கள்
அனைவரும் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைப் படைப்பாளர்களின்
வரிசையில் இடம்பெற்றவர்கள்.
1977
முதல் இலக்கிய வீதி என்ற அமைப்பு
இனியவன் என்பவரால் தொடங்கப்பட்டு
நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பும் புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து
வருகிறது. செங்கல்பட்டைச் சுற்றியுள்ள எழுத்தாளர்களுக்கிடையே போட்டிகள்
வைத்துப் பரிசுகள் நல்கி வருகிறது. சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற
கதைகளை ஆண்டு தோறும் தொகுப்பு நூலாக வெளியிட்டு வருகிறது. மேலும்,
இவ்வமைப்பினர், மாதந்தோறும் பிரபல எழுத்தாளர்களை மதுராந்தகம், செங்கல்பட்டு
போன்ற இடங்களுக்கு அழைத்து இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். அதோடு
தில்லி போன்ற பெருநகரங்களுக்குச் சென்று, அங்குள்ள படைப்பாளிகளின்
உதவியுடன் சிறுகதைப் போட்டிகளை நடத்தி வருகின்றனர். தமிழ்ச் சிறுகதை
வளர்ச்சியில் இலக்கிய வீதியின்
பணி குறிப்பிடத்தக்கதாகும்.
கோவையைச்
சேர்ந்த லில்லி தேவசிகாமணி அமைப்பு,
திருப்பூர்த் தமிழ்ச் சங்கம்,
பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய அமைப்பு
என்று சில அமைப்புகள் சிறந்த சிறுகதைகளுக்கு ஆண்டு தோறும் பரிசுகள்
வழங்கி வருகின்றன. தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் சிறந்த இலக்கிய நூல்களுக்குப்
பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கும் போது, சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கும்
பரிசு நல்கி வருகின்றது.
|