3.5 தொகுப்புரை ‘புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு மைல்கல், ஒரு திருப்புமுனை, ஒரு சகாப்தம். எவ்வாறு பாரதி தமிழ்க் கவிதை உலகில் நடை, வடிவம், உள்ளடக்கம் முதலியவற்றில் புதியன புகுத்தி இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதைக்குத் தலைமகனாக விளங்கினாரோ, அதே போல் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்திற்குச் சிறப்பு மிக்க தலைமகனாக விளங்கியவர் புதுமைப்பித்தன்’ என்று இலக்கிய விமர்சகரும் படைப்பாளியுமான தொ.மு.சி.ரகுநாதன் குறிப்பிட்டுள்ளார். புதுமைப்பித்தன் எழுத்துகள் அவர் வாழ்ந்த காலத்தில் போதிய கவனிப்பையும் வரவேற்பையும் பெறவில்லை என்றாலும், இன்று அவர் தமிழ் இலக்கியவாதிகளால் கொண்டாடப் பெறும் சிறப்பைப் பெற்றுள்ளார். அவருடைய எழுத்தால் பாதிக்கப்பட்டு, அவருக்குப் பின் அதே பாணியில் கு. அழகிரிசாமி, ரகுநாதன், வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்றோர் எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
|