4.2 கு. அழகிரிசாமியின் சிறுகதைகள்

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் அழகிரிசாமி பதித்த தடம் வித்தியாசமானது; சிறப்பானது. அவரை, அவரது சிறுகதைப் படைப்புகள்தாம் முதன் முதலில் தமிழ் இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டின எனலாம். கதைகளில் உள்ளடக்கம், அமைப்பு அனைத்திலுமே சிக்கலற்ற எளிமைத் தன்மை காணப்படுகிறது. மனித உணர்வுகளே இவரது கதைகளில் அடிநாதமாக ஒலிக்கின்றன. அவர் எழுதி அச்சில் வெளிவந்த சிறுகதைகள் 101 ஆகும். 1963ஆம் ஆண்டு அழகிரிசாமி கதைகள் என்ற பெயரில் அவருடைய முதல் தொகுதி வெளிவந்தது. பின்பு, பன்னிரண்டு தொகுதிகள் தமிழ்ப் புத்தகாலயம், தேன்மழைப் பதிப்பகம் என்பவை மூலம் வெளியிடப்பட்டன. முதலில் வெளிவந்த அழகிரிசாமியின் கதைகள் என்ற தொகுதியே, அன்பளிப்பு என்ற பெயரில் ஒன்றிரண்டு கதை மாற்றத்துடன் திரும்பவும் வெளியிடப்பட்டது. அவருடைய கதைகள் அனைத்தும் 1940களிலிருந்து 1970 வரையிலான சுமார் 30 ஆண்டுக் காலத்தில் வெளிவந்தவைகளாகும்.

4.2.1 கதைக் கருக்கள்

கு.அழகிரிசாமி தம் சிறுகதைகளின் கரு பற்றித் தாமே கதைக்கு ஒரு கரு என்ற தலைப்பில் 1963ஆம் ஆண்டு எழுதியுள்ளார். தம் கதைகளில், ஒருசில கதைகளுக்குக் கரு ஒன்றும் கிடையாது. அவை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் பிறந்தவைகளே என்கிறார். சான்றாக ராஜா வந்திருக்கிறார் என்ற அவருடைய பிரபலமான கதை, நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. ஞாபகார்த்தம், பெரிய மனுசி, காலகண்டி, இதுவும் போச்சு, சிவசிவா என்ற கதைகள் கூட நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டவையே

ஒருசில கதைகளை, கதையாகவே மனத்தில் எண்ணிப் பார்த்து எழுதியுள்ளார். ‘கருவுக்குக் கதைதான் கரு! கருவிலிருந்து கதை தோன்றுவதற்குப் பதில் கதையிலிருந்து கரு தோன்றியுள்ளது’ என்கிறார் அவர் (கு. அழகிரிசாமியின் கட்டுரைகள்). அதற்கு எடுத்துக்காட்டுகளாகத் தவப்பயன், குமாரபுரம் ஸ்டேசன், முருங்கைமரம் மோகினி என்ற கதைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

தவப்பயன் கதைக்கு, கோவில்பட்டியில் தாம் பார்த்து ரசித்த நந்தவனமும், குமாரபுரம் ஸ்டேசன் கதைக்குத் தம் ஊர் அருகில் உள்ள - தாம் வாழ்க்கையில் முதன் முதலில் பார்த்து வியந்த குமாரபுரம் ஸ்டேசனும், முருங்கைமரம் மோகினி கதைக்குத் தம் சொந்த ஊரில் நண்பர் ஒருவருக்குச் சொந்தமான மிளகாய்த் தோட்டத்தில் செருப்புக்கட்டித் தொங்கவிடப்பட்ட முருங்கை மரமும் காரணங்களாக அமைந்தன என்கிறார்.

போகிற போக்கில் பேச்சோடு பேச்சாகக் காதில் விழுந்த சில வார்த்தைகளைக் கருவாகக் கொண்டு, அவற்றைக் கற்பனையில் வளர்த்துக் கதை எழுதியதாகவும் கு.அழகிரிசாமி கூறுகிறார். அதற்குச் சான்றுகளாகச் சிரிக்கவில்லை, வெறும் நாய் என்ற கதைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றும் சில கதைகள், பாதி அல்லது பாதிக்கு மேல் சிற்சில மாற்றங்களுடன் தம் சொந்த வாழ்க்கையில், தாம் சந்தித்த நிகழ்ச்சிகளாகவே அமைந்துள்ளன என்கிறார் அவர். சென்னையில் அவர் வசித்த போது, ஒரு சிறுவன் தன் சொந்தக் காசு கொடுத்து ஒரு டைரி வாங்கிக் கொண்டு வந்து, அன்பளிப்பு என்று எழுதித் தரும்படிக் கேட்டதாகவும், அதுதான் அன்பளிப்பு என்ற கதைக்குக் கருவாக அமைந்தது என்றும் கூறியுள்ளார். தகப்பனும் மகளும் என்ற கதையில், தாமும் தம் நண்பரும் ரயில் பயணத்தில் நேரில் கண்ட நிகழ்ச்சியை அப்படியே கதைப்படுத்தியதாகக் கூறும் அவர், தம்பி ராமையா, பாலம்மாள் என்ற கதைகள் தம் வீட்டில் நடந்த கதைகள் என்கிறார். அதுபோன்றே சந்திப்பு, உலகம் யாருக்கு?, கார் வாங்கிய சுந்தரம் என்ற கதைகளும் முறையே சொந்தக் கிராமமான இடைச்செவலிலும், கோவில்பட்டி, விருதுநகருக்கு இடையிலும், கோலாலம்பூரிலும் நடந்தவை என்றும் கூறியுள்ளார். முழுக்கக் கற்பனையாக எழுதிய கதைகள் பெரும்பாலும் காதல் கதைகளே என்கிறார்.

கு.அழகிரிசாமி எடுத்தாண்ட கதைக் கருக்களை அவரது காலப் பிற சிறுகதை எழுத்தாளர்கள் எடுத்தாண்ட கதைகளின் கருக்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது இன்றியமையாததாகும். விடுதலை வேட்கை, விதவை மணம், குழந்தை மணம், வரதட்சணைக் கொடுமைகள், மாமியார் மருமகள் உறவு, வறுமை, காதல், வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை பிறருடைய சிறுகதைகளின் கருக்களாக அமைய, கு.அழகிரிசாமியின் கதைக் கருக்கள் அவற்றிலிருந்து வேறுபட்டு அமைந்துள்ளன. அவர் விடுதலைப் போராட்டம் பற்றியோ, குழந்தை மணம், விதவை மணம், விதவை நிலை போன்றவற்றைப் பற்றியோ தம் கதைகளில் பேசவே இல்லை. ஆனால், தீண்டாமை, வேலையில்லாத் திண்டாட்டம், காதல், வறுமை போன்றவற்றைப் பற்றிப் பேசியுள்ளார்.

4.2.2 கதை மாந்தர்கள்

அழகிரிசாமி தம் கதைகளில் பல்வேறு கதைமாந்தர்களைப் படைத்திருந்தாலும், குழந்தைகளைப் பல கதைகளில் கதை மாந்தர்களாகப் படைத்துள்ளார். அவை அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், பேதமை, தெய்வம் பிறந்தது, காற்று, குமாரபுரம் ஸ்டேசன், தம்பி ராமையா, இருவர் கண்ட ஒரே கனவு, சிரிக்கவில்லை, பெரிய மனுசி, பட்டுச் சொக்காய் என்பவைகளாகும். இக்கதைகளில் குழந்தைகளின் செயல்களை மட்டுமன்றி அவர்களின் மனநிலையையும் உளவியல் நோக்கில் படைத்துள்ளார். குறிப்பாக, அன்பளிப்பு கதை குழந்தைகளின் உளவியலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

பொதுவாக, குழந்தைகள் இடம்பெறும் கதைகளில் தாய்ப் பாசம், குழந்தைப் பாசம், குழந்தைகளின் விளையாட்டுத்தனம் போன்றவைகள் கருவாக அமையும். ஆனால் இவற்றிற்கு மாறாக, கு.அழகிரிசாமி தம் கதைகளில் குழந்தைகளின் விருப்பு வெறுப்பு, ஏக்கம், எதிர்பார்ப்பு, சோகம், சிரிப்பு, அழுகை, பயம் போன்ற உணர்வுகளைக் கதையாக அமைத்துள்ளார்.

அன்பளிப்பு கதையில், சாரங்கன் என்ற குழந்தையின் மனநிலை படம்பிடித்துக் காட்டப்படுகிறது. மற்றக் குழந்தைகள் குறும்பு பண்ணும்போது, ‘சாரங்கன் ஒருவன்தான் என்னோடு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்பான். அவன் எப்பொழுதுமே குறும்பு பண்ணமாட்டான்; விளையாடமாட்டான்; மற்ற குழந்தைகள் எல்லாரும் ஒருவிதம். அவன் ஒரு விதம். என்னிடத்தில் பயபக்தியோடு நடந்து கொள்ளும் சிறுவன் அவன் ஒருவன்தான்’ என்று அவன் மற்ற குழந்தைகளிலிருந்து வித்தியாசமானவன் என்று எடுத்துக்காட்டுகிறார்.

இக்கதையில், எழுத்தாளர் பல குழந்தைகளோடு பழகுகிறார் என்றாலும், இரு குழந்தைகளுக்கு மட்டும் அன்பளிப்பாக டைரி தருகிறார். பிற குழந்தைகள் அதைப் பொருட்படுத்தவில்லை என்றாலும், சாரங்கன் மட்டும் தனக்கு அவர் தரவில்லை என்று ஏக்கமாகப் பார்க்கிறான். அவன், வாய்விட்டு எழுத்தாளரிடம் தனக்கும் அன்பளிப்பு வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால், அவன் தானே டைரி ஒன்றை வாங்கி வந்து, அதை அவரிடம் கொடுத்து ‘எழுதுங்கள்’ என்கிறான்.

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘என்ன எழுத?' என்று கேட்டார் எழுத்தாளர். ‘என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு என்று எழுதுங்கள்' என்று கேட்டுக் கொண்டான் அவன். அத்துடன் கதை முடிகிறது. இக்கதையில் கு.அழகிரிசாமி தம் எழுத்துகளால் ஒன்றையும் உணர்த்தாமல் வாசகர்களை உய்த்துணர வைக்கிறார். அதாவது, சாரங்கன் தனக்கு எழுத்தாளர் அன்பளிப்புத் தரவில்லை என்பதை மனத்தில் குறையாக வைத்துக் கொண்டு, அக்குறையைத் தீர்க்கத் தானே டைரி வாங்கிக் கொண்டு வந்து அவரிடம் எழுதச் சொல்லும்போது, அது எந்த அளவுக்கு அவன் மனத்தைப் பாதித்துள்ளது என்பதை விளங்க வைத்துள்ளார். அன்பளிப்பு தானாக மனமுவந்து ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதாகும். இக்கதையில் சாரங்கன், தன் பொருளையே கொடுத்து, அதையே அன்பளிப்பாகப் பெறுவதைக் காட்டி, அதனால் குழந்தைகளுக்கு எது கொடுத்தாலும் அதை எல்லாருக்கும் கொடுக்க வேண்டும். ஒருவருக்குக் கொடுத்து மற்றவர்களுக்குக் கொடுக்காமல் விடுவது எந்த அளவு குழந்தையின் மனத்தைப் பாதிக்கும் என்பதைக் கு.அழகிரிசாமி உணர்த்தியுள்ளார். எல்லாக் குழந்தைகளும் ஒரே நோக்குடையவர்கள் அல்லர். ஒருசில குழந்தைகள் அன்பளிப்புப் பெறாததைப் பொருட்படுத்தவில்லை என்றாலும், ஒருசில குழந்தைகள் அதை மனத்திற்குள் வைத்துக் கொண்டு வருந்துவதும் உண்டு என்பதை இக்கதை மூலம் நன்கு விளக்கியுள்ளார். கரு, பாத்திரப் படைப்பு, எழுதும் முறை, உளவியல் சித்திரிப்பு, நடை என்று அனைத்து நிலையிலும் இந்தக் கதை சிறந்துள்ளதை உணர முடிகிறது.

கல்யாண கிருஷ்ணன் - கதையில் வரும், கல்யாண கிருஷ்ணன் நம்மோடு வாழ்பவன் போலவும், நாமும் அவனிடம் கடன் கொடுத்து ஏமாந்தது போலவும் தோன்றும் விதத்தில் படைத்துள்ளார். ஏனெனில், நம் வாழ்க்கையில் நாள்தோறும் காணும் பாத்திரம் கல்யாண கிருஷ்ணன்.

இக்கதை கல்யாண கிருஷ்ணனிடம் 37 ரூபாய் கடன் கொடுத்து, ஏமாந்த ஒருவர் கூறுவதாக அமைந்துள்ளது. ‘வேறொருவர் காணாமல் உலகத்தில் உலாவலாம் என்ற பெரியவர்கள் வாக்கைப் பிரத்தியட்சமாக நிரூபித்துக் காட்டியவன் ஆர்.எஸ்.ஆர்.கல்யாண கிருஷ்ணன் ஒருவன்தான். ஏனென்றால், நான் குடியிருந்த மாம்பலத்திலேயே என் கண்ணில் படாமல் அவன் மூன்று வருஷமும் ஏழு மாதமும் உலாவியிருக்கிறான். ஊரில் குடியிருந்து கொண்டே ஒரு நாள் கூட எனக்குத் தட்டுப்படாமல் அவனால் எப்படி உலாவ முடிந்தது? என் கண்ணில் கோளாறா? இல்லை, திடீரென்று மறையும் அபூர்வ சக்தி ஏதாவது கல்யாண கிருஷ்ணனிடம் இருந்ததா? அதை எல்லாம் யோசித்து இப்பொழுது மண்டையை உடைத்துக் கொள்ளுவானேன்?’ என்று தாம் ஏமாந்த கதையைத் தொடங்குகிறார் அவர்.

பணம் போனதை விடத் தம்மை ஏமாற்றிவிட்டானே அவன் என்ற ஆதங்கம் கதை முழுவதும் எதிரொலிக்கின்றது. தேடோ தேடென்று அவனைத் தேடுகின்றார். தேடியதுதான் அவர் கண்ட பலன். கடைசியில் சில ஆண்டுகளுக்குப் பின், அரசு அலுவல் நிமித்தமாக அந்தமான் போனவர் அதே பெயரில் அங்கு ஒருவர் இருப்பதை அறிகிறார். அவன் கிடைத்துவிட்டான் என்று மகிழும் தருணத்தில் அவர் வேறு ஆள் என்று தெரிகிறது. அதுமட்டுமல்ல, அவர் பார்த்த மனிதரும் கல்யாண கிருஷ்ணனுக்குக் கடன் கொடுத்துவிட்டுத் தேடிக் கொண்டிருப்பதையும் அறிகிறார். இப்படி முடிகிறது கதை.

அன்றாட வாழ்க்கையில் நாம் பல கல்யாண கிருஷ்ணன்களைச் சந்தித்திருப்போம். பெயர் மாறியிருக்கும் அவ்வளவே. இப்படி அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாகச் சந்திப்பவர்களைக் கூட நடைமுறையில் வாழ்வியல் பின்னணியோடு மனத்தை ஈர்க்கும் வகையில் படைப்பதில் கு.அழகிரிசாமி வல்லராகத் திகழ்கிறார்.

கு.அழகிரிசாமி, தம் தாயின் மீது மிகுந்த பற்றுடையவர். தம் தாயையே அவர் சில கதைகளில் பாத்திரமாக்கியுள்ளார். ராஜா வந்திருக்கிறார் கதையில் தம் தாயார் தாயம்மாவை மிகப் போற்றியுள்ளார். பாலம்மாவின் கதை என்பது, அவருடைய தாயாரின் கதையே. அழகம்மாள் கதையிலும் அவரை ஒரு பாத்திரமாகப் பார்க்கலாம். இரண்டு ஆண்கள் கதையில், தம் தாய்மாமா ஒருவரையே கதாபாத்திரமாய்ப் படைத்துக் காட்டியுள்ளார். திரிவேணி கதையில், தம் பெருவிருப்பிற்குரிய ராமர் சீதையைப் பாத்திரங்களாக்கியுள்ளார். இவ்வாறு, தாம் சந்தித்த, ரசித்த, தம் பெருவிருப்பிற்குரியவர்களையே கு.அழகிரிசாமி தம் கதைகளில் பாத்திரங்களாக்கியுள்ளார்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

கு.அழகிரிசாமி எந்தெந்தப் பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்?
2.

கு.அழகிரிசாமி எந்த நூலுக்காகச் சாகித்திய அக்காதமி விருதினைப் பெற்றுள்ளார்?
3.

கு. அழகிரிசாமி மலேசியா வாழ் தமிழர்களுக்காகத் தொடங்கிய அமைப்பின் பெயர் யாது?
4.

கு. அழகிரிசாமியின் பிரபலமான இரு கதைகளின் பெயர்களைக் கூறுக.
5.

ராமர் சீதை இருவரும் கதைப்பாத்திரங்களாக இடம்பெறும் கதையின் பெயரினைக் கூறுக.