4.3
சமுதாயப் பார்வை
கு. அழகிரிசாமி இலக்கிய ரசனையும், மனித நேயப் பண்புகளும், எதையும் கூர்ந்து
உற்று நோக்கும் கூர்த்த மதியும் உடையவர். அவர், வாழ்க்கையில் தாம்
பெற்ற அனுபவங்களையும், கண்ட காட்சிகளையும் தம் படைப்புகளுக்கு அடிப்படையாக
அமைத்துக் கொண்டுள்ளார்.
4.3.1
நகர வாழ்வியல்
கு.
அழகிரிசாமி கணிசமான படைப்புகளில் நகர மனிதர்களையும், நகர வாழ்வியலையும்
பதிவு செய்துள்ளார். இரண்டு பெண்கள், தன்னையறிந்தவர்
போன்ற கதைகளை அவற்றிற்குச் சான்றுகளாகக் கூறலாம். நகர வாழ்வியல் நாகரிகம்
என்ற பெயரில், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது கூடக் கிடையாது.
இதைத் தம் கதையில்,
‘அந்தக் குடித்தனக்காரர் இரவு பத்து மணிக்குத் திடீரென்று செத்துப்
போய்விடவே, அவருடைய மனைவி வேறு துணையின்றி அழுதுகொண்டே இரவைக் கழித்தாளாம்.
ஆனால், அழுகைச் சத்தம் காதில் விழுந்தும், வேலைக்காரன் வந்து மரணச்
செய்தியை அறிவித்தும் கூட, வீட்டுக்காரர் தம் குடும்ப சகிதமாக மாடியிலேயே
உட்கார்ந்து ரேடியோவில் இந்துஸ்தானி இசைத்தட்டுகளைத்தான் கேட்டுக்
கொண்டிருந்தாரே ஒழிய, “என்ன? ஏது?” என்று விசாரித்துக் கொண்டு கீழே
இறங்கி வரவில்லையாம். இப்படிப்பட்ட வீட்டுக்காரர் கிடைத்தது ஒரு வகையில்
‘மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்’ (இரண்டு பெண்கள்) என்று எள்ளலாகச் சுட்டிக்
காட்டியுள்ளார்.
‘சென்னைக்கு
வந்து, சிரமத்துக்கு மேலே சிரமப்பட்டு,
சிபாரிசுக்கு மேல் சிபாரிசு வைத்து, அப்புறம் சிபாரிசு
செய்தவர்களினால் ஏற்பட்ட சிரமங்களையும் சகித்துக் கொண்டு
எப்படியோ மயிலாப்பூரில் ஓர் அறையை வாடகைக்குப் பிடித்து
விட்டேன். நல்ல அறைதான். அந்த அறையை ஒரு பகுதியாகக்
கொண்ட அந்த வீடு ஒரு தனி வீடாகும். ஒரே வளைவுக்குள்ளே
ஒரே ஒரு குழாய், ஒரே ஒரு முற்றம், ஒரே ஒரு வாசல் - ஆனால்
பத்து வீடுகள், நூறு ஆட்கள், ஆயிரம் சண்டைகள் என்ற
கணக்கில் கட்டப்பட்ட இருட்டுக் கொட்டடிகளில் ஒன்றல்ல அந்த
வீடு’ என்று சென்னையில் ஒண்டுக் குடித்தன அனுபவத்தை
விவரித்துள்ளார் அவர்.
4.3.2
ஆண் பெண் நட்பு
இந்தச்
சமூகம் ஆணாதிக்கச் சமூகம். எனவே, இச்சமூகம் ஆண்-பெண் நட்புறவை, எந்த
வயதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதை, ‘பிரம்மச்சாரி, கிழவியோட
பேசினாலும், வாலிபப் பெண்ணோடு பேசினாலும் இந்த உலகம் ஒன்று போலவே சந்தேகப்படும்’
என்று இரண்டு
பெண்கள் கதையில் சுட்டிக் காட்டியுள்ளார். அது போன்று,
பெண்கள் தங்களைக் கவனிக்கத் தொடங்கி விட்டாலே, தாங்கள் மாப்பிள்ளை
ஆகிவிட்டது போல் ஆண்கள் மகிழ்ச்சி
கொள்வதும் உண்டு என்பதை,
"இப்படி ஒரு பெண்ணின் கவனத்திற்கு
ஆளாகியிருக்கிறோம் என்பதை முட்டாள் தனமாகக் கவனிக்காமல் இருந்து
விட்டோமே! 'ஐயோ, நான் தலைவாரிக் கொள்ளாமலும், முகக்ஷவரம் செய்து
தெரு வழியாகச் சில தடவைகள் நடந்து வந்ததை அவள் பார்த்திருப்பாள்
அல்லவா? இதற்கு என்ன செய்யலாம்? என்று எண்ணி வருந்தி, இனிமேல் அழகாகக்
காட்சியளிக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். அன்று மாலையிலேயே
குடை வாங்கி விட்டேன். பழைய செருப்பைக் கழற்றி அறைக்குள் எறிந்து
விட்டு, புதுச்செருப்பு வாங்கினேன். முகப்பவுடர், ஸ்னோ, க்ரீம்,
செண்ட் முதலியவையும் வாங்கிக் கொண்டேன். அதன் பிறகு தினந்தோறும்
எதிர் வீட்டுப் பெண்ணுக்கும், எந்த வீட்டுப் பெண்ணுக்கும்
நான் சுந்தர புருஷனாகக் காட்சியளிப்பதில் பெரிதும் கவனம் செலுத்தி
வரலானேன்" என்று
படைத்துக் காட்டியுள்ளார். |
இவ்வுலகம், அழகில்லாத
கருப்புப் பெண்ணுடன் ஒரு வாலிபன்
வருடக் கணக்கில் பழகினால் கூடக் கண்டுகொள்ளாது. ஆனால்,
அழகான பெண்ணுடன் ஒருநாள் பழகினால் கூட அதைப் பெரிதாகப் பேசும் என்பதைக்
‘கருப்புப் பெண்ணின் வீட்டுக்குப் போய்க் குலாவிவிட்டு வந்தது தப்பில்லை; அழகான பெண்ணின் வீட்டுக்கு வெறுமனே போய் வந்தது
பெரும் குற்றம். இது என்ன விசித்திரமடா!” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
இவ்வாறு சமூகத்தில் ஆண்-பெண் நட்பு என்பது ஏற்றுக் கொள்ளப்படாத
ஒன்றாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.
4.3.3
பொதுவுடைமைப் பார்வை
பொதுவுடைமைக்
கட்சிப் பிரமுகராகிய பி.எஸ். என்பவரோடு கு.அழகிரிசாமி நெருங்கிய தொடர்பு
கொண்டிருந்தார். அவர் மூலம் பொதுவுடைமைத் தத்துவ நூல்களையும் அக்கட்சியின்
வெளியீடுகளையும் பெற்றுப் படித்தறிந்தார். பொதுவுடமைக் கருத்துகள்
எழுத்தாளரை ஈர்த்ததால், அவற்றை நன்கு உள்வாங்கிக் கொண்டார். அதைத்
தம் கதைகள் சிலவற்றிலும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாகத் திரிபுரம்,
ராஜா வந்திருக்கிறார்,
அழகம்மாள், பாலம்மாள் ஆகிய படைப்புகளையும் பொதுவுடைமைப்
பின்னணியோடு படைத்துள்ளார். ராஜா வந்திருக்கிறார் கதையில், ஏழ்மை நிலையில்
உள்ள தாயம்மாள் அந்த நிலையிலும், ஆதரவாகத் தன்னிடம் ஒட்டிக் கொண்ட
ராஜாவுக்குப் புது உடைகள் கொடுப்பதும், பணக்கார ராமசாமி குடும்பத்திற்கு
வந்த ராஜாவைப் போல்தான், ஏழை மங்கம்மா வீட்டிற்கு வந்த ராஜாவும் என்பதைப்
பொதுவுடைமைப் பார்வையில் ஒன்றுபடுத்துகிறார். திரிபுரம் கதையில், ஏழ்மையில்
கெட்டுப் போகும் தாயையும் மகளையும் பற்றிப் பேசுகிறார். பசியாலும்
பட்டினியாலும் மயங்கிக் கிடக்கும் மகளும், பசியால் இரவில் தெருவில்
கீழே கிடக்கும் வெள்ளரிக்காயைத் தேடிச் செல்லும் தாயும் அவலத்தில்
ஒன்றுபட்டு நிற்கிறார்கள். கடைசியில் வயிற்றுப் பசியை வெல்வதற்கு இயலாமல்
இருவருமே தவறு செய்கின்றனர். தாயின் கண் முன்னால் மகள் கற்பை விற்கும்
கோர நாடகம் நடக்கிறது. மகள், கையில் கிடைத்த 10 ரூபாயைப் பார்த்துச்
சிரிக்கிறாள். ‘எளிதாக இவ்வளவு பெரிய தொகை கிடைத்து விட்டது என்பதை
நினைக்கும்போது, அவளால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. உரக்கச் சிரித்தாள்.
விட்டு விட்டுப் பலமுறை சிரித்து விட்டாள். அந்தச் சிரிப்பு எதற்கு
என்று அவளுக்கே புரியவில்லை. பாண்டியனிடம் சிவபிரான் வாங்கிய பொற்பிரம்படியைப் போல், அவள் சிரித்த சிரிப்பு எங்கெல்லாம் பிரதிபலிக்க
இருந்ததோ, அவளுக்கே தெரியாது. அவள் மனிதன் கட்டிய ஒழுக்கத்தை நோக்கிச்
சிரித்தாள். ஒழுக்கக் கேட்டை நோக்கிச் சிரித்தாள். நாகரிகத்தையும்
அநாகரிகத்தையும் பார்த்துச் சிரித்தாள். பணக்காரர்களை, ஏழைகளை, ஆண்களை,
பெண்களை, பஞ்சத்தை இப்படி எத்தனையோ அடங்கிய உலகத்தையே நோக்கிச் சிரித்தாள்...’
‘சிவன் சிரித்துத் திரிபுரத்தை எரித்தான். இவள் சிரிப்பு என்ன செய்யப்
போகிறதோ?’ என்று கூறிக் கதையை முடிக்கிறார். புதுமைப்பித்தன் பொன்னகரம்
கதையில் பேசியது போல, கற்பு என்று கதைப்பதெல்லாம், ஏழைகளிடம் செல்லுபடியாகாது.
மூன்று நேரமும் பசியாற உண்பவர்கள் வேண்டுமானால் அதைப்பற்றிப் பேசலாம்.
‘ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாது நிற்கும் ஏழைகளிடம் அது வெற்று
வார்த்தையே’ என்று இக்கதை மூலம் எடுத்துரைக்கின்றார். இவ்வாறு அவர்
கதைகளில் சில பொதுவுடமைப் பார்வையினவாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது.
|