4.4
படைப்பாக்க உத்திகள்
சிறுகதைப்
படைப்பாளிகள் தங்கள் இலக்கிய ஆளுமைத் திறனுக்கும், எழுத்துத் திறனுக்கும்
ஏற்பப் பல படைப்பாக்க உத்திகளைக்
கையாளுகின்றனர். ஆனால், எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர் இவ்வுத்தி
முறைகளில் வேறுபாடுகளைக் காண முடியும். அந்த விதத்தில்
கு.அழகிரிசாமியின் படைப்பாக்க உத்தி முறைகளைத் தனித்து இனம்
காண இயலும்.
4.4.1
கதை கூறும் முறை (Point of View)
கு.
அழகிரிசாமியின் கதைகளில் பல, ஆசிரியரே கதை கூறும் பாங்கில் அமைந்துள்ளன.
சில கதைகள் மட்டுந்தான் பாத்திரக் கூற்று முறையில் அமைந்துள்ளன. ‘மறுநாள்
ஞாயிற்றுக்கிழமைதானே என்று, இரவு வெகுநேரம் வரையில் கண் விழித்துப்
படித்துக் கொண்டிருந்து விட்டேன்’ என்று அன்பளிப்புக்
கதை, தன்கூற்றில் தொடங்குகிறது. ‘எனக்குக் கல்யாணம் ஆகாதிருந்த சமயத்தில்
நடந்த பல ரசமான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று’ என்று
இரண்டு பெண்கள் கதை தொடங்குகிறது. ‘முதன்
முதலாகக் கோலாலம்பூருக்குப் போன நாளிலிருந்தே நான் அவளைத் தேடிக் கொண்டிருந்தேன்’
என்று கண்ணம்மா கதை தொடங்குகிறது.
சில கதைகள் படர்க்கைக் கூற்றில் தொடங்குகின்றன. மற்றும் சில கதைகள்
வர்ணனையுடன் தொடங்குகின்றன. ‘ஊருக்கு வலப்புறத்தில் இருக்கும் ஐரணக்
கவுண்டர் தோட்டத்துக் கிணற்றில் சதா சர்வகாலமும் தண்ணீர் எடுத்துக்
கொண்டிருந்தாலும் தண்ணீர் வற்றவே வற்றாது. எப்பொழுதும் ஊறிக் கொண்டுதான்
இருக்கும்’- இப்படி இட வர்ணனையுடன் தொடங்குகிறது
முருங்கைமரம் மோகினி என்னும் கதை. சில கதைகள் பாத்திர
அறிமுகமாக, பாத்திரம் பற்றிய வர்ணனையுடன் தொடங்குகின்றன.
‘கோமதிநாயகத்துக்கு
வயது முப்பத்தைந்து. கல்யாணமாகி ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள்.
கோமதி நாயகத்தின் தகப்பனார் காலமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. தகப்பனார்
காலமானதும் குடும்பச் சொத்துக்குக் கோமதி நாயகமே முதலாளியாகி விட்டான்.
அவனுக்கு உடன்பிறந்த தம்பியோ அண்ணனோ கிடையாது. சுமார் ஐம்பதினாயிரம்
பெறுமதிப்புள்ள சொத்துக்கு இவன் அதிபதியானதும் தன் வாழ்வில் எத்தனையோ
மாறுதல்கள் நிகழ்வதைக் கண்டான். முன்னால், ‘என்னப்பா, கோமதிநாயகம்! என்று சொல்லித் தோளில் கைபோட்டுப் பேசியவர்கள், இப்போது அவனை முதலாளி
என்று கூப்பிட ஆரம்பித்தார்கள்’- இவ்வாறு
சாப்பிட்ட கடன் என்ற கதை கோமதி நாயகம் என்ற பாத்திரத்தின்
அறிமுகமாகத் தொடங்குகிறது. இத்தகைய முறைகளில் கு.அழகிரிசாமியின் கதைகள்
பல வகைகளிலும் தொடங்கினாலும், தன்கூற்று முறைதான் அதிகம் காணப்படுகிறது.
4.4.2
மொழிநடை
கு.அழகிரிசாமியின் மொழிநடை நேரடியானது. விவரிப்புப் பாங்கினது. எதையும்
நின்று நிதானமாக ஆற்றோட்டமாக வர்ணித்துச் சொல்வது அவரது வழக்கம். இடத்தைப்
பற்றி என்றாலும், பாத்திரங்களைப் பற்றி என்றாலும், ஒரு நிகழ்ச்சி பற்றி
என்றாலும் ஒரு விவரிப்புப் பாங்கு அவரது நடையில் இடம்பெறும். ‘அந்தப்
பசுக்கள் அந்த வீட்டில் குடியிருக்கும் எந்தக் குடித்தனத்துக்கும்
சொந்தமானவை அல்ல. அதற்கும் இரண்டு வீடுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு
பால்காரனுக்குச் சொந்தமானவை. அந்த வீட்டில்தான் தூண்கள் இருக்கின்றன
என்ற காரணத்தால் பசுக்களைக் கொண்டு அங்கே கட்டிப் போட்டிருந்தான்.
நிரந்தரமாக அந்த இடத்தை அவன் தொழுவாக்கி விட்டான். மழைக் காலத்தில்
பசுக்களை அவிழ்த்து, அதே வீட்டின் குறுகலான வராந்தாவிலேயே ஒன்றன் பின்
ஒன்றாக நிறுத்தி வைப்பான்’ என்று தேவ ஜீவனம்
என்ற கதையில் பிரச்சனைக்குரிய இடத்தை விவரிக்கிறார். ‘இரவு நேரம்; நிலா புறப்பட்டு விட்டது. மாளிகையின் பின்புறத்திலே, ஆம்பல் இதழ் அவிழ்த்த
தடாகத்தின் ஓரத்தில் ஒரு பொன்னூசல். மலர் மாலைகளால் சுற்றப்பட்ட பொற்
கயிறுகளில் இணைத்த பலகை, நவரத்தினங்கள் இழைத்த ஸ்வர்ண பீடமாகத் திகழ்கிறது.
அசைவது தெரியாமல் அசைந்து ஆடும் அந்தப் பொன்னூசலில், இந்த யுகம் கண்ட
தம்பதிகள் ஆடிக் களிக்கிறார்கள்’ என்று திரிவேணி
கதையில் ராமர் சீதை பொன்னூஞ்சல் ஆடுவதை வர்ணிக்கிறார்.
பல இடங்களில் அவரது நடையில் இலக்கியப் போக்கு அமைந்திருக்கும். ‘வீட்டுக்குள்ளே
போகும் போது ரோஜாச் செடியின் குச்சியைப் போல் போனேன். வெளியே வரும்போது
பூத்துக்குலுங்கும் ரோஜாச் செடியாக வந்தேன்’ என்ற கதை வரிகள் இதற்குத்
தக்க சான்றாகும். ‘இன்னும் ‘நான்’ நசியவில்லை ; ‘அவன்’ இன்னும் அவனாகத்தான்
இருக்கிறான். ‘அவன்’, ‘நான்’ ஆகவில்லை. ‘நான்’, ‘அவன்' ஆகவில்லை. கேவலம்
தூல சரீரத்தைக் களைந்துவிட்டால் ஈஸ்வர ஐக்கியம் கிட்டிவிடுமா?” (தவப்பயன்)
என்று சில இடங்களில் இவரது நடையில் தத்துவப் பாங்கு தெரிகிறது.
குழந்தைகளைப் படைத்துக் காட்டும் பொழுது அவர்களுக்கான மொழியைச் சிறு
சிறு உரையாடல் அமைப்பில் அன்பளிப்பு என்ற
கதையில் காட்டுகிறார்.
‘என்ன
புத்தகம் கொண்டு வந்திருக்கிறீர்கள்? என்று
கேட்டார்கள்.
‘ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை !’
‘பொய், பொய், சும்மா சொல்கிறீர்கள் !’
‘நிஜமாக, ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை’
‘நேற்றுப் புத்தகம் கொண்டு வருவதாகச் சொன்னீர்களே !’
‘நேற்றுச் சொன்னேன்...’
‘அப்புறம் ஏன் கொண்டு வரவில்லை?’
‘புத்தகங்கள் ஒன்றும் வரவில்லை. வந்திருந்தால் தான் கொண்டு வந்திருப்பேனே’
|
சூரியனுக்கு
முன்னால் மின்மினிப் பூச்சிகள் பிரகாசிக்குமா?, ‘ஆரமுது உண்ணுதற்கு
ஆசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ?’ - இப்படி உவமை நடை ஆங்காங்கே
காணப்படுகிறது. அவர் மிகச் சில இடங்களில் ஆங்கிலச் சொற்களையும் கையாண்டுள்ளார்.
ஆனால், பொதுவாக இவரது நடையைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அது ஆற்றோட்டமான
நடை. கதை கூறும் பாங்கிற்கு அது மிகவும் துணை சேர்ப்பதாக அமைந்துள்ளது.விவரிப்பு
நடைமுதன்மையாக எடுத்தாளப்பட்டாலும், ஆங்காங்கே பாத்திர உரையாடல்
போக்கையும் அமைத்துக் கொண்டுள்ளார். இன்னும் சிறப்பாகச் சொல்லப் போனால்
இவரது நடை வாசகர்களுக்கு அலுப்புத் தட்டாத விதத்தில் அமைந்துள்ள எளிய
இனிய தமிழ் நடையாகும்.
4.4.3
பட உத்தி
கு.
அழகிரிசாமி தகப்பனும் மகளும் கதையில் இந்தப் பட உத்தி முறையைக் கையாண்டுள்ளார். இது, சிறுகதையைப்
பொறுத்தவரை புதிய உத்தி என்பது குறிப்பிடத் தக்கதாகும். இவருக்கு முன்னும்,
இவருக்குப் பின்னும் இந்த வித்தியாசமான உத்தி முறையை யாரும் கையாண்டதாகத்
தெரியவில்லை.
‘இது
ஒரு சிறுகதை ; கட்டுரையல்ல. கீழே காணப்படுவது, வீடு கட்டுவதற்காகப்
போடப்பட்ட பிளான் அல்ல ; ஆனால் ரயில் வண்டிப் பெட்டி ஒன்றின் உட்புறத்தின்
பிளானாகும்.
பிளானைப்
பார்த்துக் கொண்டீர்களா? இனிமேல் விபரத்தைப் பாருங்கள் :
1. கதாநாயகி உட்கார்ந்திருந்த
இடம்.
2. கதாநாயகியின் தங்கை
உட்கார்ந்திருந்த இடம்.
3. என் நண்பர் கோபாலன்
உட்கார்ந்திருந்த இடம்.
(இவரையும்
என்னையும் கதாநாயகர்களாக்கக் கடும் பிரயாசைப்பட்டார்
கதாநாயகியின் தகப்பனார். ஆனால் நாங்கள் அதற்கெல்லாம் விட்டுக் கொடுப்போமா?
அவரையே கதாநாயகராக்கி விட்டோம். விபரத்தைக்
கதையில் காண்க.)
4, 5, 6, 7 - கதைக்கு
நேரடியான சம்பந்தமில்லாத பேர்வழிகள் உட்கார்ந்திருந்த இடங்கள்.
8. நான் உட்கார்ந்திருந்த
இடம்.
9. கதாநாயகியின் தகப்பனார்
உட்கார்ந்திருந்த இடம். கதாநாயகரும் இவரே.
10, 11, 12, 13, 14
இந்த ஐந்தும் கூடக் கதைக்கு நேரடியான சம்பந்தமில்லாத பேர்வழிகள் உட்கார்ந்திருந்த
இடங்களே.
ஜ,
ஜ இந்த இரண்டு எழுத்துகளும் முறையே ஜன்னல், ஜன்னல் என்ற வார்த்தைகளைக்
குறிக்கும்.
x,
x - கதாநாயகரின் இரண்டு பெட்டிகள்
இதுதான்
விபரம் என்று கதை நடக்கும் களத்தை மிகத் தெளிவாகப் படம் போட்டு விளக்கியுள்ளார்.
கதை முழுவதுமே இந்த இரயில் பெட்டிக்குள் நடந்து முடிந்து விடுகிறது.
இவ்வாறு கதையைக் காட்சிப்படுத்தி வாசகர்களை அக்கதையோடு ஒன்ற வைத்துள்ளார்.
|