5.2 விந்தனின் சிறுகதைகள்

விந்தன் சிறுகதைகள் வாழ்க்கையின் தாக்கத்தால் பிறந்தவைகளே. சாதாரண ஏழைக் குடியானவனையும், ரிக்ஷா வண்டிக்காரனையும், ஆலைத் தொழிலாளியையும், சுமைக் கூலிகளையும், மாதச் சம்பளத்தில் வயிற்றுப்பாட்டுக்கு அல்லாடுபவரையும் கதைப்படுத்தியவர் விந்தன். அவர் சிறுகதைகள் வாசகர்களின் மனத்திலே சென்று நேராகத் தைப்பன; சிந்திக்கத் தூண்டுவன. அவர், மனிதனுக்கு மனிதன் செய்யும் அநீதிகளைத் தம் சிறுகதைகளில் வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளார். அவர் கதைகளைப் படிக்கும் வாசகர்கள் தாங்கள் நினைத்தே பார்த்திடாத சமூக அநீதிகளையும் கொடுமைகளையும் விளங்கிக் கொள்வார்கள்.

5.2.1 கதைக்கரு

விந்தன் ஏழை எளியவர்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளையும், பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் குடும்பச் சிதைவுகளையும், காதல் தோல்விகளையும், தாம்பத்திய முறிவுகளையும், அழிந்து வரும் மனித நேயத்தையும் தம் கதைகளுக்குக் கருவாக்கிக் கொண்டுள்ளார்.

முதல் தேதி என்ற சிறுகதை, மாதச் சம்பளம் வாங்கும் கணேசனின் இழுபறி வாழ்க்கையைப் பேசுகிறது.

“கணேசனுக்கு மாதா மாதம் நூற்றைம்பது ரூபாய் சம்பளம் வந்து கொண்டிருந்தது. அந்தச் சம்பளத்தைக் கொண்டு அவன் எவ்வளவோ சௌகரியமாக வாழலாம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தான். ஆனால் நடைமுறையில் அது அசாத்தியம் என்று தோன்றிற்று. அதற்காக அவன் தன்னுடைய வாழ்க்கைச் செலவை எப்படியெல்லாமோ கட்டுப்படுத்தப் பார்த்தான். ஆனால் அப்படிக் கட்டுப்படுத்திக் கொள்ளும்போது அவன் அடுத்த வீட்டுக்காரரையும், அவரையும் மிஞ்சிய அந்த ‘நாலுபேரையும்’ கொஞ்சம் அனுசரித்தே போக வேண்டியிருந்தது” என்று கணேசனின் பொருளாதார நிலை பற்றிப் பேசுகிறது அக்கதை. அவன் 23ஆம் தேதியிலேயே கையில் காலணா இல்லாது தவிக்கிறான். கணவன் வீட்டிலிருந்து வந்திருக்கும் தங்கையைத் திரும்ப அனுப்ப அவனிடத்தில் பணமில்லை. குழந்தைகள் கேட்கும் சாக்லேட், நோட்டுப் புத்தகம், சைக்கிள் இவைகளை வாங்கித் தரப் பணமில்லை. காப்பிப் பொடி வாங்கப் பணமில்லாததால், 23ஆம் தேதியிலிருந்து 8 நாட்களுக்குக் காப்பி இல்லை. காலையில் காப்பிக்குப் பதில் வெந்நீர்தான். காப்பி பற்றிக் கணேசனும் அவன் மனைவியும் கீழ்க்கண்டவாறு உரையாடுகின்றனர்.
 

“கணவன் வேலை முடித்து வீட்டுக்கு வந்ததும் கதையில் வரும் மனைவி காப்பி கொடுக்கத் தவற மாட்டேன் என்கிறாள், நீ என்னடா வென்றால் .....?”

“கதையில் வரும் மனைவியா கொடுக்கிறாள்? கதாசிரியர் கொடுக்கிறார்! அவருக்கென்ன? காப்பி போட வேண்டுமானால் சர்க்கரை தேவையில்லை, பால் தேவையில்லை, காப்பிப் பொடி தேவையில்லை. கையில் பேனாவும் மேஜையின் மேல் காகிதமும் இருந்தால் எத்தனை ‘கப்’ காப்பி வேண்டுமானாலும் போட்டு விடுவார்! என்னால் அப்படிப் போட முடியுமா?”

வீட்டார் வாழ்வதற்காக, மனத்தளவில் நிமிடத்திற்கு நிமிடம் செத்துக் கொண்டிருக்கும் குடும்பத் தலைவனின் நிலை இக்கதையில் நன்கு சித்திரித்துக் காட்டப்படுகிறது. திடீர் மருத்துவச் செலவு, திருமணமான தங்கைக்குச் செய்த செலவு, கடன் வாங்கியதைத் திருப்பிக் கொடுத்த வகையில் ஏற்பட்ட செலவு இவை போக, மாத வாடகை கொடுத்த பின்பு, வீட்டுச் செலவுக்கு மனைவியிடம் மீதி ஒரு ரூபாயைக் கொடுத்த கணேசன், சாக்லேட் கேட்கும் மகளிடமும், நோட்டுப் புத்தகம் கேட்கும் மகனிடமும் அடுத்த முதல் தேதி வாங்கித் தருகிறேன் என்று கூறிச் சமாளிக்கிறான். கதை முடிவில் “இந்த முதல்தேதி பதிலுக்கு ஒரு முடிவே கிடையாதா?” என்று கேட்கும் மனைவியிடம் கணவன்,

“நம் வாழ்வு முடியும் வரை அதற்கு ஒரு முடிவே கிடையாது!”

என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொல்கிறான். பொருளாதார நலிவின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் ஆசாபாசங்களும், அன்றாடத் தேடல்களும் ஒன்றுமில்லாமல் போய்விட்ட அவலம் இக்கதையில் நன்கு படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. மாதச் சம்பளக்காரனின் பற்றாக்குறை வாழ்க்கையை இந்த அளவு துல்லியமாகப் படைத்துக் காட்டிய தமிழ் எழுத்தாளர்கள் மிகமிகக் குறைந்தவர்களே ஆவர்.

5.2.2 கதை மாந்தர்கள்

விந்தன், தம் கதைகளில் வாழ்வின் மணிமகுடத்தில் இருக்கும் மிராசுதார்களையும், தாசில்தார்களையும், அதிகாரிகளையும் படைக்கவில்லை. அவரது பாத்திரங்கள் மிகச் சாதாரண நிலையிலிருக்கும், அன்றாட வாழ்விற்குப் போராடும் மனிதர்களே ஆவர். அவர்கள் பெரும்பாலும் அப்பாவிகளே! ஆனால், அப்பாவிகளை விட அவர்களைத் தங்கள் சுயநலத்திற்கு இரையாக்கிக் கொள்ளும் வஞ்சகர்களை விந்தன் ஆவேசத்தோடு படம் பிடித்துக் காட்டியுள்ளார். அதாவது, ஏழைகளின்பால் அதிகம் இரக்கத்தை உண்டாக்குவதை விட, மனித மிருகங்கள் மீது வெறுப்பை உண்டாக்குவதில் விந்தன் மிகவும் கவனம் செலுத்துகிறார். நாயோடு போட்டி போட்டுப் பிழைக்கும் சோலையப்பன், மாம்பழம் விற்று வயிறு வளர்க்கும் அம்மாயி, விளக்கெண்ணெய் வியாபாரம் செய்யாத நாடார் கடை மாணிக்கம்பிள்ளை- இவர்களும், இவர்களைப் போன்றவர்களுமே அவருடைய பாத்திரங்கள்.

ஏழைகளின் குற்றம் என்ற கதையில் பணக்காரக் கடை முதலாளி சீதாராமச் செட்டியார், அவரிடத்து மூட்டை தூக்கிப் பிழைக்கும் சின்னசாமி என்று பொருளாதார நிலையில் முரண்பட்ட இரண்டு பாத்திரங்கள் படைத்துக் காட்டப்பட்டுள்ளன.

செட்டியார் சுயநலத்தின் மொத்த உருவமாவார். “செட்டியார் கடைக்கு வந்து இறங்கியதும் அரிசி மூட்டை, சர்க்கரை மூட்டை முதலியவைகளை எல்லாம் சின்னசாமி கடை வாசலிலிருந்து தன் முதுகில் சுமந்து கொண்டு போய்க் கடை உள்ளில் அடுக்குவான். மூட்டைக்குக் காலணா வீதம், எந்தக் காலமாயிருந்தாலும் சரி, அதாவது, யுத்தக் காலமாய் இருந்தாலும் சரி, சமாதானக் காலமாயிருந்தாலும் சரிதான் - எண்ணிக் கொடுத்து விடுவார் செட்டியார். ஆனால், என்றைக்காவது ஒரு நாள் சின்னசாமி அறுபத்து நாலு மூட்டைகளுக்கு மேல் தூக்கி அடுக்கிவிட்டு ஒரு ரூபாய்க்கு மேல் கூலி வாங்க வந்துவிட்டால் செட்டியாரின் கண்களிலிருந்து ஏனோ இரண்டு சொட்டுக் கண்ணீர் கீழே விழும்.

இந்தத் துக்க நிவர்த்திக்காக, அந்தக் கூலியிலிருந்து திருப்பதி தேவஸ்தானத்தின் தர்ம உண்டிக்கென்று செட்டியார் இரண்டணாவைப் பலவந்தமாக எடுத்துக் கொள்வார். “இகலோகத்திலுள்ள தன்னுடன் சமத்துவமாக வாழா விட்டாலும் பரலோகத்திலாவது வாழட்டுமே! என்பது செட்டியாரின் பரந்த நோக்கம்" என்று செட்டியாரின் குணாதிசயங்களைத் தம் சொற்களால் தோலுரித்துக் காட்டியுள்ளார் விந்தன்.

கூலி சின்னசாமி இரவு 10 மணிக்கு வேலை முடித்து வீட்டுக்குக் கிளம்புகிறான். அப்போது செட்டியார், "என்னடா, இத்தனை சீக்கிரம்?" என்கிறார். அதற்கு அவன்,

“இனிமேத்தான் என் கூலியை எடுத்துக்கிட்டுப் போய் ஏதாச்சும் வாங்கிக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கணும். அவ வேற காத்துக்கிட்டுக் கிடப்பா. குழந்தைங்க வேறெ அழுதுக்கிட்டு இருக்கும்!”

“அதற்கு நீ வேலை பார்க்கக் கூடாது; வீட்டிலேயே அடைந்து கிடக்கணும்!”

“கோவிச்சுக்காதீங்க, சாமி ! இன்னும் ஏதாச்சும் வேலையிருந்தாச் சொல்லுங்க, செஞ்சிட்டுப் போறேன்!”. இது சின்னசாமி என்ற அடிமையின் ஒட்டு மொத்தக் குணாதிசயம். இப்படி, சமூக ஏற்றத் தாழ்வுகளை, ஆண்டான் அடிமை என்ற நிலையைத் தம் பாத்திரங்கள் மூலமாகப் படைத்துக் காட்டுகிறார் விந்தன்.

நாளை நம்முடையதே கதையில் வரும் ஏழைச் சிறுமி வறுமையிலும் தன்மானம் உடையவளாகக் காட்டப்படுகிறாள். சுதந்திர தினத்திற்குக் காண்டிராக்டர் கந்தையாவின் வீட்டில் ஏழைகளுக்குக் கஞ்சி வார்க்கப் பட்டது. ஏழைச் சிறுமி ஒருத்தி ஒருதரம் கஞ்சி வாங்கி வைத்துவிட்டு, மற்றொரு காலிப் பாத்திரம் எடுத்துக் கொண்டு திரும்பவும் கஞ்சி வாங்குகிறாள். அதையறிந்து கந்தையா அச்சிறுமியை அடிக்கிறார்.

“ஒரு தரம் வாங்கிக் கொண்டு போன கஞ்சியை எங்கேயோ வைத்துவிட்டு, இன்னொரு தரமா வந்து இங்கே நிற்கிறாய்? போ, அப்படி!” என்று அவளைப் பிடித்து அப்பால் தள்ளினார் அவர். முதலில் வாங்கியது உடல் நலமில்லாமல் படுத்துக் கிடக்கும் தன் அம்மாவிற்கு என்று அச்சிறுமி சொல்ல,

“சீ நாயே! நான் ஏதோ ஓர் இதுக்குக் கஞ்சி வார்த்தால் அம்மாவுக்கு வேண்டுமாம், ஆட்டுக் குட்டிக்கு வேண்டுமாம்! போ, போ போகிறாயா, இல்லையா?” என்று கந்தையா விரட்ட, அச்சிறுமி, தன் அம்மாவை விட்டு விட்டுத் தான்மட்டும் கஞ்சி குடிக்க முடியாது என்று கூற,

“குடிக்கா விட்டால் நீயும் சாவு, உன் அம்மாவும் சாகட்டும்! எனக்கென்ன வந்தது!” என்று கூப்பாடு போடுகிறார். உடனே அச்சிறுமி

“சரி ஐயா! நாங்கள் சாகிறோம்; நீங்கள் வாழுங்கள்!” என்று அதுவரை மறைத்து வைத்திருந்த கஞ்சியை எடுத்து அவருக்கு முன்னாலிருந்த ஏனத்தில் கொட்டி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

ஏழையாக இருந்தாலும் அச்சிறுமியிடம் தன்மான உணர்வு தலைதூக்கி நிற்பதாகக் காட்டுகிறார் விந்தன்.

முதல் கதையில், பெரியவனான சின்னசாமியிடம் இல்லாத துணிவு இக்கதையில் சின்னஞ் சிறுமியிடம் இருப்பதாகக் காட்டுவது, இனிவரும் இளைய தலைமுறையாவது, அடிமை நிலைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போர்க்கொடி தூக்க வேண்டும் என்ற ஆதங்கத்தைக் காட்டுவது ஆகும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. விந்தன் என்ற புனைபெயரைத் தந்தவர் யார்? விடை
2.

விந்தனின் எந்த நூலிற்குத் தமிழ் வளர்ச்சிக் கழகம் பரிசு நல்கியது?

விடை
3. விந்தனின் புகழ் பெற்ற நாவல் எது? விடை
4. விந்தன் தாமே சொந்தமாக நடத்திய இதழின் பெயர் என்ன? விடை
5. விந்தன் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் யாவை? விடை