5.4 விந்தனின் நடை தாம் எழுதுவது வாசகர்களுக்கு நன்கு விளங்க வேண்டும் என்ற நோக்கத்தையே மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நடையே விந்தனின் நடை. அதனால் அவரது நடையில் எளிமை மேலோங்கி நிற்கிறது. புதுமைப் பித்தன் போல இவரும் தேவையான இடங்களில் எள்ளல் நடையைக் கையாண்டுள்ளார். தாம் நினைப்பதை அப்படியே படிப்பவர்கள் மனத்தில் பாய்ச்சும் சக்தி விந்தனின் நடைக்கு உள்ளது. பொருள் விளங்காத சொற்களோ, கடுமையான நடையோ, விந்தனின் எழுத்தில் அறவே காணப்படவில்லை. அவர் வரிக்கு வரி, வாக்கியத்திற்கு வாக்கியம் எதுகை மோனைகளைக் கையாண்டு வாசகர்களைத் திணற அடிப்பதில்லை. அதே சமயத்தில் ‘பேச்சுத் தமிழ்’ என்ற பெயரில் படிக்க முடியாத கொச்சைத் தமிழைக் கையாண்டு தொல்லைப் படுத்துவதுமில்லை. எளிமையான பழகு தமிழ்ச் சொற்களில், சொல்ல வேண்டியதை அப்படியே வாசகர் மனத்தில் பதிய வைத்து விடுகிறார். சுயநலம் என்ற கதையில், சுய தொழில் செய்து பிழைக்கும் வேலப்பனை, “வேலப்பனின் வேலையே அலாதியானது. மனைவி மக்களை மறந்து நாள்தோறும் உயிரற்ற இயந்திரங்களிடமோ, உணர்ச்சியற்ற அதிகாரிகளிடமோ உயிரை விட்டுக் கொண்டிருப்பது அவனுடைய வேலையல்ல; அவன் தொழிலுக்கு அவனே வேலைக்காரன்; அவனே சொந்தக்காரன்.” என்று எளிமையான சொற்களால் அறிமுகம் செய்து வைக்கிறார். அத்துடன் சுய தொழிலின் மேன்மையையும் வாசகர்களுக்கு உணர்த்தி விடுகிறார். சிறுசிறு தொடர்களைப் பயன்படுத்துவதும் விந்தனின் நடைப் பாங்காகும். பத்தினித் தெய்வம் என்ற கதையில் முத்தம்மா என்ற இளம் பெண்ணின் பாத்திரத்தைக் காட்டுகிறார். “துணியைத் துவைத்துப் பிழிந்து தோளில் போட்டுக் கொண்டாள். குளித்து முழுகிக் கூந்தலை விரித்து விட்டுக் கொண்டாள்; குடத்தில் நீரை நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டாள்; குனிந்த தலை நிமிராமல் குளத்தங் கரையிலிருந்து வந்து கொண்டிருந்தாள். குடும்பப் பெண்; குறுகுறுப்பான பார்வை; கண்ணிமைகள் கொட்டும் போது யாரையோ ‘வா, வா’ என்றழைப்பது போலிருந்தது; நகைமுகம்; குழி விழுந்த கன்னங்கள்; நடக்கும் கைவீச்சில் ஒரு கவர்ச்சி; நடையிலே ஒரு சிருங்காரம்; நடுநடுவே தண்ணீர், ‘தொளக், தொளக்’ என்று தளும்பும் சத்தம். அவள் பெயர் முத்தம்மா” சிறு சிறு வாக்கியங்களில் அமைந்த இந்த நடை முத்தம்மாவை அப்படியே நம்முன் காட்சிப் படுத்தி விடுகிறது அல்லவா ! ஒரு சில சமயங்களில் விந்தனின் வருணனை நடையில் இலக்கிய நயம் தோன்றுகிறது. வருணனையும் அவருடைய சமூகப் பார்வைக்கு ஏற்பவே அமைகிறது. “காலைக் கதிரவனின் பொன்னிறக் கிரணங்களிலோ, மாலைக் கதிரவனின் செந்நிறக் கிரணங்களிலோ, அவர்கள் தங்கள் கருத்தைச் செலுத்துவதில்லை. வெண்ணிலவின் தண்ணொளியிலும் அவர்கள் தங்கள் மனத்தைப் பறிகொடுப்பதில்லை; முடிவில்லாத வானத்தில் தவழ்ந்து விளையாடும் மேகக் கூட்டங்களைக் கண்டோ, சுடர்விட்டு ஒளிரும் நட்சத்திரக் குழுவைக் கண்டோ அவர்கள் மகிழ்வதில்லை; வானளாவிய மரங்களும் மலைகளும் அவர்களுடைய கவனத்தைக் கவருவதில்லை; அதிகாலையில் கேட்கும் பட்சி ஜாலங்களின் உதய கீதமும், அர்த்த ராத்திரியில் கேட்கும் ஆந்தையின் அலறலும், ஓயாத ஒழியாத கடல் அலைகளின் பேரிரைச்சலுங்கூட அவர்கள் காதில் விழுவதில்லை”. இயற்கையை மிக அழகாக வருணிக்கிறார் விந்தன். ஆனால் அவர் தம் எழுத்தை அழகுணர்ச்சியின் அடிமையாக ஆக்கிக் கொள்ளவில்லை. ஏழைக்கு - பசிக் கொடுமையால் பரிதவிப்பனுக்குக் கண்ணிலும் கருத்திலும் அழகு எப்படிப் படியும்? இந்த யதார்த்தம் விந்தனை வருத்துகிறது. மனித மனத்தின் இயல்பான அழகுணர்ச்சிக்குக் கூடத் தகுதியற்றுப் போன அடித்தட்டு மக்களை அழகின் ரசிகர்களுக்கு அருகே நிறுத்தி நமக்குக் காட்டும் விந்தனை அழகுணர்ச்சியின் எதிரி என்று நாம் எடுத்துக் கொள்ள மாட்டோம். மாறாக ஏழைக்கு அழகுணர்ச்சியையும் அரிதாக்கிவிட்ட சமூகக் கொடுமையைத்தான் புரிந்து கொள்வோம். விந்தன் மிக அபூர்வமாக அழகு வர்ணனை நடையையும் கையாண்டுள்ளார். “சோ வென்று பெய்து கொண்டிருந்த சித்திரை மாதத்துச் செல்வ மழை அப்பொழுதுதான் விட்டது. மேகத்தின் பின்னால் அதுவரை மறைந்திருந்த ஆதவன். வான வில்லின் வர்ண விசித்திரத்தைக் கண்டு அதிசயித்த தென்றல் காற்று ‘ஜம்’ மென்று மலர்ந்த மலர்களின் ‘கம்’ மென்ற மணத்துடன் கடந்து வந்தது. மழைக்குப் பதுங்கியிருந்த பட்சி ஜாலங்கள் ‘படபட’ வென்று தங்கள் சிறகுகளை அடித்துக் கொண்டு வான வீதியை நோக்கி மேலே கிளம்பிய போது, அவற்றிலிருந்து வைரத்தைப் பழிக்கும் நீர்த்துளிகள் ‘சொட சொட’ வென்று கீழே உதிர்ந்தன. கார் அரசன் தந்த, இந்தக் காட்சியைக் கண்டு பொறாமை கொண்ட காற்றரசன், பொங்கியெழுந்து பூங்கொடிகளைக் குலுக்கிக் கொட்டி, பூமாதேவியையே ‘பூ’ தேவியாக்கிவிட்டான். அந்த அழகில் ஈடுபட்ட ஆனந்தத்தாலோ என்னமோ, தாவர இனங்கள் தலைவிரித்தாடின. அந்த ஆனந்த நடனத்திலிருந்து கிளம்பிய அற்புத கீதம்” என்ற வர்ணனை நடையை முல்லைக் கொடியாள் கதையில் எழுதியுள்ளார். விந்தன், தம் கருத்துகளை வலியுறுத்தப் பல இடங்களில் உவமைகளைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். அவர் கையாளும் உவமைகள் கூட வித்தியாசமானவை. அவற்றிலும் அவருடைய பொருளாதாரப் பார்வை வெளிப்படுகிறது.
இப்படிப்பட்ட வித்தியாசமான உவமைகள் பொருளை விளக்குவதற்கு மட்டுமன்றி விந்தனுடைய கருத்தோட்டத்தைப் புலப்படுத்தவும் பயன் படுகின்றன. வழக்கமாகச் சொல்லப்படும் இலக்கிய நயமுடைய உவமைகளையும் அவர் கையாண்டுள்ளார்.
சில இடங்களில் வேடிக்கையான நிகழ்வைக்
கூட உவமைப்படுத்தியுள்ளார்.
இப்படி உவமைகளை ஆள்வதில், அதிலும் வித்தியாசமான உவமைகளை ஆள்வதில் தமக்கெனத் தனிப்பாணியைக் கொண்டிருக்கிறார் விந்தன். விந்தன்,
ஓரிரு வரிகளில் தாம் உணர்த்த வேண்டியதை உணர்த்தி விடும் திறனுடையவர். மாடும்
மனிதனும் என்ற கதையில் மாணிக்கம் பிள்ளையிடம் அவர் மனைவி,
என்றாள்.
இந்த இரு வரிகளில் கொடூர மனமுடைய மாணிக்கம் பிள்ளையின் பாத்திரத்தை அப்படியே நமக்கு உணர்த்தி விடுகிறார். மொத்தக் கதையின் உயிரோட்டத்தை இந்த இரண்டு வரிகளில் அமைத்துத் தந்து விடுகிறார் விந்தன். கோயில்களில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் மன இயல்பை,
என்று கிண்டலாக விமர்சிக்கிறார். (மன்னன் பெற்ற செல்வம்) யுத்த காலத்தில் பொருட்களை ஒன்றுக்கு இரண்டாக விலை வைத்து விற்றுப் பணக்காரராகிய பீதாம்பர முதலியாரை ஒரே ஒரு சொல்லின் மூலம் நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றார், விந்தன்.
இவ்வரிகளில் ‘யுத்த காலத் தொந்தி’ என்ற சொல் ஒரே வீச்சில் முதலியாரின் குணநலனை விவரிக்கின்றது. தாயிற் சிறந்ததொரு என்ற கதையில், நம் நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் தாய் மொழியை மதிக்காமல், தேவையில்லாமல், ஆங்கிலத்தில் உரையாடுவதை விந்தன் விமர்சிக்கிறார். ‘டூப்ளிகேட் இங்கிலீஷ்காரர்கள்’ என்று அவர்களை அறிமுகம் செய்கிறார். குடை ரிப்பேர் செய்து பிழைக்கும் ஏழை ஒருவனின் வாழ்வை,
என்று மிகக் குறைந்த கூரான சொற்களில் எடுத்துக் காட்டும் திறனை விந்தனிடம் காணலாம். இவ்வாறு விந்தன் நடை தனித்துவம் வாய்ந்த நடையாக அமைந்துள்ளது. உணர்த்த வேண்டியதைப் பெரும்பாலும், ஓரிரு வரிகளில் உணர்த்திவிடும் அவர், சமூகத்தின் மீது ஆத்திரம் அதிகரிக்கும் போது மட்டுமே சற்று அதிகமான சொற்களை எடுத்தாள்கிறார். மனித நேயமற்ற இவ்வுலகை யதார்த்தமாக -எள்ளல் தன்மையுடன் - எளிய மொழியில் வெளிப்படுத்துவதே விந்தன் நடையின் பொதுத் தன்மையாகும். |