1.5 உத்திகள்

சூடாமணி தன் படைப்புகளில் எளிய நடையைக் கையாளுகிறார். பெரும்பாலும் சிறிய சிறிய தொடர்கள், மக்கள் பேச்சு வழக்கு, வாசகர்க்குத் தான் உணர்த்த விரும்புவதை எளிமையாக வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றை இவர் எழுத்தில் காணலாம். வேறுபட்ட புதிய மொழிநடை, சிறுகதைத் தொடக்கம், மற்றும் தலைப்புகளிலேயே கதைப் பொருளைக் குறிப்பாகக் காட்டிவிடும் திறன், சமுதாயத்திற்குக் கொடுக்க வேண்டிய செய்திகளைக் கதைப்போக்கில் காட்டுதல் ஆகியனவற்றை இவர் கையாளும் உத்திகளாகக் காண முடிகிறது. எந்தப் பிரச்சினையையும் பெரிதாக எடுத்துச் சொல்வதில்லை. ஆனால் பிரச்சினைகளுக்குத் தீர்வை எளிமையாகச் சொல்வதை இவ்வாசிரியரின் சிறப்பாகக் கூறலாம்.

1.5.1 கதைத் தொடக்கம்

கதையின் தொடக்கம் படிப்பவர் கவனத்தை ஈர்க்க வேண்டும். இவ்வாறு அமையும் கதைத் தொடக்கம் கதைமாந்தர் உரையாடலில் தொடங்கலாம். கதைமாந்தர் ஒருவரின் மனநிலையைத் தெரிவிப்பதாக இருக்கலாம். கதை நிகழும் இடம், அல்லது காலத்தின் வர்ணனையாக அமையலாம். வாசகரை நேரடியாக விளித்து அவர்களைத் தன் வசப்படுத்தும் உத்தியாகவும் அமையலாம். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோர் இவ்வுத்தியைக் கையாண்டிருப்பதை அவர்கள் சிறுகதைகளில் காணலாம். “பொன்னகரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” இப்படித் தொடங்குகிறது புதுமைப்பித்தனின் பொன்னகரம். இனி, சூடாமணி சிறுகதைகளின் கதைத் தொடக்கங்களைப் பார்ப்போமா.

“பின்னால் காலடியோசை ஒலிப்பது போல் இருந்தது. அவள் துணுக்குற்றாள்; அப்படியே நின்றாள். உற்றுப்பார்த்தாள். பிரமையா” - இப்படி இரவில் நடந்து போகும் ஒரு பெண்ணின் மனநிலையை உணர்த்துவதாகத் தொடங்குகிறது வேலை சிறுகதை. “வலது தோள் மலோக்கு. கருநீல நிறம். கையிரண்டில் வாளி, நீர், துடப்பம்” என்று வேலைக்காரப் பெண்ணின் வர்ணனையில் தொடங்குகிறது விஜயா என்னும் சிறுகதை.

‘மே மாதத் தொடக்கம்’ என்று கோடைக் காலத்தை அறிமுகப்படுத்தும் கோடைக் காலக் குழந்தைகள்.

"சிறகு இல்லாமல் பறக்க முடியுமா? ஒலி இல்லாமல் பாட முடியுமா? நள்ளிரவுக் கருமையை வானில் வண்ணங்களாய்க் காண முடியுமா? இவ்வளவையும் வாணி செய்தாள்" என்று - வாணியின் மகிழ்ச்சியான மனநிலையை வினாக்களாக்கித் தொடங்குகிறது அக்காவின் அறை என்னும் சிறுகதை.

வீம்பு என்னும் கதையில் “அப்பாவை ரேஷன் கடையில் பார்த்ததுமே பகீரென்றது. இளைத்துத் துரும்பாயிருந்தார். நாலே மாதங்களில் இத்தகைய வித்தியாசமா?” என்ற தொடக்கம், ‘அப்பா - மகன் மன வேறுபாடு; பிரிவு ஆனால் உள்ளத்தின் ஆழத்தே பாசம்’ என்று கதையின் உள்ளடக்கத்தையே சுருக்கித் தந்திருக்கிறது, "அக்கா ஒரு அலாதிப் பிரகிருதிதான்." என்று தொடங்கும் சிறுகதை விசாலம். அவளுடைய பாத்திரப் படைப்பை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைக்கு அதையே கதையின் தொடக்கமாக வைத்தது பொருத்தமாக அமைகிறது.

1.5.2 கதை முடிவு

"ஒரு நல்ல சிறுகதை முடியும் போதுதான் ஆரம்பமாகிறது என்றால் அது விசித்திரவாதமாகத் தோன்றும்" என்பார் புதுமைப்பித்தன். "மனத்தில் நிற்கும் கதையின் முடிவு ஒரு சிறந்த சிறுகதையின் அங்கம்" என்பார் இரா.தண்டாயுதம். சூடாமணி சிறுகதைகளின் முடிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை.

ஆசை வழி மனம் செல்ல என்ற கதை விளம்பர மோகத்திற்கு ஒரு பெண் எந்த அளவு அடிமையாகிறாள் என்பதைச் சுவையாகச் சொல்கிறது. சரோ வீட்டு வேலை செய்யும் பெண். அவளுக்கு முறைப்பையனோடு திருமணம் நிச்சயமாகிறது. திருமணம் திடீரென நின்று போகிறது. சரோவின் அம்மாவிடம் வீட்டு எஜமானி காரணம் கேட்கிறாள்.

'சரோஜா முறைப்பையனிடம் டி.வி. விளம்பரத்துல ஒரு அய்யா பெண்ஜாதிகிட்ட தன் ஆசையைக் காட்ட வைர மோதிரம் வாங்கி அந்தம்மா விரல்ல போட்டு விடறாரே அந்த மாதிரி நீயும் எனக்கு வைர மோதிரம் வாங்கிக் குடுத்தாத்தான் ஒன்னைக் கட்டிக்குவேன் என்று சொன்னாளாம்' என்று முடிவடைகிறது. மேலே சொன்ன கதை 5 பக்கங்கள் வரும். இக்கதையின் புதிர் இந்தக் கடைசி வரிகளில் தான் விடுபடுகிறது. இந்த முடிவை வாசகர் ஊகிக்காத வண்ணமும், சரோ என்ன கேட்டதனால் திருமணம் நின்று போயிற்று என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கும் வண்ணமும் கதையைச் சுவையாகச் சொல்வது ஆசிரியரின் சிறப்பு.

1.5.3 மொழிநடை

சூடாமணி எளிமையான மொழிநடையைக் கையாளுகிறார். வேறுபட்ட புதிய மொழிநடையையும் இவர் படைப்பில் காணலாம்.

பெரும்பாலும் சிறிய சிறிய தொடர்கள், மக்கள் பேச்சுவழக்கு, வாசகர்க்குத் தான் உணர்த்த விரும்புவதை எளிமையாக வெளிப்படுத்தும் திறன் இவரிடம் இருப்பதைக் காணலாம். மக்கள் பேச்சு வழக்கைப் பயன்படுத்தும் திறனைக் கீழ்க்காணும் வரியில் காணலாம்.

‘நேரம் விஷம்போல் ஏறிக் கொண்டிருந்தது’ (விட்டுட்டு விட்டுட்டு, பக்.136).

தத்துவம் கூடக் கதைப் போக்கில் எளிமையாகச் சொல்லப்படுவதைப் பாருங்கள்.

‘கவலைதான் எப்படி சுவாரஸ்யப் பேச்சுப் பொருளாகி விடுகிறது, கடந்து போன பிறகு’ (ராசாக்கண்ணு, பக்.153).